குடந்தை, நவ.19 தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் தோறும் பணிச்சுமை குறித்த ஊழியர்களின் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர் தற்கொலை முயற்சி
கும்பகோணத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சித்ரா, எஸ்அய்ஆர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இந்த பணிகளின் போது அவருக்கு அதிகமான அழுத்தம், நேரக் கட்டுப்பாடு மற்றும் சரியாக விளக்கமளிக்கப்படாத பொறுப்புகள் காரணமாக மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தரக்குறைவாக பேசியதாக சித்ரா தனது குடும்பத்தினரிடமும் சக ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சித்ரா, அதிகளவில் தூக்க மாத்திரைகள் விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர் கவிழ்ந்து கிடந்ததை கவனித்து உடனடியாக மீட்டு, கும்பகோண அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநகராட்சி ஆணையர் விளக்கம்
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாநகராட்சி ஆணையரின் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்தன. ஆனால் அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர், நான் எந்த ஊழியரையும் தரக்குறைவாக பேசியதில்லை. எஸ்அய்ஆர் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தினேன். பணிகளை எளிமைப்படுத்த கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையில், வருவாய் துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் பிற அரசு ஊழியர் அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன.
