ஆரியர்கள் நாடோடி வாழ்க்கை முறையில் இந்தியாவின் வட பகுதிக்கு கைபர், போலன் கணவாய் வழியாக நுழைந்து பரவிய காலம் சுமார் 5000 ஆண்டுக்கு மேற்பட்டது.
நாடெங்கும் பரவியிருந்த திராவிடர்கள், ஆரியர்கள் சூழ்ச்சியால் பகுதி அளவிற்கு தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். எஞ்சியோர் ஆரியர்களுடன் அடிமை வாழ்வு வாழப் பழகினர்.
மூவேந்தர்கள், பல்லவர்கள், நாயக்கர், ஆந்திரர், மராட்டியர், முகம்மதியர், ஆங்கிலேயர் என இந்தியாவைப் பலர் ஆண்டனர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பார்ப்பரல்லாத உயர் ஜாதியினர் கல்வி கற்று நிர்வாகப் பதவியில் இருந்தனர். இதுகண்டு பார்ப்பனர்கள் ஆங்கிலேயக் கல்வியைக் கற்கத் தொடங்கி அதிகாரப் பதவியில் அமரத் தலைப்பட்டனர். பார்ப்பனரல்லாத உயர் ஜாதியினர் பார்ப்பனர்கள் முன்னேற்றத்திற்கு உதவியாய் இருந்தது, பார்ப்பனர்களுக்கு மேலும் சாதகமாய் அமைந்தது. உதாரணத்திற்கு நாயக்கர் ஒருவர் சர்.டி. முத்துசாமி அய்யர் முதல் நிலைக்கு வர உதவியாக இருந்தார்.
‘இந்தியர்கள் என்றால் பார்ப்பனர்கள்’ – ‘இந்திய மயமாக்குதல் என்றால் பார்ப்பன மயம் ஆக்குவதே’ என்ற நிலைப்பாடு பிரிட்டிஷ் அரசுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தது. இதற்காகவே ஓர் அமைப்பு தொடங்கப்பட்டு பார்ப்பனரல்லாதார் நலம் காக்க வேண்டிய சூழ்நிலையில் சென்னை நகரத்தில் முதன் முதலாய் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தமன் (நாயுடு) ஆகிய இரு வழக்குரைஞர்களும் ‘தி மெட்ராஸ் நான் – பிராமின் அசோசிேயசன்’ எனும் அமைப்பைத் தொடங்கினர். அவ்வமைப்பு நீடிக்க இயலவில்லை.
நீதிக்கட்சியின் முழு நோக் கமும் வகுப்புவாரி விகிதாச் சாரப்படி கல்வி, வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். பார்ப்பன ஆதிக்கம் அனைத்து நிலையிலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.
அரசுத் துறையில் பணியாற்றிடும் பார்ப்பனரல்லாத உயர் அதிகாரிகள் – பார்ப்பன அதிகாரிகளின் கொடுமையிலிருந்து விடுபட, உரிமையை நிலைநாட்டிட 1912ஆம் ஆண்டு ‘தி மெட்ராஸ் யுனைடெட் லீக்’ எனும் அமைப்பை உருவாக்கினர். இதை உருவாக்க தஞ்சையைச் சேர்ந்தவரும் – பின்னாளில் டெப்டி கலெக்டராக இருந்தவருமான சரவணப் (பிள்ளை), ஜி. வீராசாமி நாயுடு, பொறியியல் துறை சேர்ந்த துரைசாமி (முதலியார்), வருவாய் துறையைச் சேர்ந்த நாராயணசாமி (நாயுடு) போன்றோர் காரணமாக இருந்தனர். இவ்வமைப்பின் செயலாளராக டாக்டர் சி. நடேசனார் செயலாற்றினார்.
பின்னர் இவ்வமைப்பிற்கு 10.11.1912இல் ‘சென்னை திராவிடர் சங்கம்’ என்று பெயரிடப்பட்டது. இதன் சிறப்புச் செயலாளர் டாக்டர் சி. நடேசனார் ஆவார். இவ்வமைப்பின் மூலம் ‘திராவிடர் மாணவர் விடுதி’ 1914இல் தொடங்கப்பட்டது.
இதில் படித்த பார்ப்பனரல்லாதவர்களான சர். ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) இந்தியாவின் முதல் நிதி அமைச்சரானார். டி.எம். நாராயண (பிள்ளை) அண்ணாமலை பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஆனார். சுப்பிரமணிய நாடார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார். இதன் மூலம் திராவிடர் மாணவர் இல்லத்தின் பெருமை பயன் எப்படிப்பட்டது என்பதை விளங்கிடலாம்.
சர். அலெக்சாண்டர் கார்டியு எனும் ஆங்கிலேய அதிகாரி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் 1913இல் சாட்சியம் அளித்தார்.
அச் சாட்சியத்தில், ‘ஏகக் காலத்தில் தேர்வுகளை நடத்தினால் ஒரு சிறு சமூகத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களே வெற்றி அதிகமாகப் பெறுவார்கள். மாகாண சிவில் சர்வீஸ் முழுவதும் பார்ப்பனமயமாகி விடும்’’ எனக் கூறினார்.
மேலும், 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீசுக்கு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றோரில்,
சிவில் சர்வீஸ் தேர்வில் 16 பேர்களில் 15 பேர்கள் பார்ப்பனர்கள்.
அசிஸ்டெண்ட் என்ஜினியர் 21 பேர்களில் 17 பேர் பார்ப்பனர்.
டெபுடி கலெக்டர் 140 பேரில் 77 பேர்கள் பார்ப்பனர்கள்.
நீதித்துறையில் மாவட்ட முன்சீப் 128 பேரில் 93 பேர்கள் பார்ப்பனர்.
1912இல் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தவர்கள்.
- செங்கல்பட்டு தொகுதி: வழக்குரைஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.
- தஞ்சை – திருச்சி தொகுதி: திவான் பகதூர் வி.கே. இராமானுஜ ஆச்சாரியார்.
- மதுரை – இராமநாதபுரம் தொகுதி : கே. இராம அய்யங்கார்.
- கோவை – நீலகிரி தொகுதி: சி. வெங்கட்ட ரமண அய்யங்கார்.
- சேலம் – வடஆர்க்காடு பி.வி. நரசிம்ம அய்யர்.
- சென்னை – சர். சி.பி. இராமசாமி அய்யர்.
டில்லி சட்டசபையில் இடம் பெற்றவர்கள்
- செங்கற்பட்டு மாவட்டம்: எம்.கே. ஆச்சாரியார்
- சென்னை : திவான் பகதூர் டி. ரங்காச்சாரி
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
- எஸ். சுப்பிரமணிய அய்யர்
- வி. கிருஷ்ணசாமி அய்யர்
- டி.வி. சேஷகிரி அய்யர்
- பி.ஆர். சுந்தர் அய்யர்
இன்னும் அரசுத்துறை நிறுவனங்களில் இருந்த பார்ப்பன ஆதிக்கப் பட்டியலுக்கு கட்டுரையில் இடம் போதாது என்பதால் மேற்கண்டவை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி – வேலை வாய்ப்பிற்காக முனைப்போடு சிந்தித்துத் திராவிடர் சங்கம் கண்டு – அதன்மூலம் திராவிடர் இல்லம் எனும் விடுதி அமைத்து எதிர்காலத்தில் மாபெரும் ஆளுமைகளை உருவாக்கிய டாடர் சி. நடேசனார் பார்ப்பனரல்லாத மக்களுக்காக ஓர் அரசியல் அமைப்பை தொடங்கிட விரும்பினர்.
அக்கால கட்டத்தில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்ட டாக்டர் நாயரும், மிகப் பெரும் செல்வந்தராய் அன்றைக்கு விளங்கியதோடு தன்னிடம் பணி செய்யும் பார்ப்பனர் மேஜையிலும் தான் மேஜைக்கு முன்பும் உட்கார வைக்கப்பட்ட அவமதிப்பின் மூலம் வர்ணாசிரமத்தைப் புரிந்து கொண்டிருந்த சர். பிட்டி. தியாகராயரும் இணைந்து பார்ப்பனரல்லாத மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கிட டாக்டர் சி. நடேசனார் சென்னை வேப்பேரி எத்திராஜ் முதலியார் இல்லத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பின், சென்னை விக்டோரியா ஹாலில் 20.11.1916இல் நடைபெற்ற கூட்டத்தில் ‘தென் இந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberation Federation) எனும் அமைப்பு உருவானது. இவ்வமைப்பு ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ (Justice) எனும் பத்திரிகை நடத்தியதால் ‘Justice Party’ என்று அழைக்கப்பட்டது. அதன் தமிழாக்கமே ‘நீதிக்கட்சி’ என்பதாகக் கட்சியின் பெயராகிவிட்டது. நீதிக்கட்சியின் கொடி ‘தராசு’ சின்னம் பொறிக்கப்பட்ட செங்கொடியாகும்.
‘நீதிக்கட்சி’ தொடங்கிய பின் 20.12.1916இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை சர். பிட்டி. தியாகராயரால் (Non – Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.
நீதிக்கட்சியின் முழு நோக்கமும் வகுப்புவாரி விகிதாச்சாரப்படி கல்வி, வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்; பார்ப்பன ஆதிக்கம் அனைத்து நிலையிலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்ற மாநாடுகள் அனைத்தும் ‘பார்ப்பனர் அல்லாதார் மாநாடு’ என்ற பெயரிலேயே நடத்தப்பட்டன.
நடைபெற்ற மாநாடுகள் விவரம்
19.8.1917 – கோவை
27.10.1917 – ஆந்திரா
03.11.1917 – இராயல சீமா
03.11.1917 – நெல்லை
09.12.1917 – சென்னை
நீதிக்கட்சி வெற்றி பெற்று பதவி ஏற்றதும் நடைபெற்ற சில முக்கிய சாதனைப் பட்டியல்:
வகுப்புவாரி உரிமை ஆணை கொண்டு வரப்பட்டது.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை கொண்டு வரப்பட்டது.
‘பேருந்தில் பஞ்சமருக்கு இடமில்லை’ என்ற வாசகம் நீக்கப்பட்டது.
குற்றப் பரம்பரை காவல் நிலையக் கையெழுத்து ஒழிக்கப்பட்டது.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
‘பொது இடங்களில் பஞ்சமருக்கு இடமில்லை’ என்றிருந்த நிலை ஒழிக்கப்பட்டது.
மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை நீக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்குப் பணி உயர்வு – உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன. மகளிர், குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக் கழகம் உருவாக்கப் பட்டது.
இப்படி எண்ணற்ற சாதனைகள் செய்திட்டது ஆட்சி 17 ஆண்டுகால நீதிக்கட்சியின் ஆட்சி.
நீதிக்கட்சியின் நீட்சிதான் இன்றைய தமிழ்நாட்டின் தி.மு.க. நடத்தும் ‘திராவிடர் மாடல்’ ஆட்சி. இந்தத் திராவிட மாடல்தான் வருங்கால இந்திய ஒன்றியத்தை ஆளும் மாடல்.
‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டபோது உருவான நீதிக்கட்சி, நூற்றாண்டைக் கடந்து திராவிட மாடல் ஆட்சியாக மாறி இந்தியாவையே ஆளப் போகிறது என்ற வரலாற்றுக்கு வேராக உள்ளது. நீதிக்கட்சியே திராவிடம் – திராவிடர் வெல்ல வழியமைத்தது!
