
திராவிட இயக்க ஆய்வாளர்
க. திருநாவுக்கரசு
ஆசிரியர் பெரியாரைச் சந்தித்து எண்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பதின்ம பருவத் தொடக்கத்திலேயே பகுத்தறிவுப் பால் அருந்தியவர் ஆசிரியர். இந்தப் பருவத்திலேயே பெரியார், அண்ணா முன்னிலையில் பேசிப் பாராட்டைப் பெற்றவர். இன்றும் நம்மோடு இருப்பவர். அவருக்கு இப்போது அகவை 93. வாழ்க ஆசிரியர்; நமக்கு அவர் அறிவுப் பாதையைக் காட்ட உடல் நலத்தோடு சிறக்க வாழ வாழ்த்துகின்றோம்.
தமிழ் இலக்கிய உலகில் வரலாறு 13ஆம் நூற்றாண்டை உரையாசிரியர் காலமாக நிர்ணயித்து இருக்கிறது. அதற்குச் சான்றுகள் நிறுவிக் காட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர் பெருமக்களுள் ஒருவர் பெயர் இளம்பூரணர். அவர் தொல்காப்பியத்திற்கு உரை வரைய கிடைத்தார். பெரியார் கருத்தியல் உரையாசிரியர்களுள் பதின்ம பருவத்திலிருந்து பணியாற்றி வருகிற நம் ஆசிரியரை இளம்பூரணர் என்று அழைத்தால் அது சரியானதுதானே. திராவிட இயக்கத்தில் வேறு எவருக்கும் இத்தகைய பெயர் சூட்டி விட முடியாது; ஏனெனில் பதின்ம பருவத்தில் இயக்க வழி யாரும் பெரியாரைச் சந்தித்ததும் இல்லை, அவர் முன்பு பேசியதும் இல்லை. ஆகவே இவரை நாம் முனமனதோடு ‘இளம்பூரணர்’ என்று அழைக்கின்றோம். வாழ்க ஆசிரியர் இளம்பூரணர் என்று வாழ்த்துகின்றோம்.
ஆசிரியர் இன்றும் சுறுசுறுப்போடு பணியாற்றி வருகின்றார். அவர் ‘விடுதலை’யின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. நாளேடோ, அல்லது எந்தவிதமான பருவ ஏடுகளோ ஆகட்டும், எவரும் அவற்றிற்கு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக இருந்தவர் ‘இவர்’ என்று அடையாளம் காட்டிவிட முடியாது. அதிலும் நமது ஆசிரியர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார் என்பது நாம் பெருமையும் பெருமிதமும் கொள்ளத்தக்க செய்தியாகும்.
ஆசிரியரின் அறிக்கைகள், கட்டுரைகள், பொருளையொட்டி அவர் பேசுகிற பேச்சுகள் – ஆங்கிலத்தில் ஆகட்டும், தமிழில் ஆகட்டும் அறிவார்ந்தவர்கள் வரவேற்கத்தக்கனவாகவே அவை இருக்கும். அவர் எழுதி வருகிற ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ ஏழு பாகங்கள் வெளிவந்து விட்டன. இன்னும் அந்தத் தொடர் முற்றுப் பெறவில்லை. ‘உண்மை’ ஏட்டில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. 2008ஆம் ஆண்டைப் பதிவு செய்து கொண்டு ஆசிரியர் தன் இயக்கப் பங்களிப்பை வழங்கி வருகிறார். திராவிட இயக்கத்தை ஆய்வு செய்ய முன்வருவோர் ஆசிரியரின் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ கட்டாயம் படிக்க வேண்டும். அதில் அவ்வளவு செய்திகளைச் சொல்லிச் செல்கிறார். அவர் எழுதியுள்ள எந்த நூலிலும் செய்திகளின் அடர்த்தியையும், புதியனவற்றின் வரவுகளையும் அறிந்து மகிழலாம். மேலும் அவற்றைத் தெரிந்து கொள்ள அதன் தொடர்பான நூல்களைத் தேடும் எண்ணமும் நமக்கு உருவாகும். அவர் உரைநடை விளங்க வைக்கும் பாங்கில் அமைந்து இருக்கும். சில அறிவியல் கட்டுரைகளுக்கு, அரசியல் கட்டுரைகளுக்கு, சமூக விஞ்ஞான கட்டுரைகளுக்கு நடைமுறையை அறிந்து கொள்ளும் விதத்தில் அடைப்பில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் – இது ஆசிரியரின் பாணி.
இந்த ஆண்டு ஆசிரியருக்கு 93ஆவது பிறந்த நாள். அவர் 82 ஆண்டு பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, அவர் வாழ்க்கைப் போராட்டத்திலும், இயக்கப் பங்கேற்பிலும் வெற்றியோடு இன்றளவும் இயங்கி வருபவர். திராவிட இயக்கத் தோழர்கள் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றக்கூடிய அத்தனை தகுதியையும் உடையவர் ஆவார்.
நாம், திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள், சாமிநாதய்யரின் என் கதை, நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, சிலம்புச் செல்வர் மா.பொ.சி.யின் என் போராட்டங்கள், எம்.பக்தவத்சலத்தின் வாழ்க்கை வரலாறு, இப்படித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பல வரலாறுகளை படித்திருக்கிறோம். அவற்றில் எது சரி இல்லை; சரி என்று சொல்லக்கூடிய துணிவும் நமக்கு உண்டு.
‘விடுதலை’ ஆசிரியர் பல நூல்களை எழுதியிருக்கிறார். அவை அனைத்திலும் நம் மனம் கவர்ந்தது அவர் எழுதி வரும் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ எனும் தொடர் கட்டுரையாகும். அவை பல பாகங்கள் நூலாக வெளிவந்து இருக்கின்றன. 1933ஆம் ஆண்டு பிறந்த ஆசிரியர் அவரது, 10, 11ஆம் வயதுகளில் பெரியாரைச் சந்தித்ததிலிருந்து தொடங்குகிறது. இதுவரை வெளிவந்துள்ள அவரது வாழ்க்கை வரலாற்றை நாம் படித்து விட்டோம்.
வாழ்க்கைப் பாதையில், இயக்க வாழ்வில் அவர் சந்தித்த நபர்களிலிருந்து நிகழ்வுகள் வரை அனைத்தும் அனுபவக் களஞ்சியமாகத் திகழுகின்றன. பெரியாரைப் பின்பற்றி பொது வாழ்க்கையில் ஒழுகுவது, இயங்குவது என்பதில் அவர் மிகுந்த உறுதிப்பாட்டோடு இருந்திருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இன்று அவர் நம்மோடு மிகப் புகழ்மிக்கவராக வாழ்ந்து வருகிறார். பொது வாழ்க்கையில் பிறர் பின்பற்றத்தக்கவராகச் சிறப்புடன் ஓர் இடத்தைப் பெற்று இருக்கிறார். திராவிடர் கழகம் என்பது அரசியல் கட்சி இல்லை. அது ஓர் இயக்கம். வர்ணாசிரமம் ஒழிந்த, ஜாதிகளற்ற, பகுத்தறிவோடு கூடிய தமிழியல் சார்ந்த சமதர்ம சமுதாயத்தை அமைக்க பாதையைச் செப்பனிடுகின்ற பெரும் பணியை ஏற்றுள்ளவர் தமிழர் தலைவர் – ஆசிரியர் அவர்கள். அவர் உறுதிக்கு அவர் வாழ்க்கை வரலாற்றில் உள்ள ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டினாலே போதுமானது. ஆசிரியரே சொல்கிறார் படித்துப் பாருங்கள்.
“நான் இப்படிக் கூட்டத்திற்குச் சென்று கொண்டும் இருந்த நிலையில் எனது படிப்பு நின்றுவிட்ட நிலையில், என் மூத்த அண்ணன் தி.மு.க. நகர செயலாளர் கி.கோவிந்தராசன் ‘தமிழர் தேநீர் விடுதி’ என்ற பெயரில் கடலூர் காவல் நிலையம் அருகே வைத்திருந்தார். அங்கே எப்போதாவது நான் செல்வதுண்டு ஆனால், கடையில் அதிகம் உட்கார மாட்டேன்.
குறிஞ்சிப்பாடி (வள்ளலார் மாவட்டம்) பெரிய குடும்பத்தினைச் சார்ந்தவர் தோழர் இரா.சாம்பசிவம் (இவர் முதல் தி.மு.க. மாவட்டச் செயலாளர், அண்ணாவுக்கு வேண்டியவர்). இவர் பிறகு எம்.எல்.சி., எம்பியாக (எம்ஜிஆரால்) மேலவைக்கு அனுப்பப்பட்டவர். 1948-இல் மொழிப் போரில் சிறை சென்றவர், முன்னாள் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருக்கு உறவினர் என்ற நிலையில் ‘வசதியான’ குடும்பத்திலிருந்து திராவிடர் கழகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு. இவருக்காக வழக்குரைஞர் வாதாட வந்ததையும் ஏற்க மறுத்துச் சிறையேகியவர்! பண்பாளர்,
அவருடைய நண்பர் உறவினர் திரு. சாமி என்பவர். அவர் மியான்மர் (பர்மா) நாட்டுத் தலைநகர் ரங்கூனிலிருந்து (தற்போதைய புதுப்பெயர் யாங்கூன்) வந்தவர். அவருக்கு அண்ணா தலைமையில் குறிஞ்சிப்பாடியில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது! எனக்கும் (திராவிடர் கழகத்தவன் நான்) நட்பு முறையில் அவரை அழைத்து வந்து தோழர் சாம்பசிவம் அழைப்பிதழ் கொடுத்துச் சென்றார். அந்தத் திருமணத்திற்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்தேன்.
திடீரென்று என் அண்ணாரின் தேநீர் விடுதிக்கு முன் ஒரு கார் வந்து நின்றது. பெரிய அண்ணனையும், என்னையும் அழைத்தனர், என் அண்ணார் உடனே சென்றார்; நானும் பார்த்தேன். உள்ளே ‘அண்ணா’, ஆம், அறிஞர் அண்ணாதான். கூட்டங்களில் அவரை நான் விமர்சித்தும் பேசி வருவதுண்டு. நான் வணக்கம் கூறினேன். அவர் என்னை நலம் விசாரித்து எப்படி நன்றாகப் படிக்கிறாயா? என்றார். தலையாட்டினேன்; குறிஞ்சிப்பாடி திருமணத்திற்குச் செல்லக் காத்திருக்கிறேன் என்பதைப் புரிந்தவர் என்னை அவரது காரிலேயே வற்புறுத்தி ஏற்றிக் கொண்டார். எனக்குக் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.
குறிப்பு: ‘பாலறாவாயர்’ என்பது திருஞான சம்பந்தரைக் குறிக்கும். 1944 ஜூலை 29 அன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் 11 வயதுடைய சிறுவன் கி.வீரமணியின் பேச்சைக் கேட்ட அண்ணா அவர்கள் இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குணடலம் நெற்றியிலே திருநீறு கழுதியே ருத்ராட்சம் அணிந்து பேசியிருந்தால் இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் கண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார்.
அறிஞர் அண்ணா அவர்கள் அவரது காரிலேயே குறிஞ்சிப்பாடியில் அவரது தலைமையில் நடைபெற்ற திரு.சாமி அவர்களது திருமணத்திற்குச் சென்ற போது என்னையும் ஏற்றிக் கொண்டார். என்னைப் பற்றி மிகவும் அன்புடன் விசாரித்து வந்தார்! ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் படிக்கிறாயா?” என்று வினவினார்.
எப்போதும் உண்மைகளை மறைத்து அறியாத நான் அவரிடம் தயக்கத்துடன் “சில மாதங்களுக்கு முன்புதான் நான் படிப்பை நிறுத்திவிட்டேன் ” என்று கூறினேன். மிகவும் வருத்தப்பட்டார். எனது ‘குரூப்’ மாற்றம் பற்றிய பிரச்சினைகள் காரணம் என்று எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்ல அவகாசம் இல்லை. குறிஞ்சிப்பாடி திருமண இல்லம் வந்தது. அங்கே அத்திருமண வாழ்த்துரையாளர்கள் பட்டியலில் அண்ணாவே என்னையும். நான் எதிர்பாராமல். பேச அழைத்தார். நான் பேசினேன் சுருக்கமாக; அதை அவர் சுவைத்ததையும், கூட்டத்தினர் உணர்ந்தனர். சாப்பாட்டிற்குப் பின் புறப்பட ஆயத்தமான போதும், அண்ணா ‘நானும் காஞ்சிபுரம்தான் செல்கிறேன். கடலூரில் உன்னை இறக்கிவிட்டே செல்கிறேன்’ என்றார். நானும் மகிழ்ச்சியோடு ஏறிக் கொண்டேன். வழியில் சொன்னார். “நீ காஞ்சிபுரம் வந்துவிடு; அங்கேயுள்ள பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்: படிப்பைத் தொடருவதே நல்லது” என்று கூறினார்.
நான் சொன்னேன். “நான் நிச்சயம் யோசிக்கிறேன். அதில் ஒரு சிறு தயக்கம் என்னவென்றால். குறிப்பிட்ட பாடங்களான ‘உலக வரலாறு. அரசியல், பொருளாதாரம் ஆகிய மூன்றும் இணைந்த ‘குரூப்’ (பிரிவு) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட்டில் மட்டும்தான் உள்ளது ஆகவே. அதில் படிக்கவே எனக்குப் பெரு விருப்பம். அடுத்த ஆண்டு எனது படிப்பைத் தொடர்ந்தால் அந்த ‘குரூப்’ எடுத்துத் தொடருவது என்றே முடிவு செய்துள்ளேன். தங்களது அன்புக்கு மிக்க நன்றி” என்றும் கூறினேன்.
கடலூரில் என்னை இறக்கி விட்டுவிட்டு, அண்ணா காரில் சென்றுவிட்டார். என் தந்தையார் அவர்கள் உட்பட என் வீட்டாருக்கு. அண்ணா என்னைக் காஞ்சிபுரம் வந்து படிக்கச் சொல்லி அழைத்தது கேட்டு ஆச்சரியப்பட்டு “இவன்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டான். இவன் பெரியார் கட்சி அல்லவா? இவனுக்கு அண்ணா அழைப்பை ஏற்க மனம் இடம் கொடுக்கவில்லை போலும்!” என்று கூறினர். நான் அதிகம் ‘குரூப்’ பற்றி விளக்கம் ஏதும் சொல்லாமல்-
‘‘ஆமாம். அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தவறு? அண்ணாவின் உதவி பெற்று விட்டு, பிறகு அவருக்கு எதிராக நான் கட்சியில் பேசுவதற்கு எனது மனச்சாட்சி குறுக்கே நிற்காதா? நான் பெரியார் கட்சிக்காரன்தான். கடைசி வரை நான் இதில் பிடிவா தத்துடன் இருப்பேன். நானே தொடர்ந்து படித்துக் காட்டுகிறேனா இல்லையா பாருங்கள்!”
என்றெல்லாம் பேசினேன். இது வீட்டு உரையாடல்தான்.
இந்தக் குறிப்பு ஆசிரியரின் “அய்யாவின் அடிச்சுவட்டில்…’’ பாகம் ஒன்றில் பக்கம் 168, 169, 170களில் இடம் பெற்று இருக்கிறது. ஆசிரியரின் தந்தையார் அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் கல்லூரியில் படிக்க அழைத்ததை வரவேற்பதுபோல தோன்றியதை உடனே ஆசிரியர் மறுத்து தம் உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தத் திண்மை ஒவ்வொரு திராவிட இயக்கத் தோழருக்கும் இருக்க வேண்டும். ஆசிரியர் எழுதி வரும் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ ஓர் அருமையான ஆவணமாகும் இது. அதில் ஆசிரியரின் முழுமைத் தெரிகிறது. அவரின் அடக்கமும் உறுதியும் வெளிப்படுகிறது. இயக்கம் நாளும் கற்றுவரும் தலைவரை நமக்கு வழங்கி இருக்கிறது. அவருக்கு 93 அகவை என்கிற போது அவரிடம் வாழ்த்தையும், அவரிடம் அன்பையும் பெறுவதன்றி மற்றென்ன வேண்டும் – நமக்கு!
