‘‘நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்!’’ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விடைபெற்றார் பி.ஆர்.கவாய்

2 Min Read

புதுடில்லி, நவ.22 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து விடைபெறும் விழாவில் ‘‘நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்!’’ என்றார் நீதிபதி பி.ஆர்.கவாய்.

உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய்  கடந்த மே மாதம் 14 ஆம் தேதி பதவியேற்றார்.  24.11.2025 அன்று பி.ஆர்.கவாய்க்கு 65 வயதாகிறது. அதனால் அலுவல் நாளான நேற்று (21.11.2025) அவர் பணி ஓய்வு பெற்றார்.  இந்நிலையில், தனது இறுதி பணி நாளன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு பாராட்டு விழாவில் பி.ஆர்.கவாய் பேசுகையில்,

அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை!

“உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறேன். 1985ஆம் ஆண்டு சட்டத்துறை மாணவராகச் சேர்ந்தேன். இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாக விலகுகிறேன். அரசியலமைப்புச் சட்டம் நிலையான தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது  எப்போது வேண்டுமானாலும் பரிணாமம் அடையும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒரு வழக்கு ரைஞராகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த போதும் இதனை அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கு சேவை செய்வதற்கான, தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நம்பியிருக்கிறேன்.

எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில்…

அம்பேத்கரின் போதனைகளிலி ருந்தும், அரசியலமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு 1949 நவம்பர் 25ஆம் தேதி அவர் ஆற்றிய கடைசி உரையிலிருந்தும் தான்  நான் உத்வேகம் பெறுவேன். டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக வாதிட்டார். அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சம நிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட,  எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவை கடைகோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும். நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்” என அவர் தெரி வித்தார்.

2010ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியல் ஜாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஆவார். 6 மாதங்களாக பதவி வகித்த   பி.ஆர்.கவாய், புத்த மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற பி.ஆர்.கவாய் பண மதிப்பிழப்பு செல்லுபடியாகும் மற்றும் தேர்தல் பத்திரத் திட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்பு தன்மை குறித்து தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வின் ஒரு  பகுதியாக இருந்தார். அதே போல  எஸ்சி, எஸ்டி  இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டு  அனுமதி குறித்த உச்சநீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்விலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி  வழங்கி வந்த சட்டப் பிரிவு 370  ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்விலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளு நருக்கும் நீதித்துறை காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்ற தீர்ப்பிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *