பள்ளியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் பகுத்தறிவை வளரச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப் பற்றி அதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கிச் சொல்லித் தரவேண்டும். பகுத்தறிவுப் போட்டிகள் வைத்து அதில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப்பற்றி போதிக் காததால், அறிவைப் பற்றி சொல்லிக் கொடுக்காததால், நமது மக்கள் கல்வி கற்றும் அறிவற்றவர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாக நமது நாட்டில் வளர்ச்சியே இல்லை. மற்ற நாட்டவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான அதிசய அற்புதங்களை அனுபவிக்கின்றோமே ஒழிய, நாம் கண்டுபிடித்தது என்று சொல்ல எதுவுமே இல்லை. காரணம், இதுவரை நமது மக்கள் கல்வி அறிவற்றிருந்தனர். இதுவரை நம் கல்விக்குத் தடையாக இருந்த கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவைகளைத் தூக்கி குப்பையில் எறிகின்ற நிலை வந்தபின் இன்று நமது மக்கள் 100-க்கு 50 பேர் படித்தவர்களாகி விட்டார்கள். இன்றைக்கிருக்கிற இந்த ஆட்சி இன்னும் 10 ஆண்டுகள் நிலைத்திருந்தால் நமது மக்கள் 100-க்கு 100-ம் படித்தவர்களாகி விடுவார்கள்.
நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பழைய முட்டாள்தனங்களைப் பின்பற்றியதன் காரணமாக இத்தனை நாட்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தோம்.
குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கின்றோமோ, அதுதான் கடைசிவரை இருக்கும். சிறு வயதிலேயே அவர்களுக்குப் பகுத்தறிவை ஊட்டினால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருப்பார்கள். முட்டாள்தனமான மூட நம்பிக்கையைப் புகுத்தினால் இறுதிவரை அவர்கள் முட்டாள்களாகவே இருப்பார்கள். ஆசிரியர்களாக இருப்பவர்கள் பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுப்பதோடு பகுத்தறிவைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அறிவாளிகளாக முடியும்.
அரசாங்கமே எல்லாக்காரியங்களையும் செய்வது இயலாது என்பதால் ஊர் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு அவ்வூருக்குத் தேவையானவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஊராட்சி மன்றங்கள் இல்லாதிருந்தாலும் அதன் வேலைகள் ஒன்றும் நிற்காது நடந்து கொண்டுதானிருக்கும். பின் ஊராட்சி மன்றத்திலுள்ளவர்களின் வேலை என்னவென்றால், மக்களின் அறியாமை, மடமை, மூட நம்பிக்கை ஆகியவைகளைப் போக்கி இழிவற்று அறிவோடு வாழச் செய்வதேயாகும். இப்படிப்பட்ட பதவிகள் பதவிக்காக அல்ல, கலவரத்திற்காக அல்ல என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.
ஊராட்சிமன்ற தோழர்கள் கட்சி சார்பின்றி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்திலிருக்கிற அண்ணன் தம்பிபோல் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் அறிவை வளர்க்கும்படியான மூட நம்பிக்கையினை ஒழிக் கும்படியான பணியினைச் செய்ய வேண்டும். பதவிக்காக இல்லை, தொண்டுக்காக இருக்கிறோம். மக்களுக்கு நம்மாலான தொண்டு செய்ய வேண்டுமென்கின்ற எண்ணம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்க வேண்டும்.
(21.7.1970 அன்று லால்குடி வட்டம் தாளக்குடியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை
– ‘விடுதலை’ 20.8.1970)
