புதுடில்லி,நவ.8 டில்லி, ராஜஸ்தான், குவாஹாட்டி ஆகிய 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 6.11.2023 அன்று பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட் டது. இது தொடர்பாக கொலீஜியம் வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், நீதிபதிகளின் பணிச்சுமை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் முழு பலத்தை உறுதி செய்வது அவசியமாகும். தற்போது உள்ள 3 காலியிடங்களையும் நிரப்ப கொலீஜியம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய தகுதி வாய்ந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் பரிசீலித்தது. அதன்படி, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசீ, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைக்கிறது. இந்தப் பரிந் துரைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால், உச்சநீதி மன்றத்தின் 31 நீதிபதிகளின் எண்ணிக்கை 34 -ஆக (முழு எண்ணிக்கை) அதிகரிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.