புதுச்சேரியில் எஸ்.அய்.ஆர் பணியை கைவிடக் கோரி இளைஞர் காங்கிரஸார் முற்றுகை போராட்டம்!

2 Min Read

புதுச்சேரி, நவ.24– புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ரத்து செய்ய கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

அதன்படி 22.11.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா மற்றும் நிர்வாகிகள் பலர் விவிபி நகர் அருகே திரண்டனர்.

காவல் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையின் நடுவே பேரிகார்டு அமைத்து தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். விவிபி நகர் அருகே ஒன்றுகூடிய காங்கிரஸார் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட்டனர்.

அப்போது, இந்திய தேர்தல் ஆணையரின் உருவ பொம்மைக்கு மாலை அணிவித்து சவப்பாடையில் வைத்து தூக்கி வந்தனர். அதனை கண்ட காவல் துறையினர் சவப்பாடையை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் காவல் துறையினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருப்பினும், அவர்களிடமிருந்து காவல் துறையினர் சவப்பாடையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் காங்கிரஸார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது, அவர்களை ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மூலம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முயன்ற நிலையில் மீண்டும் காவல் துறையினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் காங்கிரஸார் சாலையில் அமர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையருக்கு எதிராகவும், வாக்கு திருட்டில் ஈடுபடும் பிரதமர் மோடி பதவி விலக கோரியும், வாக்காளர் சிறப்பு தீவிர சிறத்த பணியை ரத்து செய்ய வேண்டுமெனவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் வைத்திலிங்கம், மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி,  சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக வழுதாவூர் சாலையில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் விவிபி நகர் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கோரிமேடு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தின்போது மாநில தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் வாக்காளர்களை நீக்குவதற்கான வேலைகளை பாஜக அரசு செய்கிறது.

இந்த பாஜக அரசே ஓட்டு திருடும் அரசாக உள்ளது. பட்டியலின மக்கள், ஏழைகளின் ஓட்டுகளை நீக்கி, அவர்களது கேள்வி கேட்கும் அதிகாரத்தை பறிக்கிறது. ஏழை மக்கள் கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் எண்ணம். அதுவும் சர்வாதிகாரத்தின் கடைசி நிலை. அடுத்த கட்ட சர்வாதிகாரம்தான்.

இன்று ஓட்டு இல்லை என்பார்கள், பிறகு அவர்களே ஓட்டு போட்டுக் கொண்டு நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என்பார்கள். “மோடி தன்னை ஒரு சர்வாதிகாரியாக அறிவித்துக் கொள்ளக் கூடிய நிலைபாட்டை தற்போது பார்க்கிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *