பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது!
* பா.ஜ.க.வின் ‘‘இரட்டை இன்ஜின்கள்’’ ஆட்சி ஜனநாயகத்தைப் பழுதாக்கி விட்டன!
* முதுகெலும்புள்ள தமிழ்நாட்டின் ஒற்றை இன்ஜின் மிகச்சரியாக ஓடுகிறது!
தொடர்ந்து அவதூறு செய்யும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநரைக் கண்டித்து
டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
பட்டுக்கோட்டை, நவ.29 பா.ஜ.க.வின் ‘‘இரட்டை இன்ஜின்கள்’’ ஆட்சி ஜனநாயகத்தை பழுதாக்கி விட்டன! முதுகெலும்புள்ள தமிழ்நாட்டின் ஒற்றை இன்ஜின் மிகச்சரியாக ஓடுகிறது! தொடர்ந்து அவதூறு செய்யும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநரைக் கண்டித்து டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ‘‘ஆயிரம் ரோட்ஷோ நடத்தினாலும், ஆயிரம் காட்ஷோ நடத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் வடக்கே இருந்து வரும் வாடைக் காற்றை ஏற்கமாட்டார்கள். தெற்கே இருந்து வரும் தென்றலைத்தான் விரும்புவார்கள்” என்றும் கழகத் தலைவர் நயத்துடன் உவமித்து, ஒன்றிய அரசை விமர்சனம் செய்து பேசினார்.
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில், அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை எதிரில் 27.11.2025 அன்று மாலை 6.30 மணியளவில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி – இதுதான் திராவிடம், இதுதான் திராவிட மாடல் அரசு மற்றும் பெரியார் உலகம் நிதி யளிப்பு விழா” திறந்தவெளி பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம் அனைவரையும் வரவேற்க, தலைவர் அத்திவெட்டி வீரையன் தலைமையேற்று சிறப்பித்தார். தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சி.டி.சிவா, சி.பி.அய்.மாவட்ட நிர்வாகக் குழு பக்கிரிசாமி, வி.சி.க. சட்டமன்ற தொகுதிச் செயலாளர் சக்கரவர்த்தி, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சக்திவேல், வி.சி.க.மாவட்டச் செயலாளர் அரவிந்தகுமார், கழக சொற்பொழிவாளர்கள் பெரியார் செல்வன், முனைவர் அதிரடி க.அன்பழகன், நகர் மன்றத் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். மேடை ஒருங்கிணைப்பு நிகழ்வுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்து வாங்கிப் பயன் பெற மக்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசினார்.
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில்
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.17 லட்சம்
அதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் ‘பெரியார் உலக’ம் நிதி அளித்தவர்கள் பட்டியலை வாசித்தார். உரியவர்கள் மேடைக்கு வருகை தந்து கழகத் தலை வரிடம் காசோலையை மகிழ்ச்சியுடன் வழங்கிச் சென்றனர். வாசித்து முடித்ததும் திரட்டிய நிதி மொத்தம் ரூ.17 லட்சம் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். பிறகு நிதி திரட்டிய குழுவினர் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். கழகத் தலைவர் உள்பட, மாவட்டக் கழகத்தின் சார்பாக முன்னிலை ஏற்றவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார்.
திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை
பெரியார் உலகம் பேசும்!
பல நூற்றாண்டுகளின் அநீதியை ஒரு நூற்றாண்டில் களைந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம். பெரியார் பிறந்த போது அவர் கண்ட உலகம் வேறு; பெரியார் நமக்கு விட்டுச் சென்ற போது, அவர் உழைப்பில் மாற்றம் பெற்ற உலகம் வேறு என்பதற்கு சான்றாவணமாக, சரித்திர பூர்வமாக எடுத்துச் சொல்லக் கூடிய ஓர் அருமையான காட்சியகமாக இருக்கப் போவது தான் “பெரியார் உலகம்.”
அமெரிக்கா செல்லும் போது டிஸ்னி லேண்ட் உலகத்தைப் பார்க்கலாம். அதில் ஒரு பக்கம் அறிவியல் புரட்சி; தொழில் புரட்சி எப்படி இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதுபோலவே இன்னொரு பக்கத்தில் நாளைக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் காட்டியி ருப்பார்கள். அதுபோல திருச்சி சிறுகனூர் அருகில் பல நூற்றாண்டுகளுக்கு திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை பெரியார் உலகம் பேசும். எப்படி கீழடி மறைந்தாலும் அகழாய்வு செய்ததும் திராவிடர் நாகரிகம்; வரலாறு; சாதனைகள் புதைந்த நகரத்தில் காட்சியளித்தது போல், விளைந்த நகரம் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெரியார் உலகம் இருக்கும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தொடக்கத்தில், ‘‘அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களால் பட்டுக்கோட்டைக்கே பெருமை; ஒப்பற்ற கொள்கை வீரர்; சுயமரியாதை இயக்க பிரச்சாரகர்; தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்’’ போன்ற எண்ணற்ற பாராட்டுகளை எடுத்துரைத்து தமது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக இருந்த சண்முகப்பிரியா அவர்களைச் சுட்டிக்காட்டி பேசினார். அதாவது, “ஒரு பெண் நகர்மன்றத் தலைவராக எப்படி வரமுடிந்தது?’’ என்று கேள்வி கேட்டார். நமது முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தல்களில் 50 விழுக்காடு பெண்கள் கேட்காமலேயே ஒதுக்கீடு செய்தார். ஏன் செய்தார்? 100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் தீர்மானம் போட்டார். அந்தத் தீர்மானத்தைத் தான் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றியிருக்கிறார். பெரியார் இல்லாவிட்டால் இந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்குமா?” என்று திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால அரிய வரலாற்றை மக்கள் மனங்களில் கல்வெட்டைப் போல் நிலைநிறுத்தினார்.
சரிசமமாக உட்கார வைத்து ஜாதியை ஒழித்தவர்தான் தந்தை பெரியார்!
மேலும் அவர், செட்டிநாடு கானாடுகாத்தான் சிவக்கொழுந்து நாகஸ்வரம் வாசித்து அவமானப்பட்ட சம்பவத்தை விவரித்து, இறுதியில் அஞ்சாநெஞ்சன் அழகிரி மூலம் தந்தை பெரியாரால் அந்த அவமானம் துடைக்கப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டி, அதைத்தொடர்ந்து தந்தை பெரியாரின் கடைசி பிறந்தநாளில்; 95 ஆம் பிறந்தநாளில் சென்னை பெரியார் திடலில் நாகஸ்வரம் வித்துவான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் எதிர்பாராமல் அண்ணாமலை (செட்டியாரின்) மகன் ராஜா சர்.முத்தய்யா (செட்டியார்) நிகழ்வுக்கு வருகை தந்திருந்து சம்பவத்தை விவரித்தார். பிறகு, “எந்த சிவக்கொழுந்து வேர்வையைத் துடைக்க வைத்திருந்த துண்டைக்கூட தோளில் போடக்கூடாது என்று தடுக்கப்பட்டாரோ… அதே சமூகத்தைச் சேர்ந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களை ஒரு பக்கமும், எந்த சமூகத்தால் அவமானப்படுத்தப்பட்டாரோ அந்த சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த ராஜா சர்.முத்தய்யா (செட்டியார்) அவர்களை ஒருபக்கமுமாக சரிசமமாக உட்கார வைத்து ஜாதியை ஒழித்தவர்தான் தந்தை பெரியார்” என்று கூறியதும் கைதட்டல்கள் பலமாக எழுந்து அடங்கின. மேலும் அவர், தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகிய இரண்டும் என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் பலிக்கவில்லை என்று கூறுவதற்காக, ‘‘ஆயிரம் ரோட்ஷோ நடத்தினாலும், ஆயிரம் காட்ஷோ நடத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் வடக்கே இருந்து வரும் வாடைக் காற்றை ஏற்கமாட்டார்கள். தெற்கே இருந்து வரும் தென்றலைத்தான் விரும்புவார்கள்” என்று நாகரிகமாக; நயமாக ஒன்றிய பா.ஜ.க. அரசை; பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
பெரியாரின், உண்மைத் தொண்டர்களுக்கு
ஓய்வு எடுக்க மனம் வருமா?
என் மீது அக்கறை உள்ள பலரும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளக் கூடாதா என்று கேட்கின்றனர். தந்தை பெரியார் அவர்களின் 90 ஆம் வயதில் மருத்துவர்கள் பட் மற்றும் ஜான்சன் ஆகியோர் பெரியாருக்கு அறுவைச் சிகிச்சை செய்தனர். அதில் இயற்கையாக சிறுநீர் போவதற்குப் பதிலாக வயிற்றில் ஒரு குழாய் பொருத்தி அதை ஒரு பாட்டிலில் விட்டு, அந்த பாட்டிலை ஒரு பக்கெட்டினுள் வைத்திருப்பார்கள். அந்த பக்கெட்டுடனேயே 5 ஆண்டுகள் பெரியார் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றிப் பேசினார். சிறுநீர் தானாகப் போகும் போதும், அந்தக்குழாய் சற்று விலகிவிட்டாலும் வலியால் ‘‘அம்மா… அம்மா…’’ என்று முனகுவார். பின்னர் சமாளித்துக்கொண்டு தொடர்ந்து பேசுவார். புத்தரைப் போல் பெரியார் வசதி இருந்தும் அனுபவிக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் மறைவதற்கு 4 நாட்கள் முன்பு கூட, சென்னை தியாகராயர் நகரில், “உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே” என்றுதான் வேதனையுடன் பேசினார். இதைக் கேட்கும் அவரது உண்மைத் தொண்டர்களுக்கு ஓய்வு எடுக்க மனம் வருமா?
பா.ஜ.க.வின் ‘இரட்டை இன்ஜின்கள்’ ஆட்சி
ஜனநாயகத்தை பழுதாக்கி விட்டன!
தொடர்ந்து அவர், ஜாதி ஒழிப்பில் திராவிடர் இயக்கம் எப்படி தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட, “ஜாதி மறுப்புத் திருமணங்கள் உள்ளிட்ட ஜாதி ஒழிப்புப் பணிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் ஆணவக் கொலைகளும் ஒன்றிரண்டு நடந்துகொண்டுதான் உள்ளது. அதைக் களைவதற்கும் நமது கோரிக்கையை ஏற்று, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார் நமது முதலமைச்சர்” என்று திராவிடர் இயக்கத்தின் ஜாதி ஒழிப்புக் கொள்கை நீர்த்துப்போகாமல் இருப்பதை எடுத்துரைத்தார். ”இப்படிப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியைத் தான் ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, ‘‘பா.ஜ.க.வின் ‘இரட்டை இன்ஜின்கள்’ ஆட்சி ஜனநாயகத்தைப் பழுதாக்கி விட்டன. முதுகெலும்புள்ள தமிழ்நாட்டின் ஒற்றை இன்ஜின் மிகச்சரியாக ஓடுகிறது” என்றும் “ஒன்றிய அரசு பச்சையாகவே ஜனநாயக விரோதமான ஆட்சியை நடத்துகிறது’’ என்றும் “தமிழ்நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.ஆளுநர் அவதூறு செய்துகொண்டிருக்கிறார்’’ என்றும் ‘‘அதைக் கண்டிக்கும் விதத்தில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ளவர்களுடன் நடத்த இருக்கிறோம். சென்னையில் எனது தலைமையில் நடைபெறும் என்றும் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வர வேண்டும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றும் கூறி தமதுரையை நிறைவு செய்தார்.
சாதனை படைத்த மருத்துவர்கள்!
பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்த 100 பச்சிளம் குழந்தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து அரிய சாதனையைப் படைத்துள்ளனர் அரசு மருத்துவர்கள்.
கருப்புச் சட்டையில் உதயநிதி
சென்னை சைதாப்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் குறிப்பிடுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளில் கருப்புச் சட்டை அணிந்ததன் மூலம் தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
பெரும்பாலோனர்…
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இயங்கும் போதை மறுவாழ்வு மய்யத்தில் பெண்கள் உள்பட 2000 பேருக்குத் தரப்பட்ட மருத்துவ சிகிச்சை யில், பெரும்பாலோர் குணமடைந்து வீடு திரும்பினர்.
பங்கேற்றோர்
தி.மு.க.மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அசோக் ராணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரத்தினசபாபதி, செயலாளர் புலவஞ்சி காமராஜ், கழகக் காப்பாளர் அரு.நல்லதம்பி, நகரத் தலைவர் சிற்பி சேகர், பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் முத்து துரைராஜ், மாவட்ட வழக்குரைஞர் அணித்தலைவர் அண்ணாதுரை, பெரியார் பெருந்தொண்டர் காளிதாசன், மாவட்டத் துணைச் செயலாளர் சோம.நீலகண்டன், ஒன்றியத் தலைவர் ரெ.வீரமணி, ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் அரவிந்தகுமார், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கழக சொற்பொழிவாளர் ராம அன்பழகன், மாங்காடு மணியரசன், சிற்றரசு, மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரங்கசாமி, சேதுவாசத்திர ஒன்றிய தலைவர் ஜெகநாதன் ஆத்மநாதன் மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி அண்ணாதுரை ஒன்றிய செயலாளர் ஆடலரசு மதுக்கூர் என் கே ஆர் நாராயணன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மாணிக்க சந்திரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக நகரச் செயலாளர் தென்னவன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
