
துரை.அருண்.
வழக்குரைஞர்,
சென்னை உயர் நீதிமன்றம்.
கோவில்களில் தமிழ் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டோடும் – முருகன் கோவிலில் ஓதுவார்களே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் முழங்கும் காலம் இக்காலம்.
வெறுமனே தமிழ் உணர்வு மிகுதியால் இந்த முழக்கத்தை ஆதரிப்பவர் அல்லர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழ் நாட்டில் தமிழன் கட்டிய கோவிலில் தமிழுக்கு தீண்டாமையா – என தமிழுக்குத் ஆரிய பார்ப்பன வந்தேறிகளால் காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக சமர் புரிபவர் ஆசிரியர்.
தனியுரிமை கோரமுடியாத உலகப் பொதுமொழியான தமிழுக்கு தமிழ் நாட்டின் கோவிலில் இடமில்லையா? என அறச்சீற்றத்துடன் உரிமை முழக்கமிட்டு வருபவர் ஆசிரியர்;
அதே வேளையில் தமிழை அறிவியல் மனப்பான்மையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர், தமிழ் அறிவியல் தமிழாக வளர வேண்டும் என்று சொல்பவர்.
ஆசிரியரின் தமிழ் மீதான பற்றுக்கு ஏராளமான உதாரணங்களை சொல்லலாம் அதில் ஒன்று தான் பழனி முருகன் கோவிலில் தமிழ் வழிபாட்டு மொழியாக வேண்டும் என்று சிதம்பரத்தில் ஆசிரியர் பேசிய பேச்சு. அந்த பேச்சு என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது – பக்தி இலக்க்கியங்களிலும் ஆசிரியர் தொடாத நூல்களே இல்லை என தெரிய வந்தது.
கேட்பவர்களுக்கு தான் சொல்லும் செய்தியின், கவிதையின், கட்டுரையின் கருப்பொருள் புரிய வேண்டும் எனும் அதீத அக்கறையுடன் ஒரு கல்லூரி பேராசிரியர் போல பாடம் எடுக்கும் நல்வழக்கம் ஆசிரியருக்கு உண்டு. அதனால் எம் போன்ற மாணவர்கள் பெறும் பலன் அதிகமுண்டு.
ஆசிரியர் சங்க இலக்கியத்தில் பெரும் புலமை மிக்கவர் என்பதை யாவரும் அறிந்ததே. பக்தி இலக்கியத்தையும் அறிந்தவர் தானே ஆசிரியர்.
பழனி முருகன் கோவிலில் பண்டாரங்களே தமிழில் வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும் என சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டத்தில் பேசிய போது கழகத் தலைவர் ஆசிரியர் கந்தர் அலங்கார பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.
“மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வயிறார வாழ வைப்போன், வெய்ய வாரணம் போல்,
கை தான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!
பதவுரை:வண்டுகள் மொய்க்கும் மலர் வள்ளியை அவனும் மொய்ப்பான்! :
உமை அன்னை கொஞ்சிடும் குற்றால மலை இலஞ்சி முருகன்! இலஞ்சி என்னும் குளத்தில் உதித்த குகன்! இலஞ்சியில் வந்த இலஞ்சியம்…
முத்தமிழால் திட்டினாலும், அடடா தமிழ் பேசுகிறானே என்று, ஆங்கே அப்போதே சிறப்புடன் வாழ வைப்பான்! தன்னை தாழப் பேசியவனுக்கும் , இழிவாக பேசியவனையும் தமிழில் பேசிய ஒரே காரணத்தால் வாழப் வைப்பவன் முருகன் எனப் பாடப்பட்டுள்ளதே.. அத்தகைய தமிழை ஓதுவார்கள் பண்டாரங்கள் பாடினால் தகாதா? முருகன் ஏற்கமாட்டாரா?” எனக் கேட்டார் ஆசிரியர் .
தமிழ் மீது தீராப்பற்றுடன் பயணிக்கும் ஆசிரியர் நீடு வாழ்க – தொடர்ந்து தமிழுக்கு ஊறுவிளைப்போருக்கு உரிய எதிர்வினையாற்றும் தழல் விழி உழுவையுடன் வீறு நடை போட்டும் தமிழ் போல் நீடு வாழ்க ஆசிரியர்!
