அமராவதி, நவ.23 ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்ற சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவின் போது, நடிகையும் முன்னாள் உலக அழகியுமான அய்ஸ்வர்யா ராய் பச்சன், “ஒரு ஜாதிதான் உள்ளது. அதன் பெயர் மனிதகுலம்” என்று உரத்த குரலில் பேசினார்.
பொதுவாக எந்த ஒரு அரசியல் அல்லது அரசு நிகழ்ச்சிக்கும் என்றுமே வராத அய்ஸ்வர்யா ராய், முதல் முதலாகக் கலந்துகொண்ட இந்த முக்கியமான நிகழ்வில் பேசியதாவது:
“உலகம் முழுவதும் ஒரே ஜாதிதான் உள்ளது. அதேபோல் ஒரு மதம்தான் உள்ளது. அந்த மதத்தின் பெயர் அன்பு. அதேபோல் ஒரு மொழிதான் உள்ளது. அந்த மொழி இதயத்தின் மொழி. ஒரேயொரு கடவுள்தான் உள்ளார். அவர் தான் எங்கும் நிறைந்துள்ளார்.”
மோடியின் முன்பே
‘ஒரே ஜாதி’ முழக்கம்!
நாடு முழுவதும் ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை, ஒரே உடை, ஒரே சந்தை என்று பல ‘ஒரே’ திட்டங்களைப் பற்றிப் பேசும் பிரதமர் மோடி, ‘ஒரே ஜாதி’ என்று அறிவிப்பாரா? என்று அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அய்ஸ்வர்யா ராயின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிரதமர் மோடியின் முகத்திற்கு முன்பே, அவர் ‘ஒரே ஜாதி’ குறித்த தனது கருத்தை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அய்ஸ்வர்யாவின் இந்தப் பேச்சின் போது, பிரதமர் மோடி அதை ரசிக்க முடியாமல், இறுகிய முகத்தோடு அவர் அமர்ந்திருந்ததைக் கேமராக்கள் பதிவு செய்தன. சமூக நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலி யுறுத்தும் அவரது வார்த்தைகள், பிரதமர் பங்கேற்ற மேடையிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
