தமிழகத் தோழர்களே! உங்கள் வட்டத்தில், ஊரில் பகுத்தறிவுக் கழகம், சிந்தனையாளர் கழகம், ஆராய்ச்சியாளர் கழகம் என்பனவாகியவைகளில் ஏதாவது ஒன்றைத் துவக்கி வைத்தீர்களா? இல்லாவிட்டால் அருள்கூர்ந்து உடனே பகுத் தறிவுக் கழகத்தைத் துவக்கி வைத்து எழுதுங்கள். தமிழ்நாட்டில் சென்னை முதல் அநேக இடங்களில் ஏற்படுத்தப்பட்டாய் விட்டது. மூட நம்பிக்கையால் அறிவிழந்த, மானமிழந்த தமிழர் பகுத்தறிவினால்தான் பெரிதும் மனிதனாக, மனிதத் தன்மை அடைய முடியும், முன்னேறவும் முடியும். இது உறுதி.
நம்நாட்டு ஜனநாயகம் மனித சமுதாயத்தின் ஒழுக்கம், நேர்மை, மானம், மரியாதை, மனிதத் தன்மை, அந்தஸ்து முதலிய மனிதப் பண்பு யாவையும் பெரிதும் கெடுத்து பாழாக்கி விட்டது.
அரசியல் சிப்பந்திகளை, உத்தியோகஸ்தர்களை, மாணாக் கர்களை, நன்றியற்றவர்களாக ஆக்கியதுடன் இனி எளிதில் தலையெடுக்க முடியாதபடி செய்து வருகிறதுடன் வருணாசிரம ஆட்சி ஏற்படுமோ என்று பயப்படவும் வேண்டி இருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும். இதற்கு ஆங்காங்கு பகுத்தறிவுக் கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
(தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை – ‘விடுதலை’ 28.11.1970)
