சென்னை, நவ.29– முதலமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.11.2025) சென்னை, கலை வாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகையில், “இசை பயிலும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்” என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:–
அதிக பெண்கள் பட்டம் பெற்றிருப்பது
கூடுதல் மகிழ்ச்சி!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெறும் உங்களை மாணவ, மாணவியர் என்று சொல்வதைவிட பட்டம் பெற்ற கலைஞர்கள் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்! அந்த வகையில், பல்வேறு துறைகளில் மிளிரப் போகும் கலைஞர்களுக்கு என்னு டைய உளம் கனிந்த வாழ்த்துகள்! அதிலும், அதிக பெண்கள் பட்டம் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு முதலமைச்சராக, பல்கலைக்கழக வேந்தராக மட்டுமல்ல, நானும் நாடகம் மற்றும் திரைத்துறையில் இயங்கும் கலைஞன் என்ற அந்த முறையில் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிலும், நம்முடைய மதிப்பிற்குரிய அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கும் – மதிப்பிற்குரிய ஓவியர் சந்துரு அவர்களுக்கும் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.
அதிலும், பல்துறை வித்தகரான அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கு இந்த டாக்டர் பட்டம் மிக மிகப் பொருத்தமான ஒன்று! அண்ணன்சிவக்குமார் அவர்கள், புகழ்பெற்ற நடிகர்மட்டுமல்ல; நல்ல ஓவியர்! சிறந்த சொற்பொழிவாளர்! முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமானவர்! தலைவரே அவரது வீட்டிற்குச் சென்று, ஒன்றரை மணி நேரம் அவரது ஓவியங்களைப் பார்த்து ரசித்து இருக்கிறார்! அதேபோல், எல்லா முதலமைச்சருடனும் பழகியவர் நம்முடைய சிவக்குமார் அவர்கள்! எம்.ஜி. ஆருக்கு நெருக்கமானவர்!
எனக்கும் அண்ணனாக இருக்கிறார் நடிகர் சிவக்குமார்!
இந்தப் பல்கலைக்கழகம் பெயர் பெற்றிருக்கக்கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் பழகி, அவரு டைய நட்பை பாராட்டியவர்! இப்போது எனக்கும் ஒரு அண்ணனாக இருக்கிறார், நம்முடைய சிவக்குமார் அவர்கள்!
நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தம்பி சூர்யா – கார்த்தியுடன் வந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தவர் நம்முடைய சிவக்குமார் அவர்கள். தான் கற்ற நல்ல பண்புகளை – ஒழுக்கத்தை – யோகா – உடற்பயிற்சி போன்ற உடல்நலத்திற்குத் தேவையானவற்றின் அவசியத்தை தொடர்ந்து இன்றைக்கு வரைக்கும் அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்! இங்கே ‘முனைவர்’ பட்டம் பெற்றபோது சொன்னார், தலைவர் கலைஞர் அவர்களிடம் பெறுவது போன்று மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னார். அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது எனக்குதான் பெருமை; அவருக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ எனக்குப் பெருமை.
ஓவியர் சந்துருவுக்கு என் கையால்
‘டாக்டர்’ பட்டம் கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!
அதேபோல், மதிப்பிற்குரிய ஓவியர் சந்துரு அவர்கள், ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் அவர்! தொல்லியல் துறையில் இவர் பணியாற்றியபோது, சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓவியங்களை நகலெடுத்து, அருங்காட்சியகப் பணிகளை மேற்கொள்வது என்ற முயற்சியில் சிறப்பாகச் செயல்பட்டார்! இப்போது நீங்கள் பார்க்கலாம் – சென்னை ரவுண்டானாக்களில் இருக்கக்கூடிய பல சிலைகள் இவர் உருவாக்கியவைதான். சிற்பம் – கவிதை – ஓவியம் என்று பன்முகத்தன்மை வாய்ந்த இவர், திறமையான பல கலைஞர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்! அப்படிப்பட்ட இவர்களுக்கு, என் கையால் டாக்டர் பட்டம் கொடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
நல்ல அரசியல் மாண்புகள்
எப்போதும் தொடர வேண்டும்!
