நீதிக் கட்சியை மக்கள் இயக்கமாக்கிய பெரியார்!-கோவி.லெனின் மாநில ஆலோசகர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி

6 Min Read

அன்றைய சென்னை மாகாணத்தில் பெரும்பான்மை மக்களான திராவிடர்களின் கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உருவான இயக்கம்தான் ‘நீதிக்கட்சி’ எனும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. 1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. சர் பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் மூவரும் இந்த சங்கத்தை உருவாக்குவதில் முதன்மையானவர்கள். பானகல் அரசர் எனப்படும் இராமராய நிங்கர், எம்.சி.ராஜா, டாக்டர் முகமது உஸ்மான், அகமது தம்பி மரைக்காயர், அலமேலு மங்கைத் தாயாரம்மாள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பார்ப்பனரல்லாத மக்களின் உரிமையை நிலைநாட்டிட வேண்டிய தேவையை எடுத்துரைத்தனர்.

நீதிக்கட்சி செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில், பெரியார் இருந்தது காங்கிரஸ் கட்சியில். அதிலும் குறிப்பாக, பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்காகக் குரல்  கொடுத்த நீதிக்கட்சிக்கு எதிராக, காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாத நிர்வாகிகளை முன்னிறுத்தி செயல்படுவதற்கான அமைப்பாக இருந்த சென்னை மகாஜன சங்கத்தில் பெரியார் இருந்தார். அவருடன் வரதராஜூலு நாயுடு இருந்தார். காங்கிரசின் முக்கிய பிரதிநிதியாக திரு.வி.க. இருந்தார்.

தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்தச் செய்வது போல, பார்ப்பனரல்லாத பிரதிநிதிகளை வைத்தே நீதிக்கட்சியை எதிர்க்கும் காங்கிரசின் போக்கை உணர்ந்த நீதிக்கட்சித் தலைவர் டி.எம்.நாயர் இது குறித்து 1919ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் ஏரிக்கரை மைதானத்தில் ஆற்றிய புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“காங்கிரஸ்காரரான டாக்டர் பி.வரதராஜூலுவிடம் நான் சொல்லுவேன். சீக்கிரமாகத் தாங்களும் தங்கள் தோழர்களான நாயக்கரும் (பெரியார்), பிள்ளைவாளும் (வ.உ.சிதம்பரம்), முதலியார்வாளும் (திரு.வி.க), தங்களைப் போன்ற காங்கிரசில் உள்ள மற்ற மற்ற பார்ப்பனரல்லாத பிரமுகர்களும் என் ஜஸ்டிஸ் கட்சி இலட்சியத்தை நாடி நீரெல்லாம் வந்தேதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்வது வழக்கம்”

டி.எம்.நாயர் சொன்னதுபோலவே, காங்கிரசில் பார்ப்பன அதிகாரம் மேலோங்கியிருப்பதை வைக்கம் போராட்ட வீரரரான பெரியார் விரைந்து புரிந்து கொண்டார். சேரன்மாதேவி குருகுலத்தில் மாணவர்களுக்கிடையிலான பாரபட்சமான உணவுப் பந்தி அப்பப்பட்டமான பார்ப்பன-வருணாசிரமத்தன்மையை வெளிப்படுத்தியதை பெரியார் கண்டார். இந்த காலகட்டத்தில், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்து பனகல் அரசர் முதல் பொப்பிலி அரசர் வரையிலான ஆட்சிக்காலத்தில்  வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை, இந்து அறநிலையச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, சட்டமன்றத்தில் பெண்களுக்கான பிரநிதித்துவம், பட்டியல் இன சமுதாயத்தினரை இழிவான சொற்களில் குறிப்பிடுவதற்கு தடை, பொது இடங்களில் அனைத்து சமுதாயத்தினருக்கான உரிமை, தேவதாசி முறை ஒழிப்பிற்கான முன்னெடுப்பு, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச உணவுத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக வகுப்புவாரி உரிமையை ஏற்க வேண்டும் என்பதையும் அதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் மகாநாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் பெரியார் வலியுறுத்தியபோது அது ஏற்கப்படாததால் பெரியாரும் அவரது தோழர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினர். 1925இல் ‘குடிஅரசு’ பத்திரிகையைத் தொடங்கியதுடன் ‘சுயமரியாதை இயக்கத்தை’யும் நடத்தினார் பெரியார்.

