புதுடில்லி, நவ.28– குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) பெயர் இருந்தால் அவரை வாக்காளராக்க முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை ரத்து செய்யக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்குரைஞர் விவேக் சிங் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த ரிட் மனுக்களுடன் வாக்காளர் திருத்தப்பணியை தள்ளி வைக்கக்கோரி கேரள அரசும், மேற்கு வங்க அரசும் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜோய் மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (26.11.2025) விசாரித்தது.
விரைவாக…
ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் என்.ஆர். இளங்கோ, கபில்சிபல் புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா சார்பில் மூத்த வழக்குரைஞர் அமித் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் ராமசந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
தேவையற்ற பயம்
தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் தேவையற்ற பயத்தை அரசியல் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இந்த பணியால் உள்ளாட்சி தேர்தல் பணி என்று பாதிக்கப்படவில்லை மாநில தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது என்று வாதிட்டார்.
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை எதிர்த்த பிரதான மனுக்கள் மீதான விசாரணையின் போது, அ.தி.மு.க. தரப்பு வாதங்களையும் முன்வைக்க அனுமதிக்கவேண்டும்’ என்று மூத்த வழக்குரைஞர் சி.ஏ.சுந்தரம் வாதிட்டார்.
கூடுதல் அவகாசம்
அனைத்துத் தரப்பு வாதங் களுக்கு பிறகு நீதிபதிகள், ‘பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையத்திற்கு அளித்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தள்ளிவைக்கக் கோரிய கேரள அரசின் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக் கும், தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுகள் மீதான விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கும் தள்ளி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை எதிர்த்த பிரதான மனுக்கள் மீதான விசாரணையின்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர்கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பாமர, படிக்க தெரியாதவர்களை விண்ணப் பங்களை பூர்த்தி செய்ய நிர்ப்பந்திக்கின்றன. பூர்த்தி செய்ய மறுப்போர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது வாக்காளரின் பொறுப்பாகாது. விடுபட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.
வாக்காளருக்கு வீட்டு முகவரியை ஆதார் எண் வழங்குகிறது. ஆனால் குடியுரிமைக்கானது இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்குள் பணியை நிறைவு செய்ய முடியாது. மேற்கு வங்காளம், பீகாரின் தொலைதூர கிராம மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கூட தெரியாது. குடியுரிமையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தீர்மானிக்க முடியாது. ஒட்டு மொத்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தவறானது. அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது’ என்று வாதிட்டார்.
குடும்ப அட்டை
அப்போது நீதிபதிகள், ‘வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்க்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆதார் குடியுரிமைக்கான ஆவணமாக கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களில் ஒன்றாக ஆதார் எண் இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அரசின் திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண் உருவாக்கப்பட்டது. குடும்ப அட்டையில் பெயர் இருந்தால் அவரை வாக்காளராக்க முடியுமா? என்று கேள்விகள் வைத்தனர்.
