புதுடில்லி, நவ. 25- மாநில ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார்.
ஆளுநர், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருந்ததால், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தது.
இதில் 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவர் கேட்டிருந்த விளக்கம் தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு விசாரித்தது. இதில் கடந்த 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது தொடர்பாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கமுடியாது என தீர்ப்பு வழங்கியது.
சமநிலையான தீர்ப்பு
இந்தத் தீர்ப்பு வழங்கிய அமர்வுக்குத் தலைமை வகித்தவரும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுமான பி.ஆர்.கவாய், 23.11.2025 அன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மேற்படி தீர்ப்பு குறித்தும் விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் விவகாரத்தில் காலக்கெடுவை மட்டும் தளர்த்தி இருக்கிறோம். அதே நேரம் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் காலவரையின்றி வைத்திருக்க முடியாது எனக்கூறி இந்த தீர்ப்பை சமநிலைப்படுத்தி இருக்கிறோம்.
காலக்கெடு இல்லாத இடங்களில் நீதிமன்றங்கள் அதை விதிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஆளுநர் காலவரையின்றி முடிவு எடுக்காமல் இருக்க முடியாது. அதிகமான காலதாமதத்துக்கு நீதித்துறை மறுஆய்வு உள்ளது.
இவ்வாறு நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
