வாழ்வார் ஆசிரியர் நீடு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்களிலும் சிறப்புடன் நடைபெற்றது.

எந்தச் சூழலில் அந்த விழா!

வானிலை அறிக்கை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. கன மழையோடு, புயலும் சீறிக் கொண்டு வீசும் என்ற ஒரு நிலையில் ‘இரு நாள் விழாவை எப்படி நடத்தப் போகிறோம்’ என்று அச்சம் முதல் நாள் வரை! எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன; ‘எது வந்தாலும் எதிர் கொள்வோம்’ என்ற உறுதியில் ‘நடத்தியே தீர்வது’ என்ற மன உறுதிதான் இவ்விழா நடத்தப்பட்டதன் பின்னணியாகும்.

எதிர்பார்த்தபடியே இரண்டு நாள்களிலும் விடாத மழைக் காடுதான். ‘அடாது மழை பொழிந்தாலும் விடாது நடைபெறும்’ என்று கடந்த காலத்தில் ஒரு சொலவடை உண்டு!

அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

வெளியூர்த் தோழர்கள் பயணித்து வருவதில் சிரமம்! உள்ளூர்த் தோழர்களும் குடும்பத்தோடு பங்கேற்க இயலாத நிலை! என்றாலும் ‘நமது தலைவரின் பிறந்த நாள் விழா – எப்படியும் கலந்து கொண்டே தீருவது’ என்ற முனைப்பால் தோழர்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அடைமழையாக வந்ததுதான் ஆச்சரியம்!

வேடிக்கை, விளையாட்டு நிகழ்ச்சியல்ல…! 93 வயதில் 83 ஆண்டுப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரின் விழாவாயிற்றே!

தந்தை பெரியார் என்ற மேருமலை சாய்ந்த நிலையில் இந்த இயக்கம் இருக்குமா – செயல்படுமா? என்ற கேள்வி பொதுவாக எழுந்தால், அதை ஒரு தவறான வினாவாகக் கருத வேண்டியதில்லை.

‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்ற புரட்சிக் கவிஞரின் படப்பிடிப்பு சாதாரணமானதல்ல!

மதவாதப் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஒரு சமுதாயத்தில் எதிர்ப்பு எரிமலைகள், என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே சிறுபிள்ளைத்தனமாக சினந்து எழுந்த அச்சுறுத்தல்கள், ஆபாசப் பேச்சுகள், முரட்டுத்தனமான முட்டுக் கட்டைகள், இருட்டடிப்புகள் என்ற சூழ்நிலையில் சண்டமாருதம் செய்தவர் தந்தை பெரியார்!

பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! போராட்டம்! போராட்டம்!! போராட்டம்!!! சிறை வாசம்! சிறைவாசம்!! சிறைவாசம்!!!

இருமுனைக் கடிகார முள் ஓடுவது போல சுழன்று சுழன்று பயணித்த தந்தை பெரியாரின் பொதுத் தொண்டு என்ற முறையில் மண்ணை மணந்த மணாளராக, முட்டுக்கட்டைகள் மத்தியில் தன் பொது வாழ்வின் அறத்தில் வெற்றிக் கொடி நாட்டிய ஒரு பெரும் தலைவர் தந்தை பெரியார்!

எதிர்த்தவர்கள் மத்தியிலும் எண்ணங்களில் மாற்றம், தந்தை பெரியார் உரை நிகழ்த்தியபோது உபத்திரவங்களைச் செய்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர்கள் மத்தியில், உலகத் தலைவர் தந்தை பெரியாரின் கூற்றில் உண்மை இருக்கத்தானே செய்கிறது என்று உணரும் தன்மை, கல் கொண்டு வீசியவர்கள் காசு கொடுத்து மாலை வாங்கிக் கொண்டு தந்தை பெரியாரின் கழுத்து வலிக்க சூட்டிய வினோதம், தங்களின் ஆசை தீரும் வண்ணம் என்னென்ன பொருள்களைக் கொடுக்க முடியுமோ அவற்றை எல்லாம் கொண்டு வந்து துலாபாரம் கொடுத்த அதிசயம் எல்லாமே நடந்தது!

தனது காலத் தொடக்கத்தில் தொடரப்பட்ட தாக்குதல்களையும், வன்முறைகளையும் சந்தித்த அந்தத் தலைவர், தலைகீழாக மாறிய மக்களின் சிந்தனை ஓட்டத்தையும் கண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்.

தன் கொள்கையின் வெற்றி நடனத்தைத் தன் வாழ் நாளிலேயே கண்ட தனிப் பெரும் தலைவராக, மக்கள் மனதில் ஒரு போதும் நீங்காத மக்கள் தலைவராக, தந்தையாக தந்தை பெரியார் உலா வந்தவராயிற்றே!

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்றிருந்த துயர நிலையைத் துடைத்தெறிந்த – தொண்டு செய்து பழுத்த பழமாயிற்றே!

அத்தகைய, யாரையும் உவமைப்படுத்த முடியாத அந்த மாபெரும் தலைவர் ஒரு நாள் கண் மூடினார்! வானமே இருண்டது; மண்ணெல்லாம் துயர வெள்ளம் கரை புரண்டது! மக்கள் மனமெல்லாம் மருட்சி!

இந்தச் சூழலில் தான் அந்த மாபெரும் இயக்கத்தை எடுத்து நடத்தும் மாபெரும் கடமையும் பொறுப்பும் அன்னை மணியம்மையார் தலைமையில் விழுந்தது!

