மதுரை, நவ.27– மதுரையை சேர்ந்த கதிர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு தயாரித்தது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதற்காக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த அறிக்கையை நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த ஒன்றிய அரசு சமீபத்தில், மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும் எனக்கூறி மதுரை, கோவைக்கான ெமட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது. மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மதுரையில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை சரி செய்து மீண்டும் அனுப்ப தமிழ்நாடு திட்டமிடல் மேம்பாட்டு துறையின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர், மதுரை ஆட்சியர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 16க்கு தள்ளி வைத்தனர்.
