தந்தை பெரியாருடைய அறிவுச் சுடரை எவரும் கவர்ந்து போக விடாமல், அந்தச் சுடரைப் பத்திரமாக, இளைஞர் ஒருவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கின்ற விழா – என்னுடைய 93 ஆவது பிறந்த நாள் விழா! இளைஞர்களுக்கு வழிகாட்டும் கொள்கைச் சிங்கமான உதயநிதி ஸ்டாலினிடம் பெரியாரின் சுடரை ஒப்படைத்துவிட்டோம்!

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, டிச.2 – இங்கே இருக்கின்ற தந்தை பெரியா ருடைய அறிவுச் சுடரை எவரும் கவர்ந்து போக விடாமல், அந்தச் சுடரைப் பத்திரமாக, இளைஞர், ஒருவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கின்ற விழாவாகத்தான்      இவ்விழாவைக் கருதுகின்றோம்; பெரியாரின் சுடரை, இந்த இளைஞரிடம், இளைஞர்களுக்கு வழிகாட்டும் இளைஞரிடம், இந்தக் கொள்கைச் சிங்கத்திடம் ஒப்படைக்கின்ற நாள்தான், இந்த 93 ஆவது பிறந்த நாள் விழா! அவரிடம் நாங்கள்  ஒப்படைத்துவிட்டோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் இன்று (2.12.2025) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் 93 ஆவது பிறந்த நாள் விழாவில் தோழர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவில் நன்றியுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

அவரது உரை வருமாறு:

‘‘கடும் புயல் வரும், அடர் மழை தொடரும் என்றெல்லாம் சொன்னார்கள். இங்கே புயல் வரவில்லை; கொள்கை சூறாவளி இங்கே வந்திருக்கின்றது’’ என்ற மகிழ்ச்சியோடு, வெளியே இருந்த இயற்கையையும் தோற்கடிக்கக்கூடிய அறிவாற்றல் உள்ளவன்தான் சுயமரியாதைக்காரன் என்பதற்கு அடையாளமாக எனது பிறந்த நாள் விழா என்ற பெயரால் நடைபெறுகின்ற விழாவில் எல்லையற்ற மகிழ்ச்சியை நான் பெறுகிறேன்.

எங்கள் கொள்கைப் பெயரன்
அருமை உதயநிதி!

நம்முடைய பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற இளைஞரணி என்ற அந்தப் புதிய போர்ப் படைத் தயாராக இருக்கின்றது. அந்தப் போர்ப் படையினுடைய தளபதியாக இருக்கக்கூடியவர் நம்முடைய துணை முதலமைச்சர் என்பது இரண்டாவது. இது பதவி, பொறுப்பு. ஆனால், அதைவிட கொள்கை ரீதியாக நாங்கள் பார்ப்பது, ஓர் அறிவுத் திருவிழாவை நடத்தி, ஒரு பாசறையை உருவாக்கி இருக்கக்கூடிய எங்கள் அன்பிற்கும், நிரந்தர பாராட்டுதலுக்கும், நிரந்தர வாழ்த்துதலுக்கும் உரிய எங்கள் கொள்கைப் பெயரன் அருமை உதயநிதி அவர்களே!

எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! எனக்கு எந்த ஆண்டும் கிடைக்காத ஒரு பெரு மகிழ்ச்சி, இந்த ஆண்டு கிடைத்திருக்கின்றது.

அது என்னவென்று சொன்னால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தார்கள்.

அந்த அதிர்ச்சிதான், திருச்சி சிறுகனூரில் அமைய விருக்கின்ற பெரியார் உலகத்திற்கு மிக முக்கியமாக, தெளிவாக, ஒரு பெரிய வாய்ப்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் (தி.மு.க.), அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தி.மு.க.) அனைவரும், ஒரு மாத ஊதியமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயைத் தயாரித்துக் கொடுக்கிறோம் என்று சொன்னார். ஆனால், அதைவிட கூடுதலாகவே தயாரித்துக் கொடுத்தார்.

10 லட்சம் ரூபாயை பெரியார் உலகத்திற்காகக் கொடுத்திருக்கின்றார்!

அதிலேயும், நம்முடைய துணை முதலமைச்சருடைய பங்கு, ஏற்கெனவே இங்கே வந்துவிட்டது. திரு வல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் அவர். அந்த வகையில், ஒரு மாத ஊதியம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டு விட்டது.

ஆனால், இப்பொழுது இவர் கொடுத்த அதிர்ச்சி எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி. இங்கே 10 லட்சம் ரூபாயை பெரியார் உலகத்திற்காகக் கொடுத்திருக்கின்றார்.

லட்சியம் என்பதை நீங்கள் முன்னால் தந்தி ருக்கின்றீர்கள். லட்சங்கள் அதற்கு முன்னால் மிகப்பெரிய செய்திகள் அல்ல.

எனவே, உங்களிடத்தில் லட்சியத்தை சொல்வதற்கு, ‘கரும்பு தின்ன கூலியும் கொடுக்கிறோம்’ என்று சொல்வதைப்போல, இங்கே நீங்கள் வந்தது மட்டுமன்றி, நிதியையும் அளி்த்திருக்கிறீர்கள். இது எங்களுக்குப் பெருமைக்குரிய ஒன்றாகும்.

முதலமைச்சர் அவர்கள், இன்று (2.12.2025) காலையில் வீட்டிற்கு அமைச்சர்களோடு வந்து என்னை வாழ்த்திவிட்டு, சிறிது நேரம் அளவளாவினார். அப்போது நான் சொன்னேன், ‘‘அடுத்து இளந்தலைவர் வருகிறார், பெரியார் திடலுக்கு’’ என்றேன்.

பெரியார் திடலிலேயே வைத்துக் கொள்ளுங்கள்!

உடனே முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே ‘‘அவரை அங்கேயே, பெரியார் திடலிலேயே வைத்துக் கொள்ளுங்கள், அவரை இருப்புக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னார்.

நான் சொன்னேன், ‘‘நீங்கள் சொல்வதற்கு முன்னா லேயே, நாங்கள் எப்போதோ அவரை ஈடுபடுத்திக் கொண்டு வந்தோம். அவருடைய ஒவ்வொரு உரையும், அவருடைய இளைஞரணியில் அவர் செயல்படுகின்ற முறை, அவர் நடத்துகின்ற பாசறை, அவருடைய வெளியீட்டகம், இப்போது அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற செயல்பாடுகள், இவை எல்லாம் எங்களால் அல்ல; பெரியார் திடலுக்கு ஏற்கெனவே அவர் வந்துவிட்டார் என்பதை, எப்போது அவர் ஸநாதனத்தைப்பற்றி பேசினாரோ, அன்றைக்கே எதிரிகள் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இன எதிரிகள் அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதிலிருந்தே அதனைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்றேன்.

நம்முடைய கலைஞர் அவர்கள் மறைந்தபொழுது, தமிழ்நாடு வெற்றிடமாகிவிட்டது என்று நம்முடைய இன எதிரிகள் சொன்னார்கள். ஆனால், நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் வந்தார். இப்போது ‘‘பீரங்கி வயிற்றலே துப்பாக்கி பிறந்தது’’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இது துப்பாக்கியல்ல; இது ஒரு பெரிய சுயமரியாதை அணுகுண்டு. ‘‘பாராட்டி போற்றி வந்த பழைமைலோகம், ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்’’ என்று கலைஞர் எழுதினார்.

பகுத்தறிவுச் சிந்தனையும்,
பெரியாரிய சிந்தனையும் வரவேண்டும்!

எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், தி.மு.க. இளைஞரணி இன்றைக்குத் துடிப்புள்ள படையாக, எப்படி கருஞ்சட்டைப் படை கட்டுப்பாடாக இருக்கிறதோ, அதுபோல, இளைஞரணியைப் பெருக்கினால் மட்டும் போதாது; எண்ணிக்கையைப் பெருக்கினால் மட்டும் போதாது; அரசியலில் உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது; அவர்களுக்குப் பகுத்தறிவுச் சிந்த னையும், பெரியாரிய சிந்தனையும் வரவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்த ஒரு இளைஞரணித் தலைவர் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிறார். கிடைக்க முடியாத உதயநிதி அவர்கள் கிடைத்திருக்கிறார்.

இங்கே உதயமாகவும் வந்திருக்கிறார். நிதியையும் கொடுத்திருக்கிறார். இதைவிட எங்களுக்கு என்ன பெருமை?

‘‘திராவிட இளைஞர்கள் மாநாடு’’

1937–1938 இல் துறையூரில், ‘‘திராவிட இளை ஞர்கள் மாநாடு’’ என்ற தலைப்பில் மாநாட்டினை அண்ணா அவர்களை அழைத்து,  நடத்தினார் தந்தை பெரியார் அவர்கள். அப்போதுதான் அண்ணா அவர்கள் இயக்கத்திற்கு வந்த புதிது. அண்ணாவினுடைய ஆற்றலை அடையாளம் கண்டுகொண்ட அய்யா அவர்கள், அந்த மாநாட்டிற்கு அண்ணாவையே தலைவராகப் போட்டார். அம்மாநாட்டில் அண்ணா அவர்கள் உரையாற்றிய உரை, புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றது.

அவரது உரையில், ‘‘நான் மிகச் சிறியவன், இளைஞன், என்னை, அய்யா அவர்கள் மாநாட்டிற்குத் தலைவராகப் போட்டிருக்கிறார்’’ என்றார்.

அதற்குப் பிறகு உரையாற்றிய தந்தை பெரியார் அவர்கள், ‘‘எனக்கு எப்போதும் வயதானவர்களின்மீது நம்பிக்கையே கிடையாது. என் வயதுடையவர்களால் எதுவும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் எப்போதும் இளைஞர்களைத்தான் நம்பியிருக்கிறேன். எனக்கு சின்ன பசங்களோடு பழகுவதுதான் மிகவும் முக்கியம்’’ என்றார்.

அதேபோன்று, அவரைப் பார்க்கும்போதே, இளை ஞராகவே தெரிவார். இதற்காக, அவர் சட்டைப் போடுவதற்கே ஒரு வழக்குப் போட்டார்கள். அவர் அதை சட்டை செய்யவில்லை.

அவர் சொன்னார், பிரச்சாரம் செய்து வந்தால், வயது குறையும் என்று; வயது குறையாது, வயது மறையும்.

வயது குறைவு என்பதற்கும், வயது மறைவு என்பதற்கும் வேறுபாடு உண்டு. குறைவு என்பது மெது மெதுவாக வரும். மறைவது என்பது தானாக வரும்.

உதயநிதி ஸ்டாலின் போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது
புதிய உற்சாகம் பெறுகிறேன்!

நான் ஓய்வில் இருந்தால்தான், சோர்வாக இருக்குமே தவிர, உங்களையெல்லாம் பார்க்கும்போது, தோழர்களையெல்லாம் பார்க்கும்போது, அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது புதிய உற்சாகம் பெறுகிறேன்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றும்போது, பெரியார் திடலைப்பற்றியும், மூலிகையைப்பற்றியும் சொன்னார். அதைவிட மிக முக்கியம், இன்றைக்கு அவருக்கு இருக்கின்ற பணிகளுக்கிடையே, என்னுடைய பிறந்த நாள் விழாவிற்கும் வந்திருக்கின்றார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு Made Over.  என்ன அந்த Made Over என்று சொன்னால், அறிவுச் சுடர். இங்கே இருக்கின்ற தந்தை பெரியாருடைய அறிவுச் சுடர் இருக்கிறதே, அந்தச் சுடரை எவரும் கவர்ந்து போக விடாமல், அந்தச் சுடரை பத்திரமாக, இந்த 93 வயது இளைஞன், ஒருவரிடம் நம்பிக்கையோடு ஒப்ப டைக்கின்ற விழாவாகத்தான்    இவ்விழாவைக் கருதுகின்றோம்.

அரசியலை, நாங்கள் துச்சம் என்று  கருதுகின்றோம். அது ஒரு இனப் போராட்டம். எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. அவர்களால், மனக்கோட்டை மட்டுமே கட்ட முடியும். ஆனால், எங்களால் கோட்டையைப் பிடிக்க முடியும். கோட்டையை ஆளவும் முடியும்.

‘‘நாங்கள் சென்ட்ரி; நீங்கள் என்ட்ரி’’

நாங்கள்,  கோட்டைக்குள் உங்களை அனுப்ப முடியும். ‘‘நாங்கள் சென்ட்ரி; நீங்கள் என்ட்ரி’’ என்று முதலமைச்சரின் முன் சொன்னதை, இங்கேயும் சொல்லி, என்னுடைய 93 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு நீங்கள் வரவில்லை. எனக்கு 39 வயது என்றுகூட நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். 23 அல்லது 13 வயதுதான்.

ஆகவேதான், என்னுடைய வயது 93 என்று சொல்வது என்பது காலண்டரைப் பொறுத்ததுதான். என்னுடைய மனதிற்கு 93 வயது கிடையாது. தோழர்கள்தான் என்னுடைய வயதை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அது எனக்கு நினைவிற்கு வருவது இல்லை.

பெரியார் என்ற அச்சில்
இயங்கக்கூடிய வண்டி

எனவே, நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள், எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய வண்டி ஓடும். காரணம், இது பெரியார் என்ற அச்சில் இயங்கக்கூடிய வண்டியாகும். ஓடும், ஓடிக்கொண்டே இருக்கும். ஓடியே தீரும்.

அந்த வண்டியை, சில மின்மினிப் பூச்சிகளைக் காட்டி, இந்த மின்சாரத்தைத் தடுத்துவிட முடியும் என்று சில பைத்தியக்காரர்கள் நினைக்கிறார்கள். அது நிச்சயமாக நடக்காது.

நம்முடைய பணி தொடரும், வேகமாக தொடர்ந்து செல்லும்!

அதற்கு அடையாளம்தான், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர், இந்தியாவிலேயே இப்படி ஒரு முத லமைச்சர் இல்லை என்று சொல்லக்கூடிய முதலமைச்சர்.

டபுள் இன்ஜின் ஆட்சியல்ல; ஒரு இன்ஜின் ஆட்சிதான். திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார் முதலமைச்சர் அவர்கள், அதற்கு இளைஞர் பட்டாளம், வெறும் பதவிப் பட்டாளங்கள் அல்ல, நல்ல கொள்கைப் பட்டாளமாக அது இருக்கின்றது. அதற்கு ஒரு நல்ல தளபதியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

உங்கள் பயணங்கள் சிறக்கட்டும்! உங்கள் பயணங்கள் வேகமாகத் தொடரட்டும்!

நீங்கள், பத்திரமாக, வேகமாகச் செல்வீர்கள்.

எல்லாவற்றையும் தாங்கக்கூடிய தோள்–
தந்தை பெரியாருடைய தோள்!

ஏனென்றால், பெரியாரின் தோளில் அண்ணா; அண்ணாவின் தோளில் கலைஞர்; கலைஞரின் தோளிலே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்; அவரு டைய தோளிலே, இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின்.

எல்லாவற்றையும் தாங்கக்கூடிய தோள், தந்தை பெரியாருடைய தோள். அவருடைய கைத்தடியாக, கருவியாக, கருஞ்சட்டைப் பட்டாளம்.

எனவேதான், அன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் மறைமலை நகரில், ‘‘கருஞ்சட்டைப் பட்டாளத்திற்குச் சல்யூட்’’ என்று சொன்னார். அந்த சல்யூட்டில் நீங்களும் வருவீர்கள்; நாங்களும் வருவோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில்
மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம்!

எனவே, நம்முடைய குறிக்கோள் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் திரும்பால், 2026 இல் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, மீண்டும் இதே முதலமைச்சர், இதே ஆட்சி வரும்.

எதிரிகள் காணாமல் போவார்கள். இதுதான் நம்முடைய சூளுரை – இந்தச் சூளுரையை, சுயமரியாதைச் சூடு போட்டு நடத்துவோம் என்று கூறி, வந்தமைக்காக, கருத்தைத் தந்தமைக்காக, என்னுடைய வயதை மறையும்படியாக, குறையும்படியாக அல்ல;  மீண்டும் 10 வயது சிறுவன் என்று ஆக்கியுள்ளவீர்கள்.

ஷேக்ஸ்பியருடைய பாடத்தில், ‘‘செவன்த் ஸ்டேஜ் ஆஃப் மேன்’’ என்று சொல்வார். அதில், முதுமை வயதிற்குப் போனால், கடைசி வயதிற்கு வந்துவிடும் என்று சொல்வார்.

பெரியாரின் சுடரை ஒப்படைக்கின்றோம்!

எனவே, பெரியாரின் சுடரை, இந்த இளைஞரிடம், இளைஞர்களுக்கு வழிகாட்டும் இளைஞரிடம், இந்தக் கொள்கைச் சிங்கத்திடம் ஒப்படைக்கின்ற நாள்தான், இந்த 93 ஆவது பிறந்த நாள் விழா! அவரிடம் நாங்கள்  ஒப்படைத்துவிட்டோம்.

அவருக்கு அறிவாலயம் எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியம் பெரியார் திடல்!

இரட்டைக் குழல் துப்பாக்கி, என்றைக்கும் கவனமாக இருக்கும்.

திராவிடம் வெல்லும், நாளைய வரலாறு அதைச் சொல்லும்!

ரூ.10 லட்சத்திற்கும் நன்றி!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *