வரலாறு படைத்த லால்குடி ஜாதி ஒழிப்பு மாநாடு!
ஜாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? ஜாதி என்பது வேர்; தீண்டாமை என்பது கிளை!
‘Caste is abolished’ என்று சட்டத்தைத் திருத்த வேண்டும்! பார்ப்பனர்களிடத்தில் ஜாதி ஆணவப் படுகொலை உண்டா? – சிந்திப்பீர்!
லால்குடி.நவ.27 ஜாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? ஜாதி என்பது வேர்; தீண்டாமை என்பது கிளை. ‘Caste is abolished’ என்று சட்டத்தைத் திருத்த வேண்டும்! ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் என்று ‘‘ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க மாநாடு மற்றும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டுவிழா” – மாநாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி போர்க்குரல் எழுப்பினார்.
காலை முதல் மாலை வரை
அடர்த்தியான நிகழ்ச்சிகள்!
லால்குடி கழக மாவட்டம் சார்பில், ‘‘ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க மாநாடு மற்றும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு” எனும் கருத்தில் ஒரு நாள் மாநாடு நேற்று (26.11.2025) காலை 10 மணி முதல் 3 மணி வரை பெரியார் திருமண மாளிகையிலும், மாலை 5 மணிக்கு செம்பழனியில் தொடங்கி, 6 மணி வரையில் கீழவாளாடி வரையிலும் ஜாதிஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், அதைத் தொடர்ந்து கீழவாளாடி பத்மாவதி பேலஸ் அரங்கில் மாலையில் நடைபெற்ற மாநாட்டில் கருத்தரங்குகள் மற்றும் மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள், தோழர் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? என்று அடர்த்தியான நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றன.

காலையில் பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்ற மாநாட்டை முன்னிட்டு அதன் அருகில் இருந்த நம்பர் ஒன் டோல்கேட் என்று சொல்லக்கூடிய நான்கு சாலை சந்திப்பிலும், அதன் சார்பு சாலைகளிலும் பதாகைகளும், கழகக் கொடிகளும் மிகச் சிறப்பாக அணிவகுத்து நின்றன. மாலை மாநாட்டில் கூடுதலாக வரிசையாக குழல் விளக்குகள் (Tube lights) கட்டப்பட்டு ஒளிர்ந்து மாநாட்டு நிகழ்வை பறைசாற்றிக் கொண்டிருந்தன. காலை, மாலை நிகழ்ச்சிகள், ஊர்வலம் என அனைத்து நிகழ்வுகளையும் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.
மாநாட்டுத் தொடக்கவுரை
மாலை அரங்க மாநாடு பத்மாவதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கீழவாளாடி பெ.சங்கப்பிள்ளை மற்றும் வி.எஸ்.சிங்காரவேலு ஆகி யோரின் நினைவாக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்பு ராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அரியலூர் சிந்தனைச் செல்வன், கழக மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், துறையூர் கழக மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன், திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், லால்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் செல்வி இணைப்புரை வழங்கி சிறப்பித்தார். மாலை மாநாட்டுக்குத் தலைமை தாங்கி வீரவணக்க உரையாற்றினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாநாட்டில் காலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு, அதன்பிறகு லால்குடி மாநாட்டு கருத்தரங்கிற்கு வருகை தந்தார். மேளதாளத்துடனும், அதிரும் கொள்கை முழக்கங்களுடனும் கழகத் தலை வருக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன!
அதைத் தொடர்ந்து காலை கருத்தரங்கத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சியான தீர்மான அரங்கம் நடைபெற்றது. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், 10 தீர்மானங்களை முன்மொழிந்தார். கருஞ்சட்டைப் படையினரின் தலைமைத் தளபதி ஆசிரியர் உள்பட கருஞ்சட்டைப் படையினர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி செய்து தீர்மானங்களை ஒருமனதாக வழிமொழிந்தனர். மேடை ஒருங்கிணைப்பைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நேர்த்தியாகக் கையாண்டு சிறப்பித்தார்.
ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப்
பாராட்டு – சிறப்பு!
அதைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்துச் சிறை சென்ற ஜாதி ஒழிப்பு வீரர்களான திரு மங்கலம் வை.மருதை (வயது 87), பெ.அங்கமுத்து (வயது 84), வீ.கோவிந்தன் (வயது 85), ச.மைக்கேல் (வயது 83), பிலவேந்திரன் (வயது 84) ஆகியோரைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.
‘பெரியார் உலக’த்திற்கு
ரூ.2 லட்சம் நிதி
லால்குடி மாவட்டத் தலைவர் வால்டேர் தமது குடும்பத்தினர் சார்பாக ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரான குழந்தை தெரசா, அமிர்த கணேஷ், நாத்திகா, அறிவுக்கரசி, ஆலன், பெரியார் பிஞ்சு சித்தார்த், பெரியார் பிரைன் உள்ளிட்டோர் நிதி வழங்கினர்.
தமிழர் தலைவரின்
எடைக்கு எடைக்கு நாணயம்!
முன்னதாக பெரியார் பிஞ்சு சித்தார்த் ஆசிரியர் முன்னிலையில் உரையாற்றி, பாராட்டு பெற்றார். அதைத் தொடர்ந்து கழகத் தலைவரின் 93 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு எடைக்கு எடை 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன.
நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டுக் கருத்தரங்கத்தின் நிறைவுரையை வழங்கினார். அவர் தமது உரையில், அம்பேத்கர் பாதிக்கப்பட்டார். அதனால் சிந்தித்தார். பெரியார் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், சிந்தித்தார் என்றும், ஜாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? என்ற கேள்வியை பெரியாரும், அம்பேத்கரும் ஒன்று போலக் கேட்டனர் என்றும், ‘Untouchability is abolished’ என்பதற்கு பதிலாக ‘Caste is abolished’ என்று சட்டம் செய்யும் வரை நமது பயணங்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
பெரியார் பிஞ்சுகளின்
சிலம்பாட்டம் – பேரணி!
மதிய உணவுக்குப் பின், காலையில் நடைபெற்ற மாநாட்டு அரங்கிலேயே கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4.30 மணிக்குப் பிறகு தனி வாகனத்தில் தோழர்கள் செம்பழ னிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேரணி தொடங்கும் இடத்தில் 5.30 மணியளவில் கழகக் கொடியை ஏற்றி வைத்து, பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மாவட்டக் கழகத் தோழர்கள் முன்னிலையில் பேரணியைத் தொடங்கி வைத்தார். பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் முன் வர, பேரணியினர் கட்டுப்பாடாக மாலை மாநாட்டு அரங்கிற்கு 6.45 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
மாலை மாநாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுவதற்கு முன்பு திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நிகழ்த்தினார். தொடர்ந்து கழகத் தலைவர் மாநாட்டு மேடைக்கு எழுச்சிகரமான கொள்கை முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டார். தொடக்கமாக கழகத் தலைவரின் எடைக்கு எடை நாணயங்கள் உள்பட 21 பொருள்கள் எடைக்கு எடை வழங்கப்பட்டன.
கழகத் துணைத் தலைவர்
கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய பாடல் ஒலிபரப்பு!
தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஜாதி ஒழிப்புப் போரில் லால்குடி மாவட்டத்தின் அரிய வரலாற்றுப் பங்களிப்பை விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதி, விஜய் பிரபு இசையமைத்து, தேசிய விருது பெற்ற பாடகர் சுந்தர் அய்யர் பாடி, சாய் காயத்ரி, இறைவி, சமா ஆகியோர் பின்னணிக்குரல் வழங்கி, பத்மநாபன் படத்தொகுப்பில், உடுமலை வடி வேல் ஒருங்கிணைப்பில், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் உரையாடல், பின்னணிக் குரலில் உருவான ஜாதி ஒழிப்புப் போராட்டம் பற்றிய எழுச்சியான காணொலி ஒன்று திரையிடப்பட்டது.
தமிழர் தலைவர் சிறப்புரை!
நிறைவாக கழகத் தலைவர் மாநாட்டின் சிறப்புரையை வழங்கினார்.
அவர், ‘‘லால்குடியில் மட்டும், தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போரில் 360 பேருக்கு மேல் கலந்து கொண்டனர் என்று தமது உரையைத் தொடங்கினார். ஜாதி ஒழிப்பு என்பது எவ்வளவு கடுமையான பணி என்பதைச் சுட்டிக்காட்ட, ’கண்ணுக்குத் தெரியாத எதிரி’ என்று ஜாதியை சித்தரித்தார். அதனால்தான் பெரியார் மூலத்திற்கே சென்று போராடினார். அப்படி மூலத்திற்கே செல்லும் போது தான், சாஸ்திர, சம்பிரதாயங்கள் வந்தன, மதம் வந்தது, கடவுள் வந்தது, அனைத்தையும் தூக்கிப்போடு என்றார். அதனால் தான் ஜாதியின் தாக்கம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இன்னமும் நமது பயணம் உள்ளது என்ற கருத்தில் உரையாற்றினார்.
மேலும் அவர் பெரியாரின் முதிர்ச்சியைப் பற்றி ஆழமான ஒரு கருத்தை எடுத்து வைத்தார். அதாவது, ஜாதி ஒழிப்புப் போரை காமராசர் முதலமைச்சராக இருக்கும் போதுதான் அறிவிக்கிறார். காமராசர் தலைமையிலான அரசுதான் சட்ட நகலை எரித்தால் மூன்றாண்டு சிறை என்று சட்டம் செய்கிறது. ஆனாலும், பெரியார் ஒரு கையில் காமராசர் ஆட்சியை பாதுகாத்துக்கொண்டும், இன்னொருகையில் அரசியலமைப்புச் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தையும் நடத்தினார் தந்தை பெரியார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியாரின் ஆட்சியை ஒழித்து, காமராசரை முதல மைச்சராகக் கொண்டு வந்து, காமராசர் குலக் கல்வியை ஒழித்ததின்மூலம் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு மேலோங்கச் செய்வதற்குக் காரணமாக இருந்தார் தந்தை பெரியார். அத்தகைய ஆட்சியைப் பாதுகாக்கவேண்டிய கடமையும், பொறுப்புணர்ச்சியும் தந்தை பெரியாருக்கு இருந்தது. “இப்படி ஒரு முதிர்ச்சியை உலகில் எந்தத் தலைவரிடத்தும் காணவியலாது’’ என்று வியந்து, அடுத்தபடியாக அதனினும் அதிக வியப்பு தரும் கருத்தை முன்வைத்தார். அதாவது, பெரியாரின் தொண்டர்களில் ஒருவராவது கைதாகும் போது, ‘காமராஜர் ஆட்சி ஒழிக’ என்று முழங்கவே இல்லை. இது எப்படிப்பட்ட கட்டுப்பாடு. இதுபோன்ற ஒரு தலைவர் ஒரு இயக்கம் இருக்குமா? என்று வியந்தார். தோழர்களையும் வியக்க வைத்தார்.
என்ன விலை கொடுத்தேனும்
ஜாதியை ஒழித்தே தீரவேண்டும்!
பார்ப்பனர் வீட்டில் ஜாதி மறுப்புத் திருமணம் நடந்தால் அவர்கள் கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்கிறார்களா? பார்ப்பனர்களிடையே ஜாதி ஆணவப் படுகொலைக்கு இடம் உண்டா? என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, பார்ப்பனரல்லாதாருக்கு மட்டும் இந்த ஜாதி வெறி எதற்கு? என்று கேள்வியைத் தொடுத்தார். மேலும் அவர், நாம் வெற்றிகள் பல பெற்றிருக்கிறோம். ஆனாலும், நமது இலக்கு ஜாதியற்ற, பாலியல் பேதமற்ற சமூகம். அதுவரையிலும் நமது பயணம் நிற்காது. என்ன விலை கொடுத்தேனும் ஜாதியை ஒழித்தே தீரவேண்டும். மூடநம்பிக்கைகளை தகர்த்தே தீரவேண்டும். அதற்கு ஏதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
லால்குடி பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் க.இளஞ்சேட்சென்னி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் அம்பிகா கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், துறையூர் மாவட்ட செயலாளர் சண்முகம், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் கோபால், விருதாச்சலம் மாவட்ட தலைவர் இளந்திரையன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் செந்தில்குமாரி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர பாண்டியன், கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 1957 இல் அரசிய லமைப்புச் சட்ட நகல் எரிப்பு – ஜாதி ஒழிப்புப் போராட்டம் எவ்வளவு வீரியமாக நடைபெற்றதோ அதே வீரியமான ஜாதி ஒழிப்பு உணர்வுடன் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் விடைபெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லால்குடி ஜாதி ஒழிப்பு மாநாடு – பேரணி – 26.11.2025


