டேராடூன், நவ.25 உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருமண விழாக்களில் துரித உணவு மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருமணம் என்பது ஒருவருடைய சமூக தகுதியைப் பிரதிபலிக்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண விழாவை எளிமையாக நடத்தினால், தங்களை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இதனால், கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கி யாவது ஆடம்பரமாகத் திருமணம் நடத்த வேண்டும் என்ற சமூக அழுத்தம் ஏற்படுகிறது. அதன் பிறகு கடன் சுமையில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தடை
இந்தச் சமூக அழுத்தத்தைக் குறைக்க, உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா வட்டத்துக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூட்டாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
திருமண விழாவை பாரம்பரிய முறைப்படி மட்டுமே நடத்த வேண்டும். விருந்தில் நூடுல்ஸ், மோமோஸ் மற்றும் இதர துரித உணவுப் பொருட்கள் இடம்பெறக் கூடாது.
விலை உயர்ந்த பரிசுப் பொருட் களை மணமக்களுக்குப் பரிசாக வழங்கக் கூடாது. நவீன இசைக் கச்சேரி மற்றும் மதுபான விருந்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறுவோருக்கு சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து சார்பில் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜவுன்சர் பவார் வட்டத்துக்குட்பட்ட கிராம நிர்வாகத்தினரும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
இதுகுறித்து கியாவா கிராமத்தைச் சேர்ந்த கர்மு பால் என்பவர் கூறும்போது, “திருமண விருந்தில் துரித உணவுக்குத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம், உள்ளூரில் விளையும் தானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பொருட்களைப் பரிமாற வேண்டும் என உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், இளம் தலைமுறையினர் பாரம்பரிய உணவுப் பொருட்களின் பிறப்பிடம் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்,” என்றார்.
