பாட்னா, நவ.25 பீகாரில் “புல்டோசர் ஆட்சியைத்” துவங்கியது பாஜக கூட்டணி அரசு. 5 மாவட்டங்களில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டது. பீகாரில் கூட்டாட்சியல்ல; பா.ஜ.க.வின் ஆட்சியே என்பதற்கு இதுவே தக்க சாட்சியாக அமைந்துள்ளது.
வாக்குத் திருட்டு, ரூ. 10,000 உதவி நிதி (லஞ்சம்), தேர்தல் ஆணையம் – பாஜக கள்ளக் கூட்டணியின் சதி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய அமைச்சரவையில் அய்க்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும், உள்துறை பொறுப்பை அவரிடம் இருந்து பறித்தது பாஜக. மேலும் அய்க்கிய ஜனதாதளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டம்மி பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு, உள்துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளை பாஜக கைப்பற்றியது. அதாவது பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதைவிட, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றே வெளிப்படையாகக் கூறலாம்.
ஆபரேசன் புல்டோசர்
இந்நிலையில், பீகாரில் ஆட்சி அமைத்த குறுகிய காலத்தில் பாஜக கூட்டணி அரசு நிர்வாகம் புல்டோசர் காட்டாட்சியைத் துவங்கியுள்ளது. பாஜக மூத்த தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான சாம்ராட் சவுத்ரி உள்துறை பொறுப்பை ஏற்ற சில மணி நேரத்திலேயே சமஸ்திபூர் மாவட்டத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் அறிவிப்பின்றி புல்டோசர் மூலம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.
தொடர்ந்து 22.11.2025 முதல் லக்கி சராய், சீதாமர்ஹி, டானாபூர் மற்றும் பாகல்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ச்சியான புல்டோசர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அடாவடி நடவடிக்கைக்கு “ஆபரேஷன் புல்டோசர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமஸ்திபூரில் கதறி அழுத மக்கள் சமஸ்தி பூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மால் கோடவுன் சவுக் பகுதியில் 15–க்கும் மேற்பட்ட கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. பல கடை மற்றும் வீட் டின் உரிமையாளர்கள் 10 நாள் கால அவகாசம் கோரினர். இடிக்க வேண்டாம் என கதறி அழுதனர். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் புல்டோசர் மூலம் அடாவடியாக கடை, வீடுகளை இடித்துச் சென்றது மாவட்ட நிர்வாகம்.
லக்கிசராய் நகரில் போராட்டம்
லக்கிசராய் நகரத்தின் மய்யப் பகுதியில் 23.11.2025 அன்று காலை குடிசை வீடுகள், கடைகள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன. இதனைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் போராட்டத்தை ஒடுக்கி, தொடர்ந்து புல்டோசர் நடவ டிக்கையை மேற்கொண்டது. அதேபோல சீதாமர்ஹி நகராட்சிப் பகுதியில் 23.11.2025 கவுஷாலா சவுக்கிலிருந்து புனவுரா தாம் கோவில் நுழைவாயில் வரை புல்டோசர் மூலம் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன.
நேற்று (24.11.2025) 2 ஆவது நாளிலும் நடவடிக்கை தொடர்ந்தது. அதே டானாபூர் மற்றும் பாகல்பூர் நகரங்களிலும் புல்டோசர் அடாவடி நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“வட்டிக் கடை”
பா.ஜ.க. கூட்டணி அரசு
புல்டோசர் மூலம் கடைகள், வீடுகளை அறிவிப்பின்றி இடித்த பின்பு, இவ்வளவு நாள்கள் ஆக்கிரமிப்பு நிலத்தைப் பயன்ப டுத்தியது சட்டப்படி குற்றம் என்ற பெயரில், அபாரதம் வசூலிக்கிறது பீகார் பாஜக கூட்டணி அரசு. புல்டோசர் நடவடிக்கையின் நிகழ்விடத்தில் அபராதம் செலுத்தவில்லை என்றால், கடை மற்றும் வீடுகளில் உள்ள பொருள்களை மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்கிறது. பொருள்களை மீண்டும் தர வேண்டுமானால், ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை பணம் கொடுத்து
விட்டு பொருள்களை பெற்றுச் செல்லலாம் என வட்டிக் கடை போல அறிவிப்பு வெளியிட்டு அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.
