தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுவதா? காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்!

சென்னை, நவ. 24– ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளதாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்களில் 15 சட்டங்களை முழுமையாக ரத்து செய்துவிட்டு, 29 சட்டங்களாக திருத்தி அதை 4 சட்டத் தொகுப்புகளாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இது வெறும் தொகுப்புச் சட்டமல்ல. தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் சட்டமாகும். அம்பானி, அதானி போன்றவர்களுக்கு சாதகமாக இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. தொழிலாளர் நலன்களுக்கு எதிரான இந்த தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: பாஜக அரசு புதிதாக இயற்றியிருக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் எல்லாவிதமான பணிகளையும் ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவதற்கு இடமளிக்கிறது. இது இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்தும். பெண் தொழிலாளர்களை இரவுப் பணிகளிலும், உயிருக்கு ஆபத்தான பணிகளிலும் ஈடுபடுத்தும் தடை நீக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடுவதற்கான உரிமைகள் தரும் சட்டங்களை பாஜக அரசு ஒழித்துக் கட்டி விட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீர பாண்டியன்: ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தியுள்ள 4 சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இனி எங்கும் நிரந்தர தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள். எந்த காரணமும் இல்லாமல் தொழிலாளர்கள் நீக்கப்படுவார்கள். சங்கம் கோரும் உரிமை, கோரிக்கை வைக்கும் உரிமை பறிக்கப்படும். பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு மறுக்கப்படும். தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் நவீன கொத்தடிமைகளாக ஆக்கப்படும் ஆபத்து உள்ளது. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தினக்கூலிகளாக மாற்றப்படுவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *