சுயமரியாதைநாள் டிசம்பர் 2.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா.
சென்னை, பெரியார் திடலில் அதிகாலைப் பொழுதிலேயே சுறுசுறுப்பும் மகிழ்ச்சிப் பெருக்கும் தொற்றிக் கொண்டது.
சென்னையைக் குளிரடித்த மழை தன் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் வித்தை காட்டிக்கொண்டிருந்தது.
தோழர்கள் குடும்பம் குடும்பமாய் குவிந்தார்கள்.
தோழமையுடன் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழர் தலைவரின் வாகனம் காலை 11 மணிக்கு திடலுக்குள் நுழைந்தது.
தோழர்கள் குழுமியிருந்து வாழ்த்து முழக்கங்களுடன் வரவேற்றனர். தொண்டர்கள் தந்த மரியாதையை கரம் குவித்து புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டே, இராதா மன்றம் நோக்கி நடந்தார். இருபுறமும் திரும்பித் திரும்பி நலம் விசாரித்தார். மேடையேறினார். பொன்னாடை அணிவிக்கவும், பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவும், ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கவும் தோழர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தலைவர் முதுமையை மறந்தார். தொண்டர்கள் சந்திப்பில் உற்சாகமானார். ஒவ்வொருவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார். தொண்டர்களுக்குத் தொலைதூரப் பயணக் களைப்பு தொலைந்தது. அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள், வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் எனப் பலரும் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மகிழ்ச்சி பொங்கித் ததும்பிய இனிய வேளையில் முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையேறினார். பொன்னாடை அணிவிப்பில் அடக்கம் குடி கொண்டிருந்தது. பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் உடல் மொழியில் பணிவு நிறைந்திருந்தது. முதுமையும் இளமையும் அணைத்துக் கொண்டதில் பாசம் ததும்பியது. விழா நாயகர் ஆசிரியர் அய்யா அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பொன்னாடை அணிவிக்க முற்பட்டார். சிரம் தாழ்த்தி பணிவு பொங்க உதயநிதி குனிந்தபோது, நிமிர்ந்து நிற்கச் சொல்லி பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஊடகவியலாளர்கள் விதவிதமாக படம் எடுத்தார்கள்.
துணை முதலைமைச்சர் உதயநிதி கொள்கை முழக்கம் செய்தார்.
- ஆசிரியர் அய்யா அவர்களை திராவிட இயக்கத்தின் திசைகாட்டி என்றார்.
- பெரியார் திடலுக்கும் தமக்கும் உள்ள தொடர்பை விளக்கினார்.
- தம்மைத் தந்தை பெரியாரின் கொள்கைப் பெயரன் என்றார்.
- கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்த உதயநிதி, 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு வயதிலேயே கருப்புச்சட்டை அணிந்திருந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
- கலைஞர் வழியில், முதலமைச்சர் வழியில், நான் மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் என்று பெருமையாக உரத்துக் கூறினார்.
- அரசியலை விடுத்து சமூகப் பணியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தைப் பாராட்டினார்.
- பெரியாரின் கொள்கை உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
- தந்தை பெரியார் இருந்தால் நம்மையெல்லாம் எப்படி வழி நடத்துவாரோ அந்த இடத்தில் ஆசிரியர் அய்யா அவர்கள் இருந்து கொண்டு நம்மையெல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் என்று மனம் திறந்து பேசினார்.
- தினமும் ‘ விடுதலை ‘ படித்துவிட்டு ‘முரசொலி ‘ படிப்பதாக கூறினார்.
- ஆசிரியர் அய்யா அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து வந்ததையும், முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பவள விழா நடைபெற்றதையும் சுட்டிக்காட்டினார்.
- ‘ மிசா ‘ கைதியாக சிறையில் இருந்தார் ஆசிரியர். மு.க. ஸ்டாலின் சிறையில் தள்ளப்பட்ட போது தாங்கிய கரங்கள் ஆசிரியர் அய்யாவின் கரங்கள் என்று கூறியபோது நன்றி உணர்ச்சி சொற்களில் மிதந்தது.
