சென்னை, நவ.20- சென்னையில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
திட்டமிட்ட சதி
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பீகாரில் பா.ஜனதா கூட்டணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மை நொறுங்கி போய் உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.அய்.ஆர்.) திட்டமிட்ட சதி நடவடிக்கை.
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். நடைமுறை சிக்கல் ஏராளம் உள்ளது. பா. ஜனதா, தேர்தல் ஆணையத்தின் கூட்டு சதியை முறியடிப்போம். வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிற 24ஆம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஓங்கி ஒலிக்க வேண்டும்
இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தேசிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை. கடந்த 2002-ம் ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தியதாக தேர்தல் ஆணையம் பொய் கூறுகிறது. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சநீதிமன்றம் கோரியும் அதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையம் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதால், எதிர்ப்பு வாக்குகளை வாக்களிக்கவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்கு எதிராக அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளின் குரலும் ஓங்கி ஒலிக்கவேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டி உள்ளார்.
தி.மு.க. எதிர்ப்பு என்பதை மட்டுமே வைத்து த.வெ.க. அரசியல் செய்கிறது. அவர்கள் இன்னும் அரசியல் களத்தில் முழுமையாக வரவில்லை. த.வெ.க. எதிர்க்க வேண்டியது தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜனதாவை மட்டுமே. ஆனால், அக்கட்சி தலைவர் விஜய் பேசிய காட்சிப் பதிவில் பா.ஜனதா, தேர்தல் ஆணையம் பற்றி எதுவும்பேச வில்லை. தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை, தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
