புதுடில்லி, நவ.25- ” வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்அய்ஆர்) என்பது சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது,” என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓட்டுத் திருட்டு
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற போர்வையில் நாடு முழுவதும் குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த மூன்று வாரங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 16 பேர் மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலை என உயிரிழந்துள்ளனர். எஸ்அய்ஆர் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை.
குடிமக்கள் தங்களைக் கண்டுபிடிக்க 22 ஆண்டுகள் பழமையான வாக்காளர் பட்டியலின் ஆயிரக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களைப் புரட்ட வேண்டிய ஒரு அமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. நோக்கம் தெளிவாக உள்ளது. சரியான வாக்காளர்கள் சோர்வடைந்து கைவிடுகிறார்கள். மேலும் ஓட்டுத் திருட்டு தடையின்றி தொடர்கிறது.
இந்தியா உலகிற்கு அதிநவீன மென்பொருளை உருவாக்குகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு காகிதக் கட்டை அமைப்பதில் சிக்கித் தவிக்கிறது.
நோக்கம் தெளிவாக இருந்தால், பட்டியல் டிஜிட்டலில் இருப்பதுடன், தேடக்கூடியதாகவும், இயந்திரம் படிக்கக்கூடியதாகவும் இருக்கும். 30 நாட்கள் என்ற கண்மூடித்தனமான வேலையை தள்ளுவதற்கு பதில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்த தேர்தல் ஆணையம் போதுமான நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எஸ்அய்ஆர் என்பது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி. குடிமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற அழுத்தத்தால் ஓட்டுச்சாவடி அலுவலர்களின் இறப்புகள் நடக்கின்றன. ஆனால், அவை நிராகரிக்கப்படுகின்றன.
இது தோல்வி அல்ல. இது ஒரு சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்தப் பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
