அன்று மருத்துவம் படிக்க ‘சமஸ்கிருதம்’ கட்டாயம்!
இன்று ‘கர்நாடக சங்கீதம்’ பயின்றாலே அய்.அய்.டி.யில் இடம் கிடைக்கும்!!
சென்னை அய்.அய்.டி. கர்நாடக சங்கீதம் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் திட்டத்தை அதன் இயக்குநர் காமகோடி அறிமுகம் செய்துள்ளார்.
சென்னை அய்.அய்.டி. என்பது இந்தியாவின் மிக முக்கியமான பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சமீபத்தில் நுண்ணிய ‘கலை & கலாச்சார சிறப்புத்திறன்’ என்ற சிறப்பு ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை அய்.அய்.டி.யில் இடங்கள் வழங்கப்படும். இது 2025-2026 கல்வி ஆண்டு முதல் (ஜூலை/ஆகஸ்ட் 2025) அமலுக்கு வந்துள்ளது.
அய்.அய்.டி. இயக்குநர் பேராசிரியர் காமகோடி முயற்சியில், இந்த ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது விளையாட்டில் ஒதுக்கீட்டைப் போலவே கலைத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாம்.
பொறியியல் படிப்புகளில் படைப்பாற்றல், கலாச்சார அறிவு ஆகியவற்றை இணைக்க, கலைகளில் சிறப்பாளர்களை ஈர்க்கும் கர்நாடக சங்கீதம் போன்ற இந்திய கிளாசிக்கல் இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் போன்றவற்றில் தேசியப் போட்டிகளில் வென்றவர்கள் தகுதி பெறலாம்.
கர்நாடக சங்கீதத்தில் தேசிய/அனைத்துலகப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். ‘ஆல் இந்தியா ரேடியோ’, ‘தூர்தர்ஷன்’ மற்றும் அரசால் நிர்வாகிக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
கர்நாடக சங்கீதம் என்பதில் வயலின், வீணை, மிருதங்கம் போன்றவை ஆகியவற்றை உள்ளடக்கியதாம்.
கர்நாடக இசையில் புலமை பெற்றவர்களுக்காக
அய்.அய்.டி. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை தளர்த்தி இவர்களுக்கு கிடைக்கும் இந்த இட ஒதுக்கீடு கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு (அதாவது பார்ப்பனர்களுக்கு) புதிய வாய்ப்பாம்.
எந்தெந்த வகைகளில் எல்லாம் உயர் கல்வியில் பார்ப்பனர்கள் உள்ளே நுழையலாம் என்பதை ‘அறை போட்டு (Room) யோசிப்பதில்’ பார்ப்பனர்களுக்கு நிகராக வேறு யாரைத்தான் காட்ட முடியும்?
இந்த அய்.அய்.டி. இயக்குநர்தான் மாட்டு மூத்திரத்ைதக் குடித்தால் நோய்கள் தீரும் என்று கூறிய ‘பிரகஸ்பதி!’
தொழில் நுட்பப் பொறியியல் துறையில் உச்ச நிறுவனம் என்ற போற்றப்படும் அய்.அய்.டி.க்கு இது போன்றவர்கள்தாம் இயக்குநர்களாம்! எங்கே போய் முட்டிக் கொள்வது!
விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைப் பார்ப்பன வட்டாரத்தில் காண்பது அரிது; ஆனால், வீணை, மிருதங்கம் போன்றவற்றில் முன்னணியில் இருப்பார்கள். அதற்காகத்தான் இந்தக் கொல்லைப்புற நுழைவு ஏற்பாடு.
‘இடஒதுக்கீடு வந்தால் தகுதி – திறமை போய்விடும்’ என்று கூப்பாடு போட்டவர்கள், இடஒதுக்கீட்டை இனி ஒழிக்க முடியாது என்று நன்கு புரிந்து கொண்ட நிலையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) என்ற பெயரால் பார்ப்பனர்கள் இடங்களை அள்ளிச் செல்லவில்லையா – அதில் இன்னொரு வாயிலைத் திறந்து விடுவதுதான் – சென்னை அய்.அய்.டி. இயக்குநரின் இந்த அறிவிப்பு!
இப்படி அறிவிக்கும் அதிகாரம் சட்டப்படி அய்.அய்.டி. இயக்குநருக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வியாகும்.