என்னைப் பொறுத்தவரை, அம்மையார் ஜெய லலிதா அவர்களின் பெயர் சூட்டப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், இதற்கு நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை; இந்தப் பட்டமளிப்பு விழாவைக் கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 2021–க்குப் பிறகு, இந்த யூனிவர் சிட்டியை இன்னும் செழுமையாக வளர்த்தி ருக்கிறோம்! இதுதான், நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு! இந்த அரசியல் மாண்பு நடுவில் இல்லாமல் சென்றிருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
2021–க்குப் பிறகு, இந்த யூனிவர்சிட்டியில் நிறைய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்து, நல்கை நிதியை உயர்த்தி – ஆராய்ச்சி மய்யம் – நூலகம் – கற்றல் மேலாண்மை ஆகிய பல அமைப்புக்களை உருவாக்க ஒரு கோடி ரூபாய் வழங்கினோம்!
இந்தப் பல்கலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!
கடந்த ஆண்டு மார்ச் 8–ஆம் நாள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தேன். இதற்கு துணையாக இருக்கும் இணை வேந்தர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை நான் வாழ்த்துகிறேன்!
அதேபோல், உலகம் அறிந்த பாட்டுக் கலைஞரான துணைவேந்தர் சவுமியா அவர்கள் – ‘சங்கீத கலாநிதி’ முனைவர் எஸ்.இராமநாதன் – ‘சங்கீத கலாச்சார்யா’ திருமதி முக்தா அவர்களிடம் இசை பயின்றவர்! ‘கலை மாமணி’ ‘சங்கீத கலாநிதி’ போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்! இப்போது, தன்னைப் போன்ற பல கலைஞர்களை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய துணை வேந்தர் சவுமியா அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
இன்று ‘முனைவர்’ பட்டம் பெற்ற
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!
கலைதான், மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு, மேம்பட்ட உயிரி னமாகக் காட்டுகிறது! அனைத்து உயிரினங்களும் நடக்கும் – ஓடும் – சாப்பிடும் – உறங்கும் – சண்டை போடும். ஆனால், மனிதர்கள் மட்டும்தான் இசை – ஓவியம் – சிற்பம் – எழுத்து – நாடகம் உள்ளிட்ட கலை வடிவங்களைப் படைக்கிறோம்; ரசிக்கிறோம்! அப்படிப்பட்ட, இசையையும், கலையையும் முறையாகப் பயின்று, அதற்கான பட்டத்தைப் பெற்றுள்ள நீங்கள் எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள்!
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு எப்படி, உற்பத்தி – பொருளாதாரம் – தொழில்நுட்ப அறிவு அவசியமோ, அதே அளவுக்கு, அந்தச் சமூகத்தின் சிந்தனை வளத்திற்கு கலைகளின் வளர்ச்சியும் அவசியம்! அதனால்தான், நம்முடைய தாய்மொழியான தமிழை, இயல் – இசை – நாடகம் என்று பகுத்திருக்கிறோம்! இந்த மூன்று தமிழையும் கற்றுத் தேர்ந்து, கலைஞர்கள் உருவாகியிருக்கும் இடமாக, கவின் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கிருந்து கரியரைத் தொடங்கும் உங்களுக்கென்று தனி மதிப்பு கிடைக்கும்!
கலைகளை, கலைஞர்களை மதிக்கும் போற்றும் மண், நம்முடைய தமிழ் மண்! சங்க காலம் முதல் இப்போது வரை நல்ல கலைஞர்களை நாம் உயரத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். இசையும், கலையும் நம்முடைய மனிதர்களுடன் ஒன்றிக் கலந்தது! நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அந்தக் கொண்டாட்டத்திற்கு இசை வேண்டும்; சோகமாக இருந்தால், நம்மை ஆற்றுப்படுத்த இசை வேண்டும்; சோர்வாக இருந்தால், ‘மோட்டிவேட்’ செய்ய இசை வேண்டும்!
அதேபோல், கடுமையான பணிச்சூழலில் இருக்கும் நமக்கு ஓய்வு நேரத்தில் புதுச் சிந்தனையை தூண்டக் கூடியதாக இருப்பது கலைகள்! ஒரு நல்ல ஓவியத்தைப் பார்க்கும்போதும், ஒரு சிற்பத்தைப் பார்க்கும்போதும் அதன் நேர்த்தி, நம்மை வியக்க வைக்கும்! அதுமட்டுமல்ல, புதிதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்கும்! என்னைப் பொறுத்தவரைக்கும், காரில் நீண்ட நேரம் டிராவல் செய்யும்போது, அரசியல் விவாத நிகழ்ச்சிகளைக் கடந்து,டி.எம்.சவுந்திரராஜன், சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா, எஸ்.பி.பி, இளையராஜா போன்றவர்களின் பாடல்களை அதிகம் கேட்பேன்! முன்பெல்லாம் நிறைய திரைப்படம் பார்ப்பேன். இப்போது யாராவது நல்ல படம் வந்திருக்கிறது என்று சொன்னால், அந்தப் படங்களை பார்த்து, அந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த கலைஞர்களைப் பாராட்டுவதுண்டு. ஏனென்றால், கலையையும், நல்ல கலைஞர்களையும் போற்ற வேண்டியது ஒரு நல்ல அரசினுடைய கடமை!
இன்றைக்குப் பட்டம் பெற்றிருக்கக்கூடிய நீங்கள் எல்லோரும் காலத்தைக் கடந்து வாழுகின்ற படைப்புகளை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! நம்முடைய அரசு சார்பில், சங்கத்தமிழ் நாள்காட்டி – குறளோவியம் நாள்காட்டி என்று வெளி யிட்டிருக்கிறோம். சங்கத்தமிழ் நாள்காட்டியில், சிறந்த சங்கப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்குப் பொருள், ஆங்கில மொழிபெயர்ப்பு, அதற்குப் பொருத்த மான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன!
அதேபோல், குறளோவியம் நாள்காட்டியில் 365 திருக்குறள்களும், அதற்கான பொருளும், ஆங்கில மொழிபெயர்ப்பு ஓவியங்களும் இடம் பெற்றி ருக்கின்றன! இதில் சிறப்பு என்னவென்றால், இந்த ஓவியங்கள் எல்லாம், தமிழ்நாடு முழுவதும் இருக்கும், உங்களைப் போன்ற மாணவர்கள், ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்கள்! அதில், அவர்களின் பெயர் – பள்ளி – கல்லூரி பெயர் என்று அனைத்து விவரங்களும் இருக்கும்! அந்த நாள்காட்டிகளில் இருக்கும் ஓவி யங்களைப் பார்க்கும்போது, அவ்வளவு அழகாக பொருள் உள்ளவையாக இருக்கின்றன!
இந்த காலண்டர் எல்லோருடைய வீடு களுக்கும் சென்று சேர்ந்தால், சங்கத்தமிழும்,திருக்குறளும், நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் வரைந்த ஓவியங்களும் எல்லோரையும் சென்று சேரும்! இந்தக் காலண்டரை ‘தமிழ் மின் நூலகம்’ வெப்சைட்டில் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்! இதை ஏன் சொல்கிறேன் என்றால், நம்முடைய பிள்ளைகளிடம் இருக்கும் கலை ஆர்வத்தை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும்! இது போன்ற– – தமிழுக்கும், நம்முடைய பண்பாட்டுக்கும் பயனுள்ள படைப்புகளை நீங்களும் கொடுக்க வேண்டும்! அந்த எண்ணத்தில்தான் சிம்பொனி இசையமைத்த இசை ஞானி இளையராஜா அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, அந்த மேடையில் சங்கப்பாடல்களுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு அவர் இசை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
அதேபோல், திருக்குறளுக்கு இசை அமைத்த இளைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வாழ்த்தினேன்! இது பட்டமளிப்பு விழா என்றாலும், கலை வளர்க்கும் நம்முடைய அரசின் சார்பில் நான்கு புதிய சிறப்பு அறிவிப்புகளையும் உங்களுக்காக இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிவிக்க விரும்புகிறேன்.
முதலாவது அறிவிப்பு!
நாட்டுப்புறக் கலையில், குறிப்பாக ‘பறையாட்டம்’ கலை வல்லுநரான வேலு ஆசான் என்கிற பத்மசிறீ வேல்முருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் மரபுக் கலைகளான கிராமியக் கலைகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில், கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கீடு அரசின் சார்பில் வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு –
உங்கள் பல்கலைக்கழகத்தில், பல்வேறு இசை, நிகழ்த்துக் கலை மற்றும் கவின் கலைகளில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கவின்கலையில், புதியதாக கலை பாதுகாப்புப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு 2026–2027–ஆம் கல்வி ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முதுகலை பட்டப்படிப்பின் மூலமாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், அதிக வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.
மூன்றாவது அறிவிப்பு!
இசை மற்றும் கவின் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்ப டுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவி னங்களுக்காக தற்போது வழங்கப்படும் 3 கோடி ரூபாய் மானியத் தொகை 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப் படும்.
நான்காவது அறிவிப்பு!
“நான் முதல்வன்” திறன் சார்ந்த படிப்புகள் இசை மற்றும் கவின் கலை பயின்று வரும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக, மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி மற்றும் டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் வழங்கப்படும்.
‘திராவிட மாடல்’ அரசு
எப்போதும் துணை இருக்கும்!
இப்படி பல்வேறு வகைகளில் உங்களுக்கு ஆதரவாக இருந்து, உங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் தயாராக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்!
அதேபோல், இப்போது ஏ.அய். மூலமாக பலரும் ஓவியங்கள் – பாடல்கள் – இசை என்று உருவாக்கு கிறார்கள். அதனால், நமக்கான வாய்ப்புகள் குறைந்து விடுமோ என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது. எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது! தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
வித்தை தெரிந்தவர்களிடம் இருந்தால்தான் ஆயுதத்திற்கு மதிப்பு! அதனால், நீங்கள் தொடர்ந்து டெக்னாலஜியை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்! நம்முடைய கலைஞானி கமல்ஹாசன் கூட சமீபத்தில் அமெரிக்காவிற்குச் சென்று, ஏ.அய். தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு வந்திருக்கிறார். இந்த ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும். ஆன்லை னில் தேடினாலே நிறைய கோர்ஸ் கிடைக்கும். அதனால் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்!
கலைகள் மூலம்
நல்ல தீர்வைக் கொண்டு வருக!
உங்களின் அறிவை – திறமையை – உங்கள் கலை களில் வெளிப்படுத்துங்கள்! கலைகள்தான், மொழியை – பண்பாட்டை – இனத்தைக் காக்கும்! இப்போதெல்லாம், இளைஞர்கள் நிறைய கைப்பேசியைப் பார்க்கிறார்கள். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்கள். உடல்நலனைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதற்கெல்லாம் உங்கள் கலைகள் மூலமாக நீங்கள் நல்ல தீர்வைக் கொண்டு வர வேண்டும்!
தமிழுக்கும் – தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தி டும் படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கலையால், கலைமாமணி போன்ற மாநில அரசின் விருதுகள் – ஒன்றிய அரசின் விருதுகள் – உலக அங்கீகாரங்கள் உங்களைத் தேடி வர வேண்டும்! உங்களின் புக ழால், தமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கு நீங்கள் பெருமை தேடித் தர வேண்டும் என்று வாழ்த்தி, விடை பெறுகிறேன்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.
