புதுடில்லி, நவ. 18 –வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த த்திற்கு எதிராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர்.அய் எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், எஸ்.அய்.ஆர்.க்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கட்சியின் செயலாளர் பி.கே.குஞ்சாலி குட்டி தாக்கல் செய் துள்ள மனுவில், கேரளாவில் எஸ்.அய்.ஆர். பணிகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தேர்தல் அலுவலர் தற்கொலை செய்து கொண்டது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
மேலும், எஸ்.அய்.ஆர். பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
