சென்னை, நவ. 29– ‘டிட்வா’ புயல் மீட்புப் பணியில் ஈடுபட சென்னை மற்றும் புறநகரில் 900 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், சென்னை காவல் துறையும் களத்தில் இறங்கியுள்ளது.
இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நெருங்கும். இதை அடுத்து, இன்று (நவம்பர் 29ஆம் தேதி) வட தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள்
மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்புத் துறை இயக்குநரான டிஜிபி சீமா அகர்வால் மேற்பார்வையில் அனைத்துத் தீயணைப்பு வீரர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மிக முக்கிய காரணங்களைத் தவிர, விடுப்பில் உள்ள அனைவரும் பணிக்குத் திரும்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும், 900 தீயணைப்புப் படை வீரர்கள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி என 17 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைநீர் அதிகளவில் தேங்கும் இடங்களான ரெட்டேரி சந்திப்பு, வேளச்சேரி ராம் நகர், முடிச்சூர், தாம்பரம், குன்றத்தூர், மணலி புதுநகர், நந்தம்பாக்கம் ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தீயணைப்புப் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரப்பர் படகு, மரங்களை வெட்டும் கருவிகள் உட்பட மீட்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களிலும் மீட்பு உபகரணங் களுடன் தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர்.
மேலும், பேரிடர் காலங்களில் மக்களைக் காக்கும் வகையில் சென்னை காவல்துறை அமைத்த காவல் பேரிடர் மீட்புப் படையினரும், மீட்பு உபகரணங்களுடன் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