மக்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் முன்னோடியான இயக்கமாக நீதிக்கட்சி இருந்தாலும், அது மக்களின் நேரடித் தொடர்புள்ள இயக்கமாக இல்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட செல்வாக்குமிக்க தலைவர்களின் அமைப்பாகவே இருந்து வந்தது. இப்போது போல தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை என்பதும் அப்போது கிடையாது. சொத்து உடையவர்கள், பட்டதாரிகள் போன்றவர்களே வாக்களிக்கும் நிலை இருந்ததால், பெரும்பான்மை மக்களுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லாத சூழல் நிலவியது.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காந்தியார் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்று வந்தது. 1926ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரசார் பலர் சுயராஜ்ஜியக் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அந்தத் தேர்தல் களத்தில் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பெரியார் வேலை செய்தார். அவர் மீது காங்கிரசார் அவதூறுகளை அச்சிட்டுப் பரப்பினர். நீதிக்கட்சியிடம் பணம் வாங்கிவிட்டார் என்றும், வெள்ளைக்கார அரசுக்கு அடிமையாகிவிட்டார் என்றும் காங்கிரசின் பார்ப்பனத் தலைவர்கள் அவர்கள் சார்பான பத்திரிகைகளில் செய்திகளை வெளியிடச் செய்தனர். அந்தத் தேர்தலில் நீதிக்கட்சியைவிட சுயராஜ்ஜிய கட்சியும், சுயேட்சைகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

“நீதிக்கட்சித் தேர்தலில் தோற்றுவிட்டதால் பலவீனம் அடைந்துவிட்டது என்றோ, குடி மூழ்கிப்போய்விட்டதோ என்று கருதத் தேவையில்லை” என்று குடிஅரசு இதழின் தலையங்கத்தில் எழுதினார் பெரியார். அவர் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பிலான திட்டங்களை தயாரித்து நீதிக்கட்சியிடமும் காங்கிரசிடமும் முன்வைத்தார். பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்து, திராவிட சமுதாயத்தின் உயர்வை முன்னிறுத்தும் சமூக நீதிக் கொள்கை அடங்கிய அந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஏற்கத் தயங்கியது. நீதிக்கட்சி ஏற்க முன் வந்தது. அதனால் அவர் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

சைமன் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியில் 1938ஆம் ஆண்டு நடந்த மாகாணத் தேர்தல்களில்  நாடு முழுவதும் காங்கிரஸ் முதன்முறையாக நேரடியாகப் போட்டியிட்டது. சென்னை மாகாணத் தேர்தல் உள்பட 7 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி கடுமையான தோல்வியை சந்தித்தது. நீதிக்கட்சிக்காக பெரியார் தேர்தல் வேலை செய்தபோதும், கள நிலவரத்தை அறிந்தே இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, “நீதிக்கட்சி தோல்வி நமக்கு அனுகூலம்தான். வெற்றியைக் காட்டிலும் தோல்வியினால்தான் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்” என்பது பெரியாரின்  கருத்தாக வெளிப்பட்டது. நீதிக்கட்சியின் நோக்கங்கள் உயர்வானதாக இருந்தாலும், அதன் கட்டமைப்பு, செயல்பாடுகள், தலைவர்களிடையிலான பூசல்கள் ஆகியவை மக்களை அந்த இயக்கத்திடமிருந்து விலக்கி வைத்திருந்தன.