- ஆசிரியர் அய்யா அவர்களின் சுற்றுப்பயணங்களைப் பட்டியலிட்டு வியந்தார்.
- பாசிச பாம்புகள் தம்மைத் தீண்டுவதையும், பெரியார் திடல் மூலிகை தேவைப்படுவதையும் உரைத்த போது கண்ணில் தெரிந்தார் கலைஞர்.
- பெரியார் உலகத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சார்பாக ரூபாய் பத்து லட்சத்தை அளித்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஆர்வமுடன் விழாவில் கலந்து கொண்டார். மகிழ்ச்சியான மனநிலை அவருடைய கண்களில் வெளிப்பட்டது. அவருடைய உரை இயல்பாக அமைந்திருந்தது; அதில் கொள்கை மிளிர்ந்தது.

தமிழர் தலைவர் மேடையில் நன்றி தெரிவித்துப் பேசினார்.
- புயல் வரும் என்றார்கள்; அதற்குப் பதிலாக கொள்கைச் சூறாவளி வந்திருக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை பொருத்தமாக உரைத்தார்.
- உதயநிதியை தி.மு.க. இளைஞரணியின் போர்ப்படை தளபதி என்றார்; கொள்கைப் பெயரன் என்றார்.
- உதயநிதி நடத்திய கொள்கைத் திருவிழாவை, பாசறையை வெகுவாகப் பாராட்டினார்.
- ‘பீரங்கி வயிற்றிலே துப்பாக்கி பிறந்தது’ என்ற பழ மொழியைச் சற்று மாற்றி, பீரங்கி வயிற்றிலே ‘சுயமரியாதை அணுகுண்டு’ என்று அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்.
- காலையில் முதலமைச்சரிடம், திடலுக்கு இளம் தலைவர் வருகிறார் என்று சொன்னபோது அவரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் சொன்னதை மகிழ்ச்சி ததும்ப எடுத்துரைத்தார்.
- தி.மு.க.இளைஞரணி சார்பாக உதயநிதி ரூபாய் 10 லட்சம் வழங்கியதை லட்சங்களை விட லட்சியம் பெரிது; இது கரும்பு தின்னக் கூலி என்றார்.
- உதயநிதி என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து நிகழ்ச்சிக்கு உதயமாகி இருப்பதையும், நிதி கொடுத்திருப்பதையும் பொருத்தமாக இணைத்து உரைத்தேபோது, அரங்கத்தில் மகிழ்ச்சிப் பிரவாகம்.
- தந்தை பெரியாருடைய அறிவுச் சுடரை எவரும் கவர்ந்து போக விடாமல், அந்தச் சுடரை பத்திரமாக இளைஞர் ஒருவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கின்ற விழா 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா என்றார்.
- மின்மினிப் பூச்சிகளால் மின்சாரத்தை தடுத்துவிட முடியாது என்று எதிரிகளுக்கு கவித்துவமாய் பதில் சொன்னார்.
- பெரியாரின் தோள் மீது அண்ணா; அண்ணாவின் தோள் மீது கலைஞர்; கலைஞரின் தோள்மீது மு.க.ஸ்டாலின்; மு. க. ஸ்டாலின் தோள் மீது உதயநிதி எல்லோரையும் தாங்கும் தந்தை பெரியார் என்றார்.

தலைவரிடம் விடைபெற்று புறப்பட்டார் துணை முதலமைச்சர். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார். தொண்டர்கள் கூட்டம் தலைவரை மீண்டும் சூழ்ந்தது. முதுமைக் களைப்பை மீறி நண்பகல் 2 மணி வரை வாழ்த்துகளை ஏற்றார் தமிழர் தலைவர்.
விழா மண்டபத்தில் சுவை நிறைந்த மதிய விருந்து. சுறுசுறுப்பாய் பரிமாறினார்கள்; தோழர்கள் ரசித்து உண்டார்கள்.
சிந்தனையைத் தூண்டிய பட்டிமன்றம்
பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கியது பட்டிமன்றம். நடுவர் பொறுப்பேற்றிருந்தார் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி. “நாட்டில் தற்போது நடப்பது – சமுதாயப் போராட்டமே! அரசியல் போராட்டமே!” என்பது தலைப்பு. சமுதாயப் போராட்டமே! என்ற அணியில் வழக்குரைஞர் பூவை புலிகேசியம், நாகை மு.இளமாறனும் வாதங்களை முன் வைத்தார்கள். அரசியல் போராட்டமே! என்ற அணியில் இராம.அன்பழகனும், காரமடை இரா.அன்புமதியும் கருத்து களை வழங்கினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்தில் நாட்டில் தற்போது நடப்பது அரசியல் போராட்டம்தான்; அதன் இலக்கு சமுதாயப் போராட்டத்தில் வெல்வது தான் என்று தீர்ப்பு வழங் கினார்.
கருத்தரங்கத்தில உரையாற்றிய 10 வயது சிறுவன் சித்தார்த்தனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
புத்துணர்ச்சி பாய்ச்சிய கவியரங்கம்
அரங்கத்தில் புத்துணர்ச் சியைப் பாய்ச்சியது ஒரு மணி நேரம் நடைபெற்ற கவியரங்கம்.
“ஊர் நடுப் பழ மரம் – தகைசால் தமிழர் தலைவர் “
என்பது தலைப்பு.
கவிச்சுடர் கவிதைப் பித்தன் கவி மழை பொழிந்தார்.
தமிழர் தலைவரின் சிறப்புகளைத் தேன் தமிழ் சொல்லெடுத்து கவிதையில் வடித்தார்கள்,
பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்,
பாவலர் சுப.முருகானந்தம்,
கவிஞர் வீ.ம.இளங்கோவன்,
கவிஞர் ம. கவிதா,
கவிஞர் பெரு. இளங்கோ.
மாலைநேர எழுச்சியரங்கம்
மாலை நேரத்தில் “தலைமுறை இடைவெளி இன்றி…” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்,
திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,
ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்,
ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி,
பெரியார் பிஞ்சு க.சித்தார்த்
ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை பல்வேறு கோணங்களில் சொல்லோவியம் தீட்டிக்காட்டினார்கள்.
தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவின் நிறைவு நிகழ்ச்சி நூல் வெளியீட்டு அரங்கமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார்.
‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை!?’
நூலினைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும்,
‘வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி -19’நூலினை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே. ராஜன் அவர்களும் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்கள்.
வாழ்த்துரை வழங்கினார் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.
இலக்கியத்தில் சிகரம் தொட்டவர் கவிப்பேரரசு வைரமுத்து. ஆசிரியர் அய்யா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நிகழ்த்திய உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.
- ஆசிரியர் அய்யாவைக் கொண்டாடினார்.
- வைரமுத்து தமிழ் – ஆற்றல்மிக்கது; எல்லோராலும் விரும்பப்படுவது.
- ஆழமான கருத்துகளை இனிய தமிழில் அருவியெனக் கொட்டினார்.
- அவருடைய சொல்லாற்றல் அரங்கத்தைக் கட்டிப் போட்டது.
- தமிழர் தலைவரின் ஆற்றலைப் பட்டியலிட்டார்.
- செயல் திறனை வியந்தார்.
- நினைவுத்திறனைக் குறிப்பிட்டார்.
- பெரியாரின் வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் வீரமணி என்றார்.


கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை அரங்கத்தில் உற்சாக அலையை உருவாக்கியது; எழுச்சியை ஏற்படுத்தியது.
தமிழர் தலைவரின் நிறைவுரை உணர்ச்சிமயமானது.
மகிழ்ச்சி தொடரும்….

