மும்பை, நவ. 30– மகாராட்டிராவில் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும், கடந்த சில காலமாகவே அங்கு என்டிஏ கூட்டணிக்குள் பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வெடித்துள்ளது.
பாஜகவை விமர்சித்து ஷிண்டே சில கருத்துகளைக் கூறிய நிலையில், அதற்கு பட்னாவிஸ் இப்போது காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
மகாராட்டிரா மாநிலத்தில் இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரு கட்டங்களாக உள்ளாட்சி நடை பெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளும் தரப்பு உள்ளாட்சித் தேர்தல்களில் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி பல்கர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிவசேனா தலைவரும் துணை முதலமைச்சரும் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அந்த பிரச்சாரத்தில் அவர் சொன்ன சில கருத்துகளே இப்போது விவாதமாக மாறியுள்ளது.
ஏனென்றால் சிவசேனாவை பொறுத்தவரை இப்போது அவர்கள் பாஜகவினர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். உள்ளூர் பாஜக தலைவர்கள் சிலர் சிவசேனா நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு இழுப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதன் காரணமாகவே இரு தரப் பிற்கும் இடையே பூசல் நிலவுகிறது. இந்தச் சூழலில் தான் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஷிண்டே பாஜகவை மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
ஷிண்டே தனது பேச்சில் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்த போதிலும், அவர் மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தான் சொல்கிறார் என்றே பரவலாகச் சொல்லப்பட்டது. இதனால் பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்தச் சூழலில் தான் பட்னாவிஸும் ஷிண்டேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதே தஹானுவில் மறுநாள் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பட்னாவிஸ், தேர்தல் பிரச்சாரங்களில் பொதுவாக இதுபோல தேவையில்லாமல் பேசவே செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மகாராட்டிராவில் முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மாநில அளவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறது. இதனால் பாஜகவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட தஹானுவில் பாஜகவுக்கு எதிராக சிவசேனாவும் அஜித் பவாரின் என்சிபி கட்சியும் கைகோர்த்துள்ளது. இது பாஜகவுக்கு சிக்கலை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
