சென்னை, நவ. 19- சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து மாவட்ட வேலைவாய் ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மய்யத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்படும் முகாமில், 8, 10, 12ஆம் வகுப்பு, அய்டிஅய், டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் டிகிரி ஆகிய கல்வித் தகுதிகளை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
சீனா சொல்வது என்ன?
பெய்ஜிங், நவ.19- வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, டாக்காவின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் நேற்று முன் நாள் (17.11.2025) மரண தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தங்களிடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு இந்தியாவுடன் விரோத போக்கை எதிர்கொண்டு வருகிறது. அதேவேளையில் சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது.
இந்த நிலையில் சீனாவிடம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் “ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கபட்டது அவர்களுடைய உள்நாட்டு விவகாரம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “சிறந்த அண்டை நாடு மற்றும் நட்புறவு கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது.
வங்கதேசம் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடையும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம்” என்றார்.
