தந்தை பெரியாரின் கொள்கைகளைத் திசை எங்கும் பரப்பும் தத்துவத் தலைவர்!
டிசம்பர் 2, 2025 அன்று 93 அகவை காணும் ஆசிரியர் கி.வீரமணி அய்யா, இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் ஓர் உயர்ந்த தலைவராக திகழ்கிறார், தந்தை பெரியாரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் உருவான அவரது 83 ஆண்டு கால பொதுச்சேவை, பகுத்தறிவு, சுயமரியாதை, சமநிலை ஆகியவற்றில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னமாக உள்ளது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராகத் திகழ்ந்தது, இந்தியப் பத்திரிகை வரலாற்றில் இணையில்லாத சாதனை. ‘விடுதலை’ வழியாக அவர் சிந்தனைக் காத்தார், பெரியாரின் கோட்பாடுகளைப் பாதுகாத்தார், சமூகநீதிக்குத் தடையாக நிற்கும் சக்திகளுக்கு எதிராக தைரியமாகப் போராடினார்; தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
அவரின் பங்களிப்பு எழுதுகோலுக்குள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மாற்றிய வரலாற்றுச் சட்ட மற்றும் கொள்கை முன்னேற்றங்களிலும் ஆழமாக பதிந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட ரூ.9,000 வருமான வரம்பை நீக்கச் செய்ததும், 69 சதவிகித ஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கி, அதை அரசியல் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்க ஓய்வு இன்றி செயல்பட்டதும், மண்டல் ஆணையம் அமலாக்கத்திற்காக நாடு முழுவதும் இயக்கத்தை தயாரித்ததும் அவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
93ஆம் வயதிலும் அவர் கிராமம் தோறும், நகரம் தோறும் பயணம் செய்து, இளைஞர்களுக்கு உற்சாகமும், இயக்கத்திற்கு புதிய சக்தியும் வழங்கி வருகிறார். சமத்துவம், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றிற்கான போராட்டத்தில் தலைமுறைகள் பின்பற்றக்கூடிய வாழ்வின் வரைபடமாக அவரது பயணம் திகழ்கிறது.
வாழ்க ஆசிரியர் வீரமணி அய்யா! வாழ்க பல்லாண்டு!! பல்லாண்டு!!!
– கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்,
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு
ஆசிரியர், கல்வியாளர், போராளி, வாசிப்பாளர்!

எண்ணற்ற நூல்களின் – நூலாசிரியர் ஆசிரியர் கி. வீரமணி. பெரியார் உரைகளைத் தலைப்பு வாரியாக பல தொகுதிகளாக வெளியிட்டுள்ள – தொகுப்பாசிரியர். விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்) முதலிய இதழ்களின் – பத்திரிகை ஆசிரியர்.
பெரியாரின் கல்விப் பணியை விரிவுபடுத்திய கல்வி வேந்தர் ஆசிரியர் வீரமணி. இவை எல்லா வற்றிலும் பெண் கல்விக்கு முன்னு ரிமை அளிப்பவர். தமிழர் மட்டும் அல்ல; இந்தியா முழுதும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக நீதி மறுக்கப்பட்டோருக்காகத் தொடர்ந்து போராடி வருபவர்.
‘எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூகத்தின் பல அடுக்களில் சிந்த னையால் வினையாற் றுபவர்கள்… அவர்கள் முற்போக்குச் சிந்தனை யோடு செயல்படுவது அவசியம்,’ என்பதை வலியுறுத்தி வருபவர். புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளை அவர் உச்சரிக்கும் போது அந்த கவிதைகளின் முழு அர்த்தமும் அதில் ஒலிக்கும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் எண்பதாம் பிறந்த நாள் விழாவில் கலை ஞரோடு கலந்து கொண்டு கவிக்கோ கவிதைகளை பற்றி அழகாகப் பேசினார். அண்மையில் மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இல்லம் தேடிச் சென்று மரியாதை செய்தார். தொடர் வாசிப்பாளர்.
எழுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராகப், பேச்சாளராகக், கல்வியாளராகத் திராவிடர் கழகத் தலைவராகப் பொதுவாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்து ஓய்வின்றி உழைக்கும் போராளி. 93 வயதிலும் இளமையோடு செயல்படும் திறனால் முன்மாதிரியாக வாழ்பவர்.
தான் வாழும் காலத்தைத் தன் சிந்தனையால் அசைத்து வரும்
‘தகைசால் தமிழர்’,
ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் இந்தத் 93-ஆம் பிறந்த நாளில் பல்லாண்டு வாழ்க, உங்கள் சமூகப் பணி இடையறாது தொடர்க என்று அவரை வணங்கி வாழ்த்துகிறேன்.
– பிருந்தா சாரதி
திரைப்பட இயக்குநர்
