மும்பை, நவ.27 மாநில பாஜக தலைவர்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தான் புகார் அளிக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். மகாராட்டிராவில் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியிடையே சமீப காலமாகத் தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வந்தன. குறிப்பாக கல்யாண்-டோம்பிவிலி பகுதியில் சிவசேனா நிர்வாகிகளை பாஜக தங்கள் பக்கம் இழுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகத் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுடன் பேசி, இனி இரு கட்சிகளும் பரஸ்பரம் நிர்வாகிகளை இணைக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே டில்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ‘அடிவாங்கிய சிறுபிள்ளை போல அழுதுகொண்டு ஷிண்டே டில்லிக்கு ஓடுகிறார்’ என உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்தச் சூழலில், தனது டில்லி பயணம் மற்றும் உட்கட்சி பூசல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் டெல்லிக்குச் சென்று புகார் அளிக்கும் நபர் அல்ல; நான் ஒரு போராளி. மாநிலத் தலைவர்கள் மீதான அதிருப்தியை டில்லியில் முறையிட்டதாகக் கூறுவது தவறானது. அனைத்தும் ஊடகங்கள் உருவாக்கிய கற்பனையே’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ‘கூட்டணிக்குள் எழும் சிறு பிரச்சினைகளை நாங்கள் மாநில அளவிலேயே பேசித் தீர்த்துக்கொள்வோம். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கும், புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுமே டில்லி சென்றேன்’ என்று அவர் கூறினார்.
இருப்பினும், பாஜகவின் தீவிர கட்சிப் பணிகள் குறித்து அவர் அமித்ஷாவிடம் கவலை தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
