கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு!

2 Min Read

சென்னை, நவ.22- கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, ” 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)

7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்” என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தும் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.

மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *