
பேராசிரியர்
மு.நாகநாதன்
12 அகவையிலே பெரியாரைப்
போற்றிய மாணவ மணி!
அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில்
பொருளாதாரம் கற்றுத் தேர்ந்து,
முதல் பரிசை வென்ற தங்கமணி!
தந்தை பெரியாரின்
அழைப்பை ஏற்று
வருமானம் ஈட்டும்
வழக்கறிஞர் தொழிலைத் துறந்து
‘விடுதலை’ப் பொறுப்பேற்ற
ஆசிரிய மணி!
சாதியை முறியடித்து
மோகனா அம்மாவை
மணந்த மாமணி!
பெரியார் அமைத்த
அனைத்துக் களங்களிலும்
பங்கு பெற்ற வீரமணி!
சிறைவாசத்திற்கு அஞ்சாத மணி!
‘மிசா’ கொடுமையை
அச்சமின்றி ஏற்ற கொள்கை மணி!
சிறையிலும் எழுத்துப் பணி
தொடர்ந்த உயர் கல்வி மணி!
அண்ணன் ‘மாறன்’ சிறையில்
படைத்த ‘திராவிட வரலாறு’
என்ற நூலுக்குக் குடியரசுத் தரவுகளை,
வழங்கிய ஆய்வு மணி!
பொய்யையும் புரட்டையும்
அடுக்குமுறை சாதியையும் புகுத்திய,
‘கீதையின் மறுபக்கம் ‘ கண்டு,
மறுப்பு நூல் எழுதி,
ஸநாதன சதியை
முறியடித்த சிந்தனை மணி!
சீர்மிகு வாழ்வியலைச்
சுவைக்கும் வண்ணம்
தேன் அருவியாகத் தரும் தமிழ் மணி!
அரசியலை, அறிவியலைச்
சட்ட நெறிமுறைகளைக் கசடறக் கற்றுத்
தீர்ப்பு எது? தீர்வு எது? என்று
அன்றாடம் ஒலிக்கும் அறிவு மணி!
ஆலயம் தோறும் ஒலிப்பது ஆரிய மணி!
‘விடுதலை’யில் ஒலிப்பது திராவிட மணி!
பெரியார் கண்டெடுத்த வைரமணி!
பேரறிஞர் அண்ணா போற்றிய பகுத்தறிவு மணி!
அன்றைய முதல்வர் கலைஞருக்குத் துணை நின்ற பண்பு மணி!
அன்னை மணியம்மையார்
தலைமை ஏற்ற ஆளுமை மணி!
இன்றைய முதல்வர்
திராவிட நல்லாட்சி தரும்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்குப் பாதுகாவல் அரணாக
நிற்கும் அன்புமணி!
93 அகவையிலும்
ஊர் தொடங்கி,
உலக நாடுகள் வரை
பெரியாரிய உயர் எண்ணங்களை
உலகமயமாக்கும் உன்னத மணி
பெரியாரின் சுயமரியாதை மணி
எங்கள் ஆசிரியர் வீரமணியார்
பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க!!
