நாடாளுமன்றத்தில் மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
புதுடில்லி, டிச.6– “திருப்பரங்குன்றம் பிரச்சினைகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும்” என நாடாளு மன்றத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க முதலில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். தமிழ்நாட்டில் சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல் தூண்டப்படுவதாக மக்களவையில் தி.மு.க.குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார்.
மக்களவையின் நேற்றைய (5.12.2025) அவை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, திருப்ப ரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஒத்திவைப்புத் தீர்மான அறிவிக்கை அளித்தார். தமிழ்நாட்டில் சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல் தூண்டப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு, குறிப்பிட்டார்.
இதேபோல், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணா நிதியும்,திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க அறிவிக்கை வழங்கி னார். மாநிலங்களவையிலும் திருச்சி சிவா ஒத்திவைப்பு அறிவிக்கை கொடுத்தார். இந்த நிலையில், மக்களவை கூடியதும், திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். விவாதம் நடத்த பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
பிற்பகல் 12 மணிக்கு பிறகு அவை மீண்டும் கூடியதும், திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய டி.ஆர்.பாலு, திருப்ப ரங்குன்றத்தில் 1996 மற்றும் 2014 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில்தான் பாரம்பரிய இடத்திலேயே தீபம் ஏற்றப்படுவதாகக் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலர் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் யார் தீபம் ஏற்றுவது என்பதுதான் பிரச்சினை. திருப்பரங்குன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் நிர்வாகத்தினர் தீபம் ஏற்றுவதா? அல்லது கோவில் நிர்வாகத்திற்குச் சம்பந்தமில்லாதவர்கள் தீபம் ஏற்றுவதா?
சிலர் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் நீதிமன்றம் சென்றனர். நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் இந்த ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றியுள்ளது 1996, 2014 இல் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் பாரம்பரியமானஇடத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மதக் கலவரத்தை தூண்டுகின்றனர் என டி.ஆர்.பாலு மேலும் குற்றம்சாட்டினார்.
