இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 9.00 மணிக்குத் தொடங்கின. திறந்தவெளி அமர்வில் மூன்றுவித தொடக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. முதல் உரையினை கிஸ்ஃபுலோ (Kiss Flow) அமைப்பின் நிறுவனரும் – தலைமைச் செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் அவர்கள் ஆற்றினார்.
திராவிட மாடல் ஆட்சியில்
வளர்ச்சி – சிறப்பு அமர்வு
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைக் கூறுகள் எந்த அடிப்படையிலானவை என்பதை விளக்கிக் கூறிவிட்டு தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி நிலை குறித்து, நாட்டின் பிற மாநிலங்களின் வளர்ச்சியுடனும் பல நாடுகளின் வளர்ச்சியுடனும் ஒப்பிட்டுப் பேசினார். மற்றப் பகுதிகளின் வளர்ச்சியிலிருந்து தமிழ்நாடு எப்படிப்பட்ட நிலையில் தனித்து நிற்கிறது என்பதையும், சிறப்பாக இருக்கிறது என்பதையும் புள்ளி விபரக் குறிப்புகளடங்கிய ஒளிப்பதிவினைக் காட்டி பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கினார்.

அடுத்த உரையினை ஆற்றிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் ஓர் அருமையான தளத்தில் திராவிடர் வரலாற்றினை – வெளியில் இருந்து வந்தோர் காலம் தொடங்கி இன்று வரை உள்ளதை 10 நிமிட விவரணப் படமாக – விளக்கப்படமாக வெளியிட்டு உரையாற்றினார். அந்த விவரணப் படம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றினை காட்சிப் பதிவுகளாக விளக்கியது ஒரு புதிய அணுகுமுறையாகவும், அதில் பல்வேறு நிலைகளைச் சென்றடையலாம் என்பதற்கு ஆக்கப்பூர்வ நம்பிக்கையினைத் தருவதாகவும் அமைந்திருந்தது.
மூன்றாம் உரையினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி வழங்கினார்.

மனித நேயமும் பகுத்தறிவும்
தேநீர் இடைவேளைக்குப்பின் மாநாட்டின் அய்ந்தாம் அமர்வு தொடங்கியது. அமர்வின் தலைப்பு – ‘மனிதநேயமும் பகுத்தறிவும்’ (Humanism and Rationalism) என்பதாகும்.
முதன்மை உரையினை அய்க்கிய நாடுகள் அவையின் மேனாள் முதன்மை அரசியல் அதிகாரி ஆர். கண்ணன் வழங்கினார். அடுத்து கருநாடக மாநிலத்தில் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி பணிநிறைவு பெற்ற அர்கேஷ் கவுடா ‘இந்தியாவில் மனிதநேயமும் ஜாதிப் பாகுபாடும்’ (Humanism and Caste Discrimination in India) என்ற தலைப்பில் உரையாற்றினார். உலகில் அமைதி நிலவுவது அதற்கு முன்பு அனைவருக்கும் சமத்துவ நீதி வழங்கப்படும் நிலையில்தான் சாத்தியப்படும் (Justice must be prior to peace) எனும் உண்மைத் தேவையை பேச்சின் ஊடே சொல்லிச் சென்றது அரங்கில் உள்ளோரை சிந்தனை வயப்படச் செய்தது.

