*தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, அவர்தம் கொள்கைகளையும், உடைமைகளையும்
அன்னை மணியம்மையார் தலைமையில் வென்றெடுத்தோம்!
* எத்தனையோ தடைகள், இடையூறுகள், எதிர்ப்புகளைக் கடந்து, நமது கொள்கைப் பயணம் தொடர்கிறது, தொடரும்! 4 கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்பும் இதில் அடக்கமாகும்!
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியான தி.மு.க. ஆட்சி
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
ஆண்டு 93 இல் அடியெடுத்து வைக்கும் திராவிடர் கழகத் தலைவர் (2.12.2025) ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வென்று, ‘திராவிட மாடல்’ அரசு அமைய பாடுபடுவது என்பதே எமது பிறந்த நாள் செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நமது கருஞ்சட்டைப் படையினரின் தனிச்சிறப்பு!
எனது பிறந்த நாளையொட்டி ஒரு செய்தி அறிக்கையை எழுதுவதும், நமது தோழர்கள் அதை எதிர்பார்த்து, அதன்படி நடக்க மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தேக்கி வைத்து, செயலாற்றும் உழைப்புத் தேனீக்களாகவும், பணியாற்றும் கருப்பு மெழுகுவத்திகளாகவும், ஒளிதரும் கொள்கை லட்சியப் பாதைப் போராளிகளாகவும், ‘‘களம் காண என்றும் தயார்’’ என்று தமது ஆயத்தமாக அணி வகுத்து நிற்பதும் நமது கருஞ்சட்டைப் படையினரின் தனிச்சிறப்பு!
அவர்கள் கடமையாற்றுவதலால்தான், இந்தப் பெரியார் ஆண்டு தந்த பெரும் பேறாக, நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சரின் ‘சல்யூட்’டைப் பெற்றோம்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில்!
1962 ஆகஸ்ட்டில் – அறிவுப் பேராசான் தலைவர் தந்தை பெரியார் தம் ஆணையை ஏற்று, ‘விடுதலை’யின் (நிர்வாக) ஆசிரியர் பொறுப்பேற்றேன், அறிவீர்கள் அனை வரும்!

அவ்வாண்டு முதலே, அய்யா தந்தை பெரியார் பிறந்த நாளுக்கு ஆண்டு தவறாமல் ‘விடுதலை’ மலர் மலரும் வாடிக்கை தொடர்கிறது.
அய்யாவின் விருப்ப ஆணையாகக் கருதி…
தொடர்ந்து வெளிவரும் மலருக்காக, தந்தை பெரியார் அவர்களிடம், கருத்தாழமிக்க பிறந்த நாள் செய்தி அறிக்கையைக் கேட்டு வாங்கி வெளியிடுவோம். அவ்வாண்டும், அடுத்த ஆண்டும், இன்னும் அடுத்தடுத்த பெரியாராண்டுகளிலும் நமது இயக்க வேலைத் திட்டத்தை – அய்யாவின் விருப்ப ஆணையாகக் கருதி, நம்மைப் போன்ற தொண்டர்கள் செயல்படவேண்டிய திசைக்கு வெளிச்சமாகி வழிகாட்டுவார்.
‘பொதுத் தொண்டு’ என்ற தலைப்பில்…
அந்தப்படி 1962, செப்டம்பர் அய்யா அவர்கள் எழுதி அனுப்பி, அச்சான முதல் ஆண்டு அறிக்கை ‘பொதுத் தொண்டு’ என்ற தலைப்பிலானது ஆகும். அய்யா எழுதிய அறிக்கை, அவர் பெருஞ்சுமையாகக் கருதிய – கவலை தெரிவித்த முக்கியச் செய்தி இதோ:
‘‘எனக்கு ஏதாவது கவலை உண்டு என்றால், கழகச் சொத்துகளையும் மற்றும் பொது நலத்திற்காகவோ அளிக்கப்பட்ட பொருள்கள், சொத்துகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, அதன் வருவாய்களைக் கழக லட்சியங்களுக்கும், அனாதையாய்ப் பராமரிப்பு இல்லாத மக்களுக்கும், அவர்கள் நல்வாழ்வுக்கும் வகை தரும்படி செலவு செய்வது என்ற கவலை தான்.’’

இதனை ஆழமாகப் படியுங்கள்! அய்யா என்ற தனிப்பட்ட மனிதரின் மறைவு ஏற்பட்டு, 52 ஆண்டு, அரை நூற்றாண்டுக்குமேலாகிய நிலையில்,
அந்தக் கடமை (வருமான வரிச் சுமை சுமார் ரூ.80 லட்சங்கள், சொத்துகள், அட்டாச்மெண்ட், அறக்கட்டளை அங்கீகாரம் பெறாத ஒரு திட்டமிட்ட சூழ்(ச்சி)நிலை), சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதைப் பணிமூலம் விளைச்சல் – இவை பெரியாரோடு முடிந்துவிடுமா என்ற மற்றவர்களின் கவலையைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதிய சொற்றொடர்தானே ‘பராமரிப்பு இல்லாத மக்களுக்கு’ என்பதாகும்!
அய்யா மறைவிற்குப் பின், அன்னையாருக்கு ஏற்பட்ட உடல் நலிவும், நலக்குறைவும் அவரை அடிக்கடி மருத்துவ மனைவாசியாக ஆக்கிய நிலைமையும் மக்கள் அறிந்ததே!
அதிலும், அன்னையாரின் தலைமைத்துவம் எப்படி ‘மிசா’வைப் போன்ற கருப்புச் சட்டங்கள், இராவண லீலா, அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்ட அதீதமான அடுக்கடுக்கான தொல்லைகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு நின்று வென்று காட்டியது!
மக்கள் பணியினை
உயிர்க் கடமையாய் கருதி…
எஞ்சிய ஆண்டுகளில், இந்தக் ‘‘குருவி’’யின் தலையில், பெரும் பொறுப்பான ‘‘பனங்காயை’’ வைத்து, சோதனைக்கு ஆளாக்கிய நிலையில் – துரோகம், சட்டப் போராட்டம், களப்பணிகள் என்ற முப்பரிமாணத்திலும் கட்டுப்பாடு மிக்க எமது கருஞ்சட்டை இராணுவப் படையின் முழு ஒத்துழைப்புடனும், அனுபவம் மிக்க அறிவார்ந்த ஆளுமைகளின் அறிவுரைத்தல் கேட்டும், கவலையும், பொறுப்பும் கொண்டு, எப்படியோ சிறுகச் சிறுக, மெல்ல மெல்ல, ஆனால், உறுதியாக – அந்தப் ‘‘பனங்காயை’’ப் பாதுகாப்பதில் இந்தச் சிறு குருவி வெற்றி பெற்றுவிட்டது! அய்யா தெரிவித்த கவலையைப் போக்கியதோடு, மக்கள் பணியினை உயிர்க் கடமையாய் கருதி, உழைத்து, தேர்வில் வென்றுவிட்டோம் – நாம் அனைவரும்!
காலத்தை முன் கணித்துச் செய்யப்பட்ட
சரியான கணக்கீடு!
அய்யா தோற்றுவித்த அமைப்பும், அவர்கள் செய்த ‘ஏற்பாடு’ என்பதும், எவ்வளவு தேவையானது; காலத்தை முன் கணித்துச் செய்யப்பட்ட சரியான கணக்கீடு என்பதை, அன்னையார், தனது அடக்கமும், ஆழமும், உறுதியும்மிக்க தலைமைமூலம் நிரூபித்துவிட்டார்! ‘‘பெரியார் சேர்த்த உடைமைகள், கொள்கைகள் அழிந்து போகாமல்’’ மேலும் மேலும் நாளும் பாதுகாப்புப் பெட்டகமாக ஆகி, வளர்ந்துள்ளது!
இராம.கோபாலனுக்கு
கீதையின் மறுபக்கம் நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்ன கலைஞர்!
நம் அறிவாசான் அவர்கள் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ‘விடுதலை’யில் அறிக்கைமூலம் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள் (16.11.1973).
‘ஆரிய வர்ண தர்ம பரப்பு நூலான ‘பகவத் கீதை’ நூலில் உள்ள புரட்டினையும், ஜாதி காப்பு, பெண்களை இழிவு படுத்தும் ஆத்மா பித்தலாட்டங்களை அம்பலப்படுத்த ஆராய்ச்சி அறிஞர்களுக்கும் வேண்டுகோள்’ விடுத்ததோடு, ‘தக்க சன்மானமும் கொடுக்கப்படும், அப்படி வந்து எழுதித் தருவோருக்கும்’ என்பதே அவ்வேண்டுகோள்!
அதன் பின்னரும் ஆராய்ச்சியாளர்கள் பலர் இருந்தும், முன்வரவில்லை; ஒன்று, ஆழ்ந்த ஆய்வுத் திறனில் ஆர்வமில்லாததோ அல்லது பெரிதும் எதிர் விமர்சனத்திற்கு அஞ்சியோகூட அந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்!
அந்த இறுதி விருப்பத்தையும் நாமேதான், இரண்டு ஆண்டுகள் கடும் உழைப்பு, முயற்சி, ஆய்வின்மூலம் ‘‘கீதையின் மறுபக்கம்’’ என்ற தலைப்பில் 1998 இல் நூலாக எழுதி நிறைவேற்றினோம்! இன்று 28 ஆம் பதிப்பு கண்டு – பல லட்சம் பிரதிகள் வந்துள்ளன. (ஆங்கில மொழி பெயர்ப்பும் தனியே வெளிவந்துள்ளது).
ஹிந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன், கலைஞர் அவர்களது இல்லம் தேடி வந்து, அவர்களைச் சந்தித்து ‘‘‘பகவத் கீதை’ நூலைக் கொடுத்துப் படியுங்கள்’’ என்றார்.
கலைஞர், நாம் எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ நூலைக் கொடுத்து, ‘‘இந்த நூலையும் படியுங்கள்! படித்து, இதில் குற்றம் குறையிருந்தால் எழுதுங்கள்’’ என்று உடனே ‘பட்’டென்று எதிர்வினை ஆற்றினார் (8.9.2004) – இதுதான் சமயோசித புத்தி!
நம், தந்தை பெரியார் ஆணை கொள்கை ரீதியாக நிறைவேறியதைக் கண்டு மகிழ்ந்தோம்!
இறுதி நாட்களில், சில ஆண்டுகளில் அய்யாவின் அடுத்த கட்டளை நமக்கு, அண்ணா தலைமையில் உருவான (தி.மு.க.) பகுத்தறிவு ஆட்சி தொடரவேண்டும் என்பது! நமது மக்களின் எதிரிகள் – பரம்பரை எதிரிகள் – கொள்கை எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து, திராவிடர் ஆட்சி தொடரவேண்டும் என்பதே தந்தை பெரியாரின் பேரவா – நமக்குப் பெரும் ஆணை!
தந்தை பெரியார் அவர்களின்
92 ஆம் பிறந்த நாள் செய்தி!
எடுத்துக்காட்டாக, தந்தை பெரியார் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தியிலேயே,
‘‘முந்தைய ஓர் ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு இருந்தேன். இந்த சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும், திரு.காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி, உற்சாகமூட்டினார்கள்!
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான், நான் உண்மையிலேயே நம்பிக்கையும், உற்சாகமும் அடைந்தேன்.’’ (‘விடுதலை’, 17.9.1971).
1972–லும் அய்யா விடுத்துள்ள தமது பிறந்த நாள் செய்தியில்,
தனது உடல் நலனைக் குறிப்பிட்டுவிட்டு, ‘‘இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்!
காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை – அவைகளால் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால், சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்துகொண்டார்கள், கொள்கை மேற்கொண்டார்கள் என்பதைச் சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது’’ என்று எச்சரித்தார்!
நம் அன்னை மணியம்மையாரும், அய்யாவின் ஆணைப்படி தி.மு.க.வைப் பாதுகாத்து, உண்மையான தாய்க்கழகம் திராவிடர் கழகம் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள்.
கலைஞரின் ஆதங்கத்தைப் போக்கிய
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நமது கலைஞர் (தி.மு.க.) ஆட்சியால்தான் தந்தை பெரியாரின் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் (பிறவி, பாரம்பரிய அடிப்படை நியமனம் ரத்து செய்யப்பட்டது) தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய சட்டமியற்றப்பட்டது. அதைச் செய்யவிடாமல் உச்சநீதிமன்றத்தில் தடை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க.வின் எல்லா சட்ட திட்டங்களும் செல்லுபடியாகும் என்ற தீர்ப்புகள் வந்த பிறகும், தங்களது அதிகார வர்க்க சூழ்ச்சியால், அதனை நடைமுறைக்கு வராதபடி தடுத்து, தள்ளிப் போட்டே ‘குறுக்குசால்’ ஓட்டிய நிலையில், ‘அய்யாவுக்கு அரசு மரியாதை கொடுக்க முடிந்த எனது ஆட்சி, அவரது நெஞ்சில் தைத்த முள்ளை (ஜாதி, தீண்டாமை ஒழிப்பு முயற்சி வெற்றி பெறவிடா சூழ்நிலை) அகற்ற முடியவில்லையே’ என்று ஆதங்கப்பட்டார்.
ஆனால், அதன்பின் ஆட்சிப் பொறுப்பேற்று, தேர்தல்மூலம் வெற்றி வாகை சூடிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் அமைந்த ‘திராவிட மாடல்’ ஆட்சி, தன் முதல் கடமையாக அந்த ‘முள்ளை’ அகற்றி, பயிற்சி பெற்ற ஆதிதிராவிடர், பெண்கள் உள்பட அனைவருக்கும் அந்த வாய்ப்புகளை வழங்கி, கருவறை – கர்ப்பக்கிரகத்தின் உள்ளே பாதுகாப்புடன் இருந்த ஜாதி ஆதிக்கப் பாம்பை, சட்டத் தடி கொண்டு அடித்து விரட்டியது!
இன்றும் அது வெவ்வேறு ரூபங்களில், இன்னமும் சீறிப் பாய, சமயத்தை எதிர்பார்த்து உள்ளது!
இவ்வாண்டின் முழுமுதற் பணி!
எனவே, அந்த ஆபத்து வராமல், இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பாதுகாப்பது இவ்வாண்டின் முழுமுதற் பணியாகும்.
எனவே, அதுதான், எனது பிறந்த நாள் வேண்டுகோள்! ‘‘தி.மு.க. கூட்டணி பெரும் பலத்தோடு, வென்றது; தி.மு.க. ஆட்சி மீண்டும் கோட்டையில்!’’ என்ற முக்கியச் செய்தியே, நமது ஒரே வேலைத்திட்டம் வரும் காலங்களில் என்பதுதான்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற ஆக்டோபஸ்கள், அவற்றின் கொடுங்கரங்கள், பெரியார் மண்ணைக் காவி மயமாக்கிட, கற்பனைக்கெட்டாத சூது, சூழ்ச்சி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின் விருப்பத்திற்கேற்ப, வினையாற்றும் கீழிறிக்க நிலைக்குத் தேர்தல் ஆணையம் சென்றுள்ளது என்ற குற்றச்சாற்று, ஒலிக்காத இடமில்லை. உச்சநீதிமன்றத்திலிருக்கும் வழக்கு விசாரணையிலிருந்து, வீதிகள்வரை பரவி, கேலிக்கூத்தாகி விட்ட நிலை. அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயக, குடியரசு (Democratic, Republic) என்ற அடிக்கட்டுமான தத்துவங்களுக்கு சவப்பெட்டி ஆணிகள் அடிக்கப்படுவது போன்ற அசாதாரண நிலையை உருவாக்கி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிட முனையும் வெட்கக்கேடான நிலை!
தேர்தலுக்கு நிற்காத இயக்கத்திற்கு ஏன், இதில் இவ்வளவு ஆர்வம் என்ற கேள்விக் குரல், எங்கு கேட்டாலும், நமது ஒரே பதில், எங்களது அறிவு ஆசான் தந்தை பெரியார் 1925 இல் தொடங்கிய அறிவுப் போர்வாளான வார ஏட்டிற்கு – வெள்ளைக்கார ஆட்சியிருந்த நிலையிலேயே வைத்த பெயர் ‘‘குடிஅரசு’’ (Republic) என்பதாகும்.
8.9.2004 அன்று மாலை இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கலைஞர் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து ‘பகவத் கீதை’ புத்தகத்தை வழங்கினார். உடனே கலைஞர் அவர்களும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ நூலினை ராம. கோபாலனுக்கு வழங்கினார்.
‘முரசொலி’, 9.9.2004
‘‘ஆருயிர் இளவல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், மிக அருமையாக ஆராய்ச்சி பூர்வமாக – அரிய பெரிய மேற்கோள் எழுதி வெளியிட்டுள்ள பயனுள்ள பகுத்தறிவு நூல் ஒன்று; ‘கீதையின் மறுபக்கம்’. பகவத் கீதை படிக்கத் துவங்கும் யாராயினும் அல்லது பகவத் கீதையைப் படித்து முடித்த யாராயினும் இந்நூலையும் படிக்க வேண்டும்.’’
– கலைஞர் (7.9.2004 ‘முரசொலி’)
‘‘இது ஜனநாயகம் என்று வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் – மக்களாட்சி என்பதே ஜனநாயகக் குடிஅரசு’’ என்று அய்யா கூறுகிறார். அதனை ஒழித்து, இப்போதும் பொய் வாக்குறுதி மற்றும் பல வித்தைகளால், விந்தைகள் (Miracles) நிகழ்த்திவரும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மைனாரிட்டி ஒன்றிய ஆட்சி – தமிழ்நாட்டை எப்படியாவது ‘‘வசப்படுத்திட’’ – காவி மண்ணாக்கிட – ‘கஜகர்ணம்’ போட்டுப் பார்க்கின்றது!
கருஞ்சிறுத்தைப் பட்டாளத்தின்
கண்துஞ்சாக் கடமை!
பகுத்தறிவுப் பூமியான தமிழ்நாடு, பெரியார் மண்ணில் எந்த சூழ்ச்சிகளையும், சூதுகளையும், வித்தைகளையும், வியூகங்களையும் தாண்டி, 2026 இல் தி.மு.க. கூட்டணி பெரும்பாலான இடங்களில் வென்று காட்டி, மீண்டும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடர் நீட்சியாகவும் – மாட்சியுடனும், மீட்சி ஆட்சியாக மீண்டும் மிளிறும் வண்ணம், நாம் ஒவ்வொருவரும் உணர்வுள்ள, நன்றியுள்ள, சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை ஆட்சியின் வெற்றியை உறுதி செய்ய, களப் போராளிகளாக மாறவேண்டியது – கருஞ்சிறுத்தைப் பட்டாளத்தின் கண்துஞ்சாக் கடமையாற்றுவது என்பதே நமது பணி!
பிரச்சாரப் பெரும் பணி – வீடு தொடங்கி வீதி எங்கெங்கும் தொடர் அடைமழையாய் பொழிய வைக்க, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து, நாமே முன்னின்று பணியாற்றுவோம்!
இவ்வாட்சி மீண்டும் பெரு வெற்றியுடன் சென்னைக் கோட்டைக்குள் மீண்டும் நுழையும்! அதன்மூலம் ஆரிய ஆதிக்கக் கோட்டை கட்டியவர்களுக்கு, மூட்டைக் கட்டவேண்டிய முழுப் பணியை செய்வதே நமது முக்கிய பணி!
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற உழையுங்கள்!
பண்பாட்டுப் படையெடுப்பு, சமூகநீதிக் களங்களில் கவனச் சிதறல் இன்மை – எல்லாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பணி மற்றொருபுறம் என்றாலும், முன்னுரிமைப் பணியாக ‘மீண்டும் சிறப்பான தி.மு.க ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அமைய – தி.மு.க. கூட்டணி வெற்றி பெற உழையுங்கள்’ என்பதே என் முதன்மையான பிறந்த நாள் செய்தியாகும்!
‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்ற முறையில், ‘‘பெரியார் உலக’’ பணிகள் விரைந்து முடிக்கப்பட நிதி திரட்டலும் சுணக்கமின்றி உற்சாகத்துடன் அதே வேகத்தில் தொடரவேண்டும் என்பதும் முக்கியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.12.2025
