பாட்னா, நவ. 22- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, ஊழல்வாதிகளாலும் குற்றப் பின்னணி உள்ளவர்களாலும் நிறைந்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவை ஊழல்வாதிகளாலும் குற்றப் பின்னணி கொண்டவர்களாலும் நிறைந்துள்ளது. இதன் மூலம், பீகார் மக்களின் கன்னத்தில் அறையப்பட்டுள்ளது. காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, பல ஊழல் தலைவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கோ, முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கோ பீகார் மீது அதிக அக்கறை இல்லை என்பதை இதன் மூலம் அவர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.
தற்போது, நான் ஏதாவது சொன்னால், மாநில அரசு என்னை சிறையில் அடைக்க முடியும். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 10,000 செலுத்தி அவர்கள் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளனர். இந்த பண பரிமாற்றத்துக்காக மாநிலத்தின் அவசரகால நிதியும், உலக வங்கியிடம் இருந்து பெற்ற நிதியும் திருப்பிவிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, பெண்களுக்கு தலா ரூ. 2 லட்சம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அடுத்த 18 மாதங்களுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இந்த அரசாங்கத்தின் தவறான செயல்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இதற்காக, பீகார் நவ நிர்மான் சங்கல்ப யாத்திரையை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த யாத்திரையில் நானும், ஜன சுராஜ் கட்சித் தொண்டர்களும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்வோம். அதற்கு முன்பாக, நாங்கள் எங்கள் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவோம்.
டில்லியில் உள்ள எனது வீட்டைத் தவிர, கடந்த 20 ஆண்டுகளில் நான் சம்பாதித்த வற்றில் 90%அய் கட்சியின் பிரச்சாரத்துக்காக நன்கொடையாக வழங்க இருக்கிறேன்.
பீகார் மக்கள் ஆண்டுக்கு ரூ.1,000 கட்சிக்கு நிதியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தொகையை வழங்காத எவரையும் நான் சந்திக்க மாட்டேன். காந்தியாரின் பொறுமை மற்றும் விடா முயற்சியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் அரசாங்கத்தை மாற்றுவோம். இம்முறை அவர்கள் எங்கள் மன உறுதியை குலைக்க முயன்றனர். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்.” என தெரிவித்தார்.