‘ஹ்யூமனிஸ்ட் ஆஸ்திரேலியா’
அடுத்ததாக ஹ்யூமனிஸ்ட் ஆஸ்திரேலியா (Humanists Australia) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மேரி அன்னி கோஸ்குரோவ் (Mary – Anne Cosgrove) ஒன்பது மனிதநேய நெறிகள் (9 Humanist Values) என்ற தலைப்பில் உரையாற்றினார். மாநாடு தொடக்கம் முதல் நிறைவு வரை இரண்டு நாள்களும் முழுமையாக அமர்ந்திருந்து மாநாட்டின் நிகழ்ச்சிகளை அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர் ஹ்யூமனிஸ்ட் அமைப்பின் பொறுப்பாளர்கள். மாநாடு நிறைவடைந்த பின்பு அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் ‘நாங்கள் இந்த மாநாட்டின் ஏற்பாடுகள், நிகழ்ச்சிகள் நடந்த விதத்தைப் பார்த்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். நிச்சயம் எங்களது அமைப்பு சார்ந்த நிகழ்வுகளையும் நடத்துவோம்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அடுத்ததாக ‘தமிழ், ஜப்பான் மொழிகளில் பகுத்தறிவு இலக்கியங்கள் (Rationalistic Literature in Tamil and Japanese Language) என்ற தலைப்பில் ஜப்பான்–டோக்கியோ நகரிலிருந்து பங்கேற்ற எஸ். கமலக்கண்ணன் உரையாற்றினார். சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும், ஜப்பான் இலக்கியங்களிலிருந்தும் பகுத்தறிவுக் கருத்துகளை, நடைமுறைகளை தேர்ந்து எடுத்து கருத்து விருந்தளித்தார். காட்சிப் பதிவுகளுடன் இலக்கிய வரிகளைப் பற்றிய விளக்கம் அளித்தது அனைவருக்கும் விளங்கும் வகையில் இருந்தது.

‘மலேசியாவில் திராவிடர் இயக்கங்கள்’ (Dravidian Movements in Malaysia) என்ற தலைப்பில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் – மலேசியா கிளையின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி அவர்கள் உரையாற்றினார். 19 & 20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்வாதாரம் வேண்டி பிரிட்டிஷாரின் ஏற்பாட்டில் அன்றைய மலேயாவிற்கு அனுப்பப்பட்ட தமிழர்கள்பட்ட அவலங்கள் பற்றியும், அந்த நிலையிலிருந்து மீண்டு மேம்பட தந்தை பெரியார் இரண்டு முறை (1929&1954) மலேயாவிற்குச் சென்று அவர்களைச் சந்தித்து உரையாற்றியதையும் விவரித்தார். அதற்குப் பின்னர் திராவிடர் இயக்கங்களின் பெருந்துணை அந்தத் தமிழர்களின் உரிமை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது இன்றைக்கு மலேசிய மண்ணுடன் அய்க்கியமாகி அந்தநாட்டு அமைச்சரவையிலும் தமிழர்கள் பங்கேற்றிடும் நிலைக்கு திராவிடர் இயக்கங்கள் அடித்தளத்தினை உருவாக்கியுள்ளன எனவும் தனது உரையில் எடுத்துக் கூறினார். அன்றைய காலத் தமிழர்கள் வாழ்ந்த சூழ்நிலைகளை படக் காட்சிகளாக காண்பித்தது தமிழர்கள் பட்ட இன்னல்களைப் புரிய வைத்தது.

அடுத்ததாக, திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், ‘பெரியார் ஒரு அங்கக அறிஞர் – சுயமரியாதைத் தத்துவம்’ (Periyar, an Organic Intellectual and Philosophy of Self-Respect) எனும் தலைப்பில் உரையாற்றினார். சமுதாயப் புரட்சிக்கு வித்திட்ட அறிஞர்கள் இருவகைப்படுவர். ஒருவகையினர் – அனங்கக அறிஞர்கள் (inorganic intellectuals); மற்றவர் அங்கக அறிஞர்கள் (organic intellectuals). ‘அனங்கக அறிஞர்’ என்பது முறையாக பள்ளி, கல்லூரி மற்றும் உயர் ஆராய்ச்சி படிப்பு என்று கற்ற நிலையில் ஒருவர் கருத்தும், செய்திகளும் அடங்கிய புரிந்துணர்வுடன் கூடிய அறிவு நிரம்பப் பெற்றவராவது.

‘அங்கக அறிஞர்’ என்பது முறையாகக் கல்வி கற்காதவர். சுற்றியுள்ள சமூகம், கேள்விப்படும் செய்திகள் பார்க்கப்படும் நிகழ்வுகள்மூலம் கருத்து நிரம்பப்பெற்ற அறிவை பெற்றவர்.
தந்தை பெரியார் முறையாக பள்ளி சென்று பயிலாதவர். தொடக்கக் கல்வியினை தொடராதவர். கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிட்டாதவர். தன்னுடைய சுயமுயற்சியில் எழுத்தை படிக்கவும், எழுதவும் கற்றவர். ‘சமூகநீதி பயிலும் பாடமாகக்’ கருதியவர். இத்தகைய மாறுபட்ட தன்மையினால் ‘அங்கக அறிஞர்’ என்று கருதப்பட வேண்டியவர். அங்கக அறிவு நிரம்பப் பெற்றவர்கள் ஒரு சமூகப் பிரச்சினை குறித்து கருத்து, மற்றும் தீர்வு சொல்வதில் கூட மிகவும் எதார்த்தமாக பேசுவார்கள். நடைமுறைப் படுத்துவதற்கான தெளிவு நிலையை உருவாக்குபவர்கள் எனலாம். எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான உரிமை பற்றிப் பேசுவது ஒரு முற்போக்குத் தன்மை வாய்ந்தது. பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளைப் பற்றி அனங்கக அறிஞரிடம் கேட்டால் ஒன்று, இரண்டு என பட்டியல் போடுவார்கள்.

தந்தை பெரியாரிடம் அந்த அங்கக அறிவுநிலை என்பது, ஒருமுறை செய்தியாளர்கள் ‘பெண்களுக்கு எந்தெந்த உரிமைகள் வேண்டும்’ எனக் கேட்கிறீர்கள் என வெளிப்படுத்தியபொழுது பெரியாரின் அங்கக அறிவுநிலை கூறியதாவது: “அதிகமான உரிமைகள் எவையும் வேண்டாம். ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளதோ அந்த உரிமைகளைக் கொடுத்தால் போதும்” என ‘பளிச்’ என பதிலளித்தார். எவ்வளவு பெரிய ஆழமான கருத்தினை பெரியாரின் அங்கக அறிவு நிலை எளிமையாக வெளிப்படுத்தியது. மேலும், உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்த புரட்சிகர அறிஞர்கள் மனிதநேயம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்த மனிதநேயத்திற்கு பலவகையான அடிப்படைகள் உண்டு. ஆனால் பெரியார் வலியுறுத்திய மனிதநேயமானது சுயமரியாதையை உணர்ந்து நடைமுறையாக வேண்டியது. மனித சமத்துவம் நோக்கிய பயணத்திற்கானது. இதைத்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சுயமரியாதை மனிதநேயம்’ (Self-Respective Humanism) என உலகம் முழுவதும் பரப்பிட வழி ஏற்படுத்தி வருகிறார். சுயமரியாதை சார்ந்த மனிதநேயம் உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் மனிதரும் மறுக்கமுடியாத தத்துவமாகும்.

