அய்தராபாத், நவ.25– மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காய்ச்சல், சளி, ஜீரண மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியானவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருந்துகள் ஆய்வு
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளித்தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியானவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் [https://cdsco.gov.in/](https://cdsco.gov.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஆனால், உற்பத்தி நிறுவனத்தில் கடந்த மாதம் சோதனை நடத்தியதையோ, கோல்ட்ரிஃப் மருந்தை தரமற்றது என வரையறுப்பு செய்ததையோ, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்குத் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதனால்தான், தரமற்ற மருந்துகளின் விவரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் பெயர் இந்த மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
மூளைச் சாவு அடைந்த
இளம் பெண்ணின்
உடல் உறுப்புகள் கொடை
புதுக்கோட்டை, நவ.25- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்தவர் முருகேசுவரி (23). நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 21ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
முருகேசுவரியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தலைக்காய சிகிச்சை பிரிவில் இருந்த அவர், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை கொடை செய்ய அவரது தந்தை ஒப்புக்கொண்டார். இந்த கொடையின் மூலம், 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
