புதுடில்லி, நவ.29 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், (எஸ்அய்ஆர்) வந்தே மாதரம் பாடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ஆம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வந்தே மாதரம்: வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என அதிகாரிகள் கூறினர். மேலும் அணு சக்தி, உயர் கல்வி, கார்ப்பரேட் சட்டம் மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாக 10 முக்கிய மசோதாக்களை குளிர்கால கூட்டத்தில் கொண்டு வரவும் ஒன்றிய அரசு திட்டமிட்டள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டில்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒருமித்த கருத்துடன் அவையை சுமுகமாக நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூட்டியுள்ளார்.