காங்கிரஸ் கட்சி தனது நோக்கமாக வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை என்பதை முன்வைத்தது. அதை மக்கள் இயக்கமாக மாற்றியது. நீதிக்கட்சி எந்த பார்ப்பனரல்லாத மக்களுக்காகத் திட்டங்களை செயல்படுத்தியதோ, அவர்களே அது பற்றி அறியாதவர்களாக இருந்தனர். மக்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்றினால்தான், இருநூறு ஆண்டுகால ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலையைவிட, இரண்டாயிரம் ஆண்டுகால ஆரியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுயமரியாதையாக வாழ முடியும் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்பதே பெரியாரின் இலட்சியம்.

அதிகாரப் பொறுப்புகளுக்குப் போட்டி போடுவதால் மட்டுமே இலட்சியப் பயணம் நிறைவேறிவிடாது என்பதையும் மக்களை அணி திரட்டுவதே இயக்கத்தின் முதன்மையான பணி என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கவும் குடிஅரசு, புரட்சி, விடுதலை, பகுத்தறிவு போன்ற ஏடுகளை நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு உரை உள்ளிட்டவற்றை வெளியிட்டார். அய்ரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் பயணம் செய்து முற்போக்கு இயக்கங்களின் செயல்பாடுகளை தெரிந்துகொண்டு, தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

ஆரிய அடிமைத்தனம் ஒழிந்திட சுய ஜாதிப் பற்றை நீக்கி, அனைத்து சமூகத்தினருடனும் ஒருங்கிணைப்பு, பாலின சமத்துவம், ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றுக்காக மாநாடுகளை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமணங்கள் மூலமாக ஆரிய ஆதிக்கத்தையும் – ஜாதிய மனநிலையையும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தகர்க்கின்ற நுட்பமான வேலையை செய்தார் பெரியார்.

சென்னை மாகாண காங்கிரஸ் முதலமைச்சரான இராஜகோபாலச்சாரியார், பள்ளிகளில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாகத் திணிக்க முற்பட்டபோது, பெரியார் எதிர்பார்த்த மக்கள் இயக்கமாக நீதிக்கட்சி மாறியது. போராட்டக் களத்தில் பெரியார் முன்னின்றார். அண்ணா உள்ளிட்ட அவரது இயக்கத்தினர் களம் கண்டு சிறை சென்றனர். தமிழறிஞர்கள், சமய நெறியினர், மொழிப்பற்று கொண்ட இளைஞர்கள் அணிவகுத்தனர். 73 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து சென்னைக்கு தமிழர் பெரும்படை நடந்தே வந்து, ஹிந்தி எதிர்ப்புணர்வை மக்களிடம் பரப்பியது. சென்னை கடற்கரையில் நடந்த மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் முழங்கினார். இராஜகோபாலாச்சாரியார் அரசு பெரியாரை கைது செய்து பெல்லாரி சிறையில் அடைத்தது. ஆனாலும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முன்னிலும் எழுச்சியாக நடைபெற்றது. நடராசன் – தாளமுத்து ஆகிய இருவர் ஹிந்தி ஆதிக்கத்திற்காக சிறை சென்று நோய்வாய்ப்பட்டு, தமிழுக்குத் தங்கள் உயிரைத் தந்தனர்.

சிறையில் பெரியார் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சித் தலைவராகப் பெரியாரையே தேர்ந்தெடுத்தனர். நீதிக்கட்சியின் தளகர்த்தராக விளங்கிய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, மாநாட்டு மேடையில் இருந்த பெரியாரின் படத்திற்கு அணிவித்து, இனி பெரியார்தான் நீதிக்கட்சியின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தினார்.

தோல்வியால் துவண்டிருந்த நிலையில் ஓர் இயக்கத்துடன் இணைந்து  நின்று, அதனை இலட்சியப் பாதைக்குத் திருப்பி, மக்களை அணிதிரட்டி, உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்று, நீதிக்கட்சியை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர் பெரியார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *