கடையநல்லூர், நவ.28– கடைய நல்லூர் அருகே பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தார்கள். இதில் தாயை இழந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி, அரசு வேலை வழங்கினார்.
7 பேர் உயிர் பறித்த விபத்து
தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் அருகே துரைச்சாமியாபுரம் காமராஜர் நகர் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இதில் புளியங்குடி டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த முத்துராமன் மனைவி மல்லிகா (வயது 55) தனது உறவினர்களுடன் துக்க வீட்டுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இவருக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளி கார்த்திகா (33) உள்ளிட்ட 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகனுக்கும். ஒரு மகளுக்கும் திருமணமாகி விட்டது. எம்.ஏ. ஆங்கிலம், பி.எட். படித்த கார்த்திகாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஆதரவின்றி தவித்த மாற்றுத்திறனாளிப் பெண்
மல்லிகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். இதனால் அவர் பீடி சுற்றி, பிள்ளைகளை வளர்த்து வந்தார். வயது முதிர்ந்த தாயாரையும், தனது பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகள் கார்த்திகாவையும் பராமரித்து வந்தார்.
விபத்தில் தாய் மல்லிகா இறந்ததால், ஆதரவற்று தவித்த மாற்றுத்திறனாளி கார்த்திகா கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. நிர்க்கதியாக தவிக்கும் அவருக்கு படிப்புக்கு ஏற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பணி நியமன ஆணை
இதனைப் பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (26.11.2025) காலையில் கைப்பேசியில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளி கார்த்திகாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிறிது நேரத்தில் புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள கார்த்திகாவின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் சென்றார். அவர், கார்த்திகாவுக்கு ஆறுதல் கூறி, புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
கார்த்திகாவின் உறவினர்கள் கூறுகையில், “கார்த்திகாவுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வழி இருந்தால், அதற்கு உரிய சிகிச்சை பெற அரசு உதவ வேண்டும். அவர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், விரைவில் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வழங்க வேண்டும்” என்றனர்.
