புதுடில்லி, நவ. 21- நாட்டில் 8 நிமிடத் துக்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக வெளி யான செய்தி கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக சிறப்பு அதிகாரியை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கெடுவிதித்தது.
வலைத்தளம் தொடங்க உத்தரவு
குரியா ஸ்வயம் சேவி சன்ஸ் தான் என்ற தொண்டு நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் கடத்தப்பட்டும். காணாமல் போயும் இன்னும் மீட்கப்படாத குழந்தைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி இருந்தது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் வலைத்தளம் தொடங்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நடந்த விசாரணையின் போது காணாமல் போன குழந்தைகள் விவகாரத்தை கையாள ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. அந்த அதிகாரியின் பெயர் மற்றும் கைப்பேசி எண்களை வலைத்தளத்தில் பகிருமாறும் கேட்டுக்கொண்டது.
தத்தெடுப்பில் சிக்கல்
இந்நிலையில், நீதிபதிகள் 18.11.2025 அன்று பி.வி.நாகரத்னா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி எச்.எம். நாகரத்னா கூறியதாவது:-
இந்தியாவில், ஒவ்வொரு 8 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை கடத் தப்படுவதாக ஒரு பத்திரிகையில் படித்தேன்.அச்செய்தி உண்மையா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது தீவிரமான பிரச்சினை. மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்தியாவில், தத்தெடுப்பு விவகாரம் சிக்கலாக இருக்கிறது. அதனால் குழந்தைகளை அடைய சட்டவிரோதமான செயல்களை மக்கள் நாடுகிறார்கள். எனவே, தத்தெடுப்பு விவகாரத்தை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கெடு
ஒன்றிய அரசு சார்பில் ஆஜ ரான கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) அய்ஸ்வர்யா பதி, காணாமல் போன குழந்தைகள் பிரச்சினையை கையாள சிறப்பு அதிகாரியை நியமிக்க 6 வாரங்கள் கால அவகாசம் கேட்டார்.
ஆனால் 6 வாரங்கள் அளிக்க மறுத்த நீதிபதிகள், டிசம்பர் 9ஆம் தேதிக்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறு ‘கெடு’ விதித்தனர்.