‘மனிதநேயமும் உளவியலும்’ – அமர்வு
நண்பகல் உணவுக்குப் பின்னர் ‘மனிதநேயமும் உளவியலும்’ (Humanism and Psychology) எனும் தலைப்பிலான அமர்வு தொடங்கியது. அமர்வின் தொடக்கவுரையினை அமெரிக்கா – மிக்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராம். மகாலிங்கம் வழங்கினார். சுயமரியாதை என்பது கண்ணில் காட்ட முடியாததாக இருந்தாலும் மனிதரின் நன்மைக்கு அடிப்படை ஆதாரமாகும். அப்படிப்பட்ட சுயமரியாதையை அந்த பெயரைக் கொண்ட சுயமரியாதை இயக்கம் வளர்த்து வருகிறது. அதன் அருமையை பறைசாற்றி வருகிறது எனக் கூறினார்.
அடுத்ததாக, இங்கிலாந்தின் லீசெஸ்டரிலிருந்து வந்து பங்கேற்ற டாக்டர் செந்தில்குமார், ‘மதம், அறிவியல் மற்றும் பகுத்தறிவு பற்றி மனித மூளை’ (Human Brain on Religion, Science and Rationalism) எனும் தலைப்பில் பல அறிவியல் சார்ந்த விளக்கங்களை எடுத்துரைத்தார்.
இலண்டனிலிருந்து பங்கேற்ற ஹாரிஷ் மாரிமுத்து ‘பகுத்தறிவும் மகிழ்ச்சி அளவீடும்’ (Rationalism and Happiness Index) எனும் தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில் மனிதரின் நல்ல நிலைமை என்பது அவரது உள்நோக்கிய மனநிலையிலானது. மனித வாழ்வின் தரம் என்பது அவரவர் அனுபவப்படுவதில்தான் உள்ளது. (Well being is your inner subjective state; the quality of life is as you experience it) என்பதை பல அறிவியல் புள்ளி விபரங்களுடன் கூடிய பட விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.
அடுத்ததாக, ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் தங்கமணி– ஆஸ்திரேலியாவில் ஜாதியப் பாகுபாடு – வாழ்ந்த அனுபவங்களும் அதன் வெளிப்பாடுகளும் (Caste Discrimination in Australia – Lived Experience, Findings) எனும் தலைப்பில் உரையாற்றினார்.
கலை நிகழ்ச்சிகள்
தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்த சிறார்கள் மேடையேறி தமிழ் பாடல்களை பெரிதும் மனம் கனிந்து ரசித்துப் பாடினார்கள். 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாடு – கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டையொட்டி, வெளியிடப்பட்ட ‘செம்மொழியான தமிழ்மொழியாம்…’ பாடலையும், பாரதி, பாரதிதாசன் பாடல்களையும் பாடிக் காட்டினர். அச் சிறுவர்கள் பாடிய விதம், மிகுந்த பயிற்சி எடுத்தபின்பு பாடுவதுபோல, அவர்கள் பாடிய இசைத்தொனி தெரிவித்தது.
அமிர்தவர்ஷினி & லிடியன் நாதஸ்வரம் குறளிசைக் காவியம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் பியானோ இசைக் கருவியை வாசிப்பதில் அமெரிக்க நாட்டில் நடந்த போட்டியில் பங்கேற்று முதல் பரிசான ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வென்றவர். அவரது அக்கா அமிர்தவர்ஷினியும் நல்ல பாடகி. இருவரும் இணைந்து திருக்குறளின் 1330 பாக்களையும் இசையுடன் பாடி ”குறளிசைக் காவியம்” என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டு வருகின்றனர். அதன் 3–ஆம் பாகம் வெளியீடு மெல்போர்ன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியின் பொருட்டு அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்தனர். அவர்களை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அரங்கத்திற்கு அழைத்து வந்து பியானோ கருவியை வாசிக்கச் செய்தும், சில குறட்பாக்களை பாடச் செய்தும் மாநாட்டு பேராளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். குறட்பாக்களை இசைவடிவில், இனிய குரலில் பியானோ இசைக் கருவி பின்னணியில் பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருக்குறளை உலகெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு புது அத்தியாயத்தை தொடங்குவதாக இருந்தது. கலைஞர்கள் இருவரையும் மாநாட்டு மேடையில் விருந்தினர் முன்னிலையில் பாராட்டினர்.
மாநாட்டில் திராவிடர் கழகத்தினர்
மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக 21 பேராளர்கள் வந்திருந்தனர். பெரியார் மருத்துவ சேவை மய்யத்தின் இயக்குநர் – மருத்துவர் இரா.கவுதமன், மாநில ஒருங்கிணைப்பாளர் – ஊமை. ஜெயராமன், மகளிரணி மாநிலச் செயலாளர் – தகடூர் தமிழ்செல்வி, புதுச்சேரி மாநிலத் தலைவர் – சிவ.வீரமணி, காப்பாளர் – சடகோபன் (குடியாத்தம்) மாவட்ட தலைவர்கள் – முனைவர் ம. சுப்பராயன் (கள்ளக்குறிச்சி), வீரமணி ராஜீவ் (சேலம்) அவரது இணையர் வாசந்தி, வழக்குரைஞர் அமர்சிங் (தஞ்சை), மகளிரணி கலைச்செல்வி, மருத்துவர் த. அருமைக்கண்ணு – சண்முகநாதன் இணையர், மருத்துவர் எழில் – அன்பழகன் இணையர், பேராசிரியர் முனைவர். பிரபாகரன் (கும்பகோணம்), மணிவண்ணன் (குளித்தலை), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மூதறிஞர் குழு), பேராசிரியர். கலியபெருமாள், திராவிடர் கழகத் தோழர்கள் தங்கமணி – தனலட்சுமி இணையர் ஆகியோர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
– தொடரும்
