கர்நாடக சங்கீதம் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடாம்!
சொல்கிறார் அய்.அய்.டி. பீடாதிபதி காமகோடி
கர்நாடக சங்கீதம் படித்த வர்கள் ஜே.இ.இ. தேர்வு மூலம் அய்.அய்.டி.யில் சேர்வதற்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
“சிறுவயது முதலே கர்நாடக சங்கீதத்தில் கடுமையாகப் பயிற்சி பெற்ற குழந்தை களுக்காக, சென்ற ஆண்டு முதல் சென்னை அய்.அய்.டி.யில் ஒரு சிறப்பு இடஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளோம். அதை இடஒதுக்கீடு என்று நாங்கள் குறிப்பிடவில்லை, ‘கலை மற்றும் கலாச்சார சிறப்புச் சேர்க்கை’ என்று குறிப்பிட்டுள்ளோம்.
அதன் மூலம் நடப்பாண்டில் சுமார் 7 கர்நாடக இசைக் கலைஞர்கள் அய்.அய்.டி.யில் பி.டெக் படிப்பில் சேர்ந்துள்ளனர். சங்கீதம் கற்கும் குழந்தைகள் ஜே.இ.இ. தேர்வுக்காக இசைப்பயிற்சியை நிறுத்திவிடுவதாக சிலர் கூறுகின்றனர். கலையைக் கொலை செய்வதற்கு ஜே.இ.இ. ஒரு காரணமாக இருக்க வேண்டாம் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சங்கீதம் கற்றுக் கொண்டவர்கள், அவர்கள் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் சில தகுதிகளின் அடிப்படையில் ஜே.இ.இ. தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலும், அவர்களுக்கு ஒரு முன்னுரிமை கொடுக்கப்படும். குழந்தை கள் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தால், ஜே.இ.இ. தேர்வுக்காக அதனை நிறுத்த வேண்டாம். பிற்காலத்தில் சென்னை அய்.அய்.டி.யில் சேர்வதற்கு அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
இந்த திட்டத்தை மற்ற அய்.அய்.டி. கல்லூரிகளிலும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். 23 அய்.அய்.டி. கல்லூரிகளிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் சுமார் 500 இடங்கள் கிடைக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி வாருங்கள், காமகோடி
அய்.அய்.டி. பீடாதிபதி அவர்களே!
இந்த அய்.அய்.டி.–க்கு நாங்கள் சொல்லும் விளக்கத்துக்கு அட்சரம் பிசகாமல் செயல்படுகிறீர்களே!
கர்நாடக சங்கீதத்துக்கு இட ஒதுக்கீடாம்! ஆனால், அது இட ஒதுக்கீடு இல்லையாம்! சிறப்புச் சேர்க்கையாம்!
‘இட ஒதுக்கீடு’ என்றால், சட்டப்படி கேள்வி எழும்! தமிழ்நாடு என்னும் சமூகநீதி மண் கொதித்து எழும் என்பதால், ‘டங் ஸ்லீப்’பில் சொன்னதைச் சட்டென்று திருத்திச் சொல்லியிருக்கிறார் ‘சிறப்புச் சேர்க்கை’ என்று!
எப்படி இருந்தால் என்ன?
எங்கள் வரிப் பணத்தில் நடக்கும் அய்.அய்.டி.யை, அய்யர், அய்யங்கார்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கும் சூழ்ச்சிதானே இது!
“ஊரான் வீட்டு நெய்யே… எங்க ‘அக்கிரகாரம்’ கையே!” என்று தங்கள் இஷ்டத்துக்கு எப்படி சீட்டை நீட்ட முடிகிறது? யார் கொடுத்த அதிகாரம் இது?
‘கலை மற்றும் கலாச்சாரச் சிறப்புச் சேர்க்கை’ (Fine Arts and Cultural Excellence) என்று அறிவிக்கப்பட்டபோது நமக்கு என்ன தோன்றியிருக்கும்? நம்மவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? அடடா, விளையாட்டுத் துறையைப் போல, கலைத் துறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அய்.அய்.டி.யில் இடம் என்பது எவ்வளவு முக்கியமான புது முயற்சி. இது வரவேற்கப்பட வேண்டியதல்லவா? என்றுதானே நினைத்திருப்போம்.
இதோ, தெளிவாகச் சொல்லிவிட்டார் காமகோடியார்! கர்நாடக சங்கீதம் படித்தால் சிவப்புக் கம்பளம் விரித்து அய்.அய்.டியில் இடம் கிடைக்குமாம்! ஏற்கெனவே வேத பாட சாலையில் படித்தால், ஊக்கத் தொகையுடன் அய்.அய்.டி.யில் இடம் என்றார்கள். இப்போது கர்நாடக சங்கீதம் படித்தால் இட ஒதுக்கீடு!
நாளொன்றுக்கு ரூ.2200 (மாதம் ரூ.66000) சம்பாதிக்கும் (அதாவது வரு மான வரிக்குத் தகுதியான) பொருளாதார நிலையில் நலிந்த ‘அரியவகை ஏழை’ உயர்ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒன்றிய அரசு 10%-அய் அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதையும் தாண்டி, வருமானம் கொழிக்கும் பார்ப்பனர் பிள்ளைகளுக்கு எப்படி இடம் கொடுப்பது? அதற்குத் தான் இதெல்லாம்!
அது சரி, கலையிலும், கலாச்சாரத்திலும் ஜாதி இல்லாமலா? அதனால் தான், பறையிசைப்போருக்கு இட ஒதுக்கீடு என்றோ, தவில் வாசிப்பவர் – நாயனம் ஊதுபவர், நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு என்றோ சொல்லாமல், தெளிவாக கர்நாடக சங்கீதம் பயில்வோருக்கு இட ஒதுக்கீடு என்கிறார்கள்!
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே, இந்த சமூகநீதி மோசடிகளை எப்படிப் பொறுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் நாட்டில் இவையெல்லாம் சாமானியம் என்று சொல்லுமளவுக்குத் தோல் தடித்து விட்டதா?
