இந்திய அரசியலில் ‘பகவத் கீதை’ ஒரு முக்கியப் பேசுபொருளாகி வரும் சூழலில், திராவிட இயக்கத்தின் கருத்தியல் கோட்டையான கோபாலபுரத்தில் ஆசிரியரின் நூல் ஒன்று முத்திரை பதித்தது.
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தலைவர்கள் கையில் கொடுக்கும் புத்தகம் பகவத் கீதைதானாம், இதை நிதின் கட்கரி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். எத்தனை தலைவர்கள் அதைப் படித்தனர் என்று தெரியவில்லை.,
ஈரோட்டுச் சூரியரின் முதன்மை மாணவரான கலைஞரைச் சந்திக்க, ஹிந்துமுன்னணித் தலைவர் இராம. கோபாலன் வருகை தந்தார்.
சந்திப்பு நடந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இல்லை பழுத்த ஆத்திகரான பெரியாரின் மாணக்கனை ஸநாதனக் கொள்கைகளில் தீவிர நம்பிக்கை கொண்ட இராம. கோபாலன் நேரில் சந்திக்க வருகிறார் என்ற செய்தி, தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
“கலைஞர் யாரால் தயார் பண்ணப் பட்டவர்? கலைஞர் படித்த பள்ளிக்கூடம் ஈரோட்டுப் பள்ளிக்கூடம்!” தங்கள் தலைவரின் ஆசானைப் பற்றியும், அவர் பயின்ற பகுத்தறிவுப் பள்ளியைப்பற்றியும் நினைவூட்டி, தொண்டர்களை அமைதிப் படுத்தினார் கலைஞர். “ஒன்றும் இல்லை, நீங்கள் பேசாமல் இருங்கள். நான் சந்தித்துக் கொள்கிறேன்,” என்று தனது பாணியில் உறுதி அளித்தார்.
இராம. கோபாலன் கலைஞரைச் சந்தித்த போது, இந்து மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் ”பகவத் கீதை” புத்தகத்தைக் கலைஞருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இராம. கோபாலனின் நோக்கம், கீதையின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுவதா கவோ அல்லது அதன் மூலம் ஒரு கருத்தியல் விவாதத்தைத் தொடங்க திட்ட மிட்டிருந்தார்.
ஆனால், அன்றும் இன்றும் தங்கள் கொள்கைகளில் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கும் கலைஞரைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. அண்ணாவின் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” கோட்பாட்டையும், பெரியாரின் பகுத்தறிவு முத்திரையையும் சுமந்த கலைஞர், இராம. கோபாலனுக்கு ஒரு ”’ரிடர்ன் கிஃப்ட்” கொடுக்கத் தயாரானார்.
கலைஞர் தனது உதவியாளரிடம் இருந்து ஒரு நூலை வாங்கி, அதனை இராம. கோபாலன் கையில் கொடுத்து, இந் தாருங்கள், பிடியுங்கள் என்று சொன்னார். அது வேறு எந்த நூலும் அல்ல…
அது, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் அடியொற்றி, ‘ஆசிரியர்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட கி.வீரமணி அவர்களின், கீதையின் மறுபக்கம்” என்ற புத்தகம்!
இராம. கோபாலன் இந்த எதிர்பாராத பரிசைப் பெற்றபோது, அவர் கொடுத்த கீதை இரண்டாம் இடத்திற்குச் சென்று விட்டது. பகவத் கீதையின் தத்துவார்த்த, சமூகவியல் மற்றும் அரசியல் விமர்சனங் களை மிகக் கடுமையாக முன்வைத்த “கீதையின் மறுபக்கம்” என்ற நூலைக் கலைஞரிடமிருந்து பெற்றது இராம. கோபாலனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு திராவிட இயக்கத் தலைவர், தன்னுடைய ஆத்திக எதிர்ப்பாளருக்கு, ஆசிரியரின் பகுத்தறிவு நூலையே ‘ரிடர்ன் கிஃப்ட்டாக’க் கொடுத்த இந்த நிகழ்வு, ஆசிரியர் என்றென்றும் எக்கணத்திலும் எதிராளியின் ஈட்டிமுனை மழுங்கும் பலமான கேடயமாக திகழ்ந்தார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
– சரவணா இராசேந்திரன்
