வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது.
அதி தீவிர காங்கிரஸ்வாதி யாகவும், அதி தீவிர தேசிய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும். அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால் அதற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.
இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத்துக்கும், விஷமப் பிரச்சாரத்துக்கும் ஆளாக வேண்டியதாய் இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியானது, பார்ப்பனரல்லாதாருக் குள்ளும் பிரிவினையையும் கட்சி பேதங்களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.
எது எப்படி இருந்த போதிலும், பல காரணங்களால் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்துவிட்டது.
இந்த நிலையானது, இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள். ஆனதால் அக்கொள்கை இனி மாற்றப்படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது. பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்து வரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் குறைவாக இருக்கின்றது. என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டாய் விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியே ஆகும்.
அய்க்கோர்ட்டு ஆட்சிக்குள்பட்ட இலாகாக்களில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை கையாளப்படாததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையேயாகும்.
ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ளதாக இருந்து, அக்கட்சித் தலைவர்கள் பொது நலத்தைவிட, சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர்களாய் இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார் களேயானால் 4, 5 வருஷங்களுக்கு முன்பாகவே, அய்க்கோர்ட் இலாகாவிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவமுறை அமுலுக்கு வந்திருக்கும்.
கட்சிக்குப் பலமும், ஒற்றுமையும் இல்லாதிருந்ததால், அய்க்கோர்ட்டாரை வகுப்புவாரி முறையைக் கையாளும்படி கட்டாயப்படுத்தத் தைரியமில்லாமல் போய்விட்டது.
என்றாலும் இப்போது பொது ஜனங்களுடய உணர்ச்சியானது அது விஷயத்தில் பலப்பட்டு விட்டதாலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாத மாதிரியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், இனி அதை யாராலும் அசைக்க முடியாது என்கின்ற நிலைபெற்று விட்டதாலும், இப்போது அய்க்கோர்ட் டாரையும், இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது.
அதாவது “தென் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 84 கிளார்க்குகள் வேண்டி இருக்கிறது. அவற்றுள்: பார்ப்பனரல்லாதார் 42, முகமதியர் 17, இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர், அய்ரோப்பியர் ஆகியவர்கள் 17, தீண்டப்படாத வகுப்பார் உள்பட மற்ற வகுப்பார் 8. ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியிருக்கிறது” என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
(இது 11.06.1935-ந் தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் இருக்கிறது)”
‘ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுமயரியாதை இயக்கம் என்ன செய்தது?’ என்று கேட்டவர்கள், இதைச் சிறிது கவனித்துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டுமென்று ஆசைப்படுகிறோம்.
(‘குடிஅரசு’ – தலையங்கம் – 23.06.1935)
