பீஜிங், நவ. 22- சீன வீரர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து, சீனாவுக்கான விமானப் போக்குவரத்து, சீனக் குடிமக்களுக்கு நுழைவாணை (விசா) போன்றவை ரத்து செய்யப்பட்டன. அத்துடன் சீனாவில் பல செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில், இந்திய – சீன உறவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன்படி, எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதென கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவின் கசன் நகரில் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பலனாக இரு நாடுகளும் நேரடி விமானப் போக்குவரத்தைக் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கின. மேலும், திபெத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சீனா அனுமதி வழங்கியது.
அடுத்த கட்டமாக கடந்த ஜூலை மாதம் சீனாவில் உள்ள சீனர்களுக்குச் சுற்றுலா நுழைவாணை (விசா) வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஜூ, ஹாங்காங் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் இந்தியச் சுற்றுலா விசா பெற அனுமதிக்கப்பட்டது. இந் நிலையில், உலகம் முழுவதும் உள்ள சீனர்கள், அந்தந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் சுற்றுலா நுழைவாணை விசா பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
