பாவ்நகர், நவ.30– குஜராத்தில் 3 அடி உயர கணேஷ் பாரையா சட்டப் போராட்டத்தில் வென்று இன்று மருத்துவராகத் திகழ்கிறார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரையா. இவர் 3 அடி உயரம் மற்றும் 20 கிலோவுக்கும் குறைவான எடையுடன், உடல் இயக்கக் குறைபாடும் (locomotor disability) கொண்டவர். எனினும், மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது.
மருத்துவப் படிப்பு
கடந்த 2018ஆம் ஆண்டு, கணேஷின் உயரத்தை மட்டுமே காரணமாகக் கூறி, அவருக்கு
எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு சேர்க்கை அளிக்க, இந்திய மருத்துவக் கழகம் மறுத்தது. உடல் ரீதியிலான இந்தக் குறைபாடு மருத்துவராகப் பணியாற்றத் தடையாக இருக்கும் என்று கூறியது.
இதையடுத்து, கணேஷ் வேறு வழியின்றி பி.எஸ்சி. படிப்பில் சேர்ந்தார். அதேவேளையில், தனது பள்ளி முதல்வரின் உதவியுடன் எம்.சி.அய்-யின் முடிவுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார். முதலில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரது வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சுமார் நான்கு மாத கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, “உயரத்தை மட்டுமே காரணமாகக் கூறி கணேஷுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கை மறுக்கக் கூடாது” என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு பாவ்நகர் மருத்துவக் கல்லூரியில் கணேஷ் சேர்க்கை பெற்றார். அய்ந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்து, ஓராண்டு மருத்துவப் பயிற்சியையும் (Internship) அவர் இந்த ஆண்டு நிறைவு செய்தார்.
தற்போது அவர் தனது விருப்பத்தின்படி, கிராமப்புறத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். தனது பணி குறித்து கணேஷ் கூறுகையில், “கிராமங்களில் தான் மருத்துவருக்கான தேவை அதிகமாக உள்ளது. அங்குள்ள ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவே நான் விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
தன்னுடைய உயரம் காரணமாக ஏற்படும் சவால்கள் குறித்து அவர் கூறுகையில், “மருத்துவ பயனாளிகள் முதலில் என்னைப் பார்க்கும்போது சற்று ஆச்சரியம் அடைகின்றனர். ஆனால், பிறகு அவர்கள் என்னை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அதிர்ச்சி அடைவது இயல்புதான் என்று நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் என்னுடன் அன்புடனும் சுமூகமாகவும் நடந்துகொள்கின்றனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