‘எப்படி சமாளிப்பார்?’ என்று எண்ணியோரையெல்லாம் வியப்பில் ஆழ்த்தினார் அன்னை மணியம்மையார்.

‘நெருக்கடி நிலை’ என்ற நெருப்பாற்றை நீந்தினார்! ‘வருமான வரி’ என்ற பெயரால் வருவாய் வாய்க்கால் பாசனத்தை வழிமறித்து தடுப்பரண்களை ஏற்படுத்தினர்.

இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் ‘மிசா’ சட்டத்தின்கீழ் சிறையில்! தமிழர்களின் விடிவெள்ளியாம் ‘விடுதலை’ ஏட்டுக்குத் தணிக்கை!

கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டிய நிலையில் நிதி நெருக்கடி! இவற்றை எல்லாம் ஊதித் தள்ளி, உருக்கு மலையாக எழுந்து நின்று இயக்கத்தையும், இலட்சியப் பயணங்களையும் எழுச்சியுடன் நடத்திக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.

‘இராவண லீலா’ நடத்தி இந்திரா காந்தியையே மலைக்க வைத்தார்! அவரின் அய்ந்தாண்டுத் தலைமை, அய்யா இல்லாத குறையை அகற்றிக் காட்டியது.

அன்னையார் மறைந்த நிலையில், 45 வயது நிறைந்த நம் அருமைத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள், கடந்த 47 ஆண்டுகளில் ஆற்றிய பணியை அளவிட முடியாது – அளவிடற்கரியது!

இயக்கக் கட்டுமானத்தை உறுதிபடுத்தினார். இளைஞர்களை இயக்கத்தில் ஈர்க்க – கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு அணிகளை உருவாக்கி உற்சாகப்படுத்தி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.

வெளியீடுகளை வேகப்படுத்தினார் – ‘விடுதலை’ ஏட்டிலே மாற்றம் செய்தார். நான்கு பக்க ‘விடுதலை’ ஏடு எட்டுப் பக்க வண்ண ஏடாக, எழில் கூட்டினார். சென்னை மட்டுமல்லாமல், திருச்சியிலும் இன்னொரு பதிப்பைக் கொண்டு வந்தார். அச்சு இயந்திரங்களை நவீனப்படுத்தினார்!

பிரச்சாரப் பீரங்கியை நாடெங்கும் முழங்கச் செய்தார். எதிரிகள் ஏவும் பாணங்களை முனை மழுங்கச் செய்தார்.

தந்தை பெரியார் காலத்தில் ஒட்டு மொத்தமாக 49 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீட்டை 69 விழுக்காடாக உயர்வதற்கு தன் ‘உதிரத்தை‘க் கொடுத்து உழைத்து நிலை நாட்டினார்.

கல்வி நிறுவனங்களை மளமளவென்று பெருக்கி மலைக்க வைத்தார். தந்தை பெரியாரை உலகமயமாக்கிய ஒப்பற்றப் பணியில் நாளும் வெற்றி பெற்று வருகின்றார்.

பெரியார் பன்னாட்டமைப்பை ஏற்படுத்தி, ‘ஈரோட்டுச் சிங்கத்தின் சிந்தனை வெளிச்சத்தை’ப் பன்னாடுகளிலும் பரவும் வகை செய்தார்.

27 ஏக்கர் நிலப்பரப்பில் ‘பெரியார் உலகம்’ ஒன்றை உருவாக்கிடும் –  எதிர் கால தலைமுறை களுக்கும், தந்தை பெரியார் யார்? என்பதை உணர வைக்கும் மிகப் பெரிய பணியைத் தலையில் சுமந்து, அதே வேலையில் ஓடி ஓடி மூழ்கிக் கிடக்கிறார்.

இவ்வளவுக்கும் அவர் உடம்பில் மருத்துவக் கத்தி படாத இடம் இல்லை என்ற நிலைதான்.

எடுத்ததை முடிப்பதில் அவருக்கு ஈடு இணையில்லை. அரசியல் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் கலங்கரை விளக்கமாக இருக்கிறார். ‘எங்கள் பயணத்தை நிர்ணயிப்பது பெரியார் திடலே – ஆசிரியர் அய்யா அவர்களே’ என்று ஆட்சியில் இருக்கும்  தலைவர் கூறும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் நிலையில் ஒளி பாய்ச்சி நிற்பவர் நமது ஒப்பற்றத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்!

அத்தகைய தலைவரின் பிறந்த நாளில் கலந்து கொள்ள, ‘மழை என்ன, புயலென்ன, பூகம்பம் என்ன, புறப்பட்டே தீருவோம்!’ என்று கூடிய கருஞ்சட்டைத் தோழர்களின் எண்ணமும், எழுச்சியும் தான் என்னே! என்னே!!

‘என் இறுதி மூச்சு இருக்கும் வரை அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வேன், வெற்றி பெறுவேன்’ என்று வைராக்கியத்தோடு 93 வயது தலைவர் நேற்று (2.12.2025) நிறைவுரையில் பிரகடனப்படுத்தினார்!

இன்னும் இரட்டிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் எம் தோழர்கள் என்பதில் அட்டியென்ன!

வாழ்க பெரியார்!

வாழ்க ஆசிரியர் ஆயுள்!!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *