பெரியார் சுயமரியாதை மனிதநேயத் தேவையைப் பறைசாற்றியது
ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும், அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து மெல்போர்ன் நகரில் 4-வது மனிதநேய பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக நடத்தின.
ஆஸ்திரேலியா – விக்டோரியா மாநிலம், மெல்போர்ன் நகர் – கிளன் எய்ரா டவுன் ஹால், கால்ஃபீல்ட் (Glen Eira Town Hall, Caulfield, Victoria) இடத்தில் நவம்பர் 1 & 2 ஆகிய இரு நாள்களில் உலகின் பல நாடுகளிலிருந்து – அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், கத்தார் மற்றும் இந்திய நாட்டிலிருந்து கருநாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் பேராளர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர்.
மனிதநேயம் – சுயமரியாதை, மற்றும் சமூகப் பிணைப்பு (Humanism-Self Respect-Social Cohesion) ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

2ஆவது பன்னாட்டு மாநாடு. 2019-அமெரிக்கா
தந்தை பெரியாரின் தத்துவத்தின் அடிப்படையே மனிதநேயம்தான்; மனிதர்களனைவரும் சமமானவர்கள் என்பதுதான் இதன் பொருள். இந்த சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கு பெரியார் வலியுறுத்தியது இரண்டு கூறுகளைத்தான். ஒன்று சுயமரியாதை மற்றது பகுத்தறிவு. சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையே இவை. சுயமரியாதையை எந்த ஒரு மனிதரும் இழந்துவிட சம்மதிக்க மாட்டார். பகுத்தறிவு தங்களுக்கு தொடர்பு இல்லாத ஒன்று எவரும் கூறிவிட முடியாது. ஆனால் எளிமையான இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்திட தந்தை பெரியார் கடுமையாகப் போராட வேண்டி வந்தது. இயக்கம் அமைத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. சுயமரியாதையை இழக்க விரும்பாத மனிதன் தனக்குரிய சுயமரியாதையை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் வாழ்ந்திட முடியாதா? பகுத்தறிவு தனக்குரியது என்று உணர்ந்தவர்கள் அதனை தங்களது அணுகுமுறையில் நடவடிக்கைகளில், காட்டிட முடியாதா? இதற்கு எது தடையாக இருக்கிறது? அதனை தகர்த்திட முயன்றார் தந்தை பெரியார். தடை செய்வது எவ்வளவு பெரிய சக்தியாக கருதப்பட்டாலும் அதனை எதிர்க்கும் துணிச்சலை வளர்த்தெடுத்தவர் பெரியார்.

3ஆவது பன்னாட்டு மாநாடு, 2022-கனடா
தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல நேரங்களில் சுட்டிக் காட்டிப் பேசுவார். கடவுளை எதிர்ப்பது பெரியார் இயக்கத்தின் கொள்கை அல்ல; கடவுள் கோட்பாடு, சடங்கு, வழிபாடு – இவை அனைத்தும் மனிதரிடையே சமத்துவத்தைக் கொண்டு வர மாபெரும் தடையாக இருக்கிறது. எனவே அதன் மீதான நம்பிக்கை நீக்கப்பட வேண்டும். சமுதாய சீர்திருத்தத்தைக் கொண்டு வர முனைந்த புரட்சியாளர் பலர் சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு கற்பித்த கடவுளை மறுக்க முன்வரவில்லை. அதனால், அவர்கள் முனைந்து பாடுபட்ட சீர்திருத்தங்கள் காலப்போக்கில் கரைந்து போய்விட்டன. நோயை நீக்கிட, நோயை ஏற்படுத்திடும் கிருமிகள் அழிக்கப்படுவதுதான் அறிவியல் சார்ந்தது. எனவே, பெரியார் கடவுள் மீதான நம்பிக்கையினை தகர்த்திட தொடர்ந்து பரப்புரை செய்தார். “கடவுள் இல்லை……” முழக்கத்தினை தனது இயக்கத்தின் செயல்பாட்டு முழக்கமாக்கினார். பகுத்தறிவு சார்ந்து மனிதர் தம்மை வளர்த்துக் கொள்வது சமத்துவத்திற்கு இட்டுச் செல்லும். பகுத்தறிவு நிலையின் தெளிவுதான் கடவுள் இல்லை என்பது. பகுத்தறிவு என்பது இயற்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் வாய்க்கப் பெற்றது. கடவுள் இல்லை என்பது பகுத்தறிவு. இது மனித சமத்துவத்திற்கான ஓர் அணுகுமுறையே. பெரியார் இயக்கத்தவர்கள் தாங்கள் கடைப்பிடித்திடும் பகுத்தறிவு அணுகுமுறையில், ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் என அடையாளம் காட்டப்படுவதே தந்தை பெரியாரின் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மனித சமத்துவத்தை அடையவே பல நாடுகளில் பலவகையில் மனிதநேயம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் முதலில் மனிதர்களாக வாழ முனைந்திட வேண்டும். மேலை நாடுகளில் அந்த மனிதநேயத்திற்கு எதிராக மதங்களின் ஆதிக்கம் இடைப்பட்ட காலங்களில் (Medieval age) இருந்து வந்தது. மதகுருமார்கள் அரசியல் ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தனர். மதத்தின் ஆதிக்கத்திலிருந்து அரசியலை மீட்டு எடுத்து, மனிதநேயம் வலியுறுத்தப்பட்டது. அதனை மதச்சார்பற்ற மனிதநேயம் (Secular Humanism) ஒன்றே மேலைநாடுகளில் சுட்டிக் காட்டப்படுகிறது.

4ஆவது பன்னாட்டு மாநாடு, 2025-ஆஸ்திரேலியா
ஆனால், நம் மண்ணில், மனிதருக்கு இழிவு நிலையை ஏற்படுத்திடுவதில் மதத்தின் பிடி மேலோங்கி இருந்தது; இன்றைக்கும் அந்த நிலை முற்றிலும் நீங்கியபாடில்லை. மனிதர் மீது சுமத்தப்பட்ட இழிவை நீக்கிட, இழிவு நிலையினை ஏற்படுத்தியது ‘கடவுள் கோட்பாடு’ என்ற நிலையில் அதனை துடைத்திடுவதும் சுயமரியாதை உணர்வு கொண்டு, பகுத்தறிவு அணுகுமுறையினை கைக்கொள்வதும் ஒவ்வொரு மனிதரின் இயல்பான கடமையாகும். அந்த இயல்பு நிலையினை கொண்டு வர தந்தை பெரியார் வலியுறுத்தியது சுயமரியாதை, மனிதநேயத்தையும்தான். அதை Self-Respective Humanism என்ற சொல்லாக்கத்தின் மூலம் தமிழறியாத மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் தமிழர் தலைவர் அவர்கள்.
1925இல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு கடந்து பீடு நடைபோடுகிறது. ‘சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தது ஏன்?’ என்ற கேள்விக்கு தந்தை பெரியார் அளித்த விளக்க உரையில் – இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ள சுயமரியாதை இயக்கம் சிறிய பரப்பளவு வெளியில் செயல்பட்டு வருகிறது. இயக்கத்தின் எதிர்காலச் செயல்பாடு இந்த அளவோடு நின்று விடாது. உலகம் முழுவதும் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள் பரவிட வேண்டும். சுயமரியாதையும், பகுத்தறிவும் மனிதருக்கு மட்டுமே சொந்தமானவை. மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பரவிட வேண்டிய, பயன்பெற வேண்டிய நிலையினைக் கொண்டது சுயமரியாதை இயக்கம். ஒவ்வொரு நாட்டிலும் மனிதர் சுயமரியாதை உணர்வை முழுமையாக உணர்ந்து கொண்டால், பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையை தங்களது வாழ்வில் கடைப்பிடித்தால் மனித சமுதாயத்தில் சமத்துவம் நிலவிடும் வாய்ப்பு ஏற்படும் என்ற பொருளில் விளக்கம் அளித்தார். தந்தை பெரியாரின் இந்த தொலைநோக்குப் பார்வையை நடைமுறையாக்குவதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ (Globalise Periyar Mission; Periyarize the Globe) என்ற முழக்கத்துடன் தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளுக்கு பயணித்து பரப்பி வருகிறார். பெரியாரை உலகமயமாக்கும் பணியின் ஒரு அணுகுமுறையாக, ‘பெரியார் பன்னாட்டு மாநாடு’ பல நாடுகளில் நடைபெறுவதற்கு அரும்பணியினை ஆற்றி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரியார் பன்னாட்டு மாநாட்டை நடத்திட அடிப்படைப் பணிகளை தொடங்கி அதன்படி ஒருங்கிணைத்து வருகிறார்.
இதுவரை நடைபெற்ற மாநாடுகள்
அனைத்து மாநாடுகளும் அமெரிக்கா-பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றன. பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு ஜெர்மன் நாட்டு கொலோன் நகரில் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று நாள்களும் (27, 28 & 29 ஜூலை 2017) கொலோன் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் முன்னெடுப்பில் ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது. உலகின் பல நாடுகளிலிருந்து பல்வேறு மனிதநேய அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள், அமைப்பைச் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.
2019-ஆம் ஆண்டில் அமெரிக்கா – மேரிலாந்து மாநிலத்தில் ஸ்பிரிங்பீஃல்ட்-ல் இரண்டாவது பன்னாட்டு மாநாடு 21 & 22 செப்டம்பர் 2019ல் நடைபெற்றது. மாநாட்டின் நோக்கமாக சுயமரியாதை, மனிதநேயம் ஆகியவற்றைக் கொண்டு நடந்தேறியது. பெரியார் பன்னாட்டு மய்யத்துடன், அமெரிக்க மனிதநேயர் அமைப்பு (American Humanist Association) இணைந்து மாநாட்டை நடத்தினர். மாநாட்டில் அமெரிக்க நாட்டு மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அறிஞர்கள், பல்வேறு வகையான ஊடகவியலாளர்கள் பங்கேற்று மாநாட்டைச் சிறப்பித்தனர்.
அடுத்த மாநாடு கரோனா பாதிப்பில் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில், இரண்டு ஆண்டு இடைவெளியில் நடத்தப்பட வேண்டிய மாநாடு உரிய காலத்தில் நடத்தப்பட முடியாமல் போயிற்று. 2022-ஆம் ஆண்டில் கனடா நாட்டு டொரண்டோ நகரில் மூன்றாவது பன்னாட்டு மாநாடு செப்டம்பர் 24 & 25 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டை கனடா மனிதநேயர் (Canada Humanist) மற்றும் உலகளாவிய அமைப்பான விசாரணை மய்யத்தின் (Centre For Inquiry) கனடா நாட்டு கிளை (Canada Chapter) ஆகியவற்றுடன் பெரியார் பன்னாட்டு மய்யமும் சேர்ந்து நடத்தின. இந்த மாநாட்டில், பெரியார் மனித நேயத்தை பரப்பிடும் பணிகளை ஆற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை Canada Humanist அமைப்பினர் வழங்கினர்.
2025ஆம் ஆண்டு நவம்பர் 1 & 2 ஆகிய நாள்களில் ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் நடந்து முடிந்தது 4ஆவது பன்னாட்டு மனிதநேய மாநாடு. இதனை ஒருங்கிணைத்து நடத்தியது ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும், அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பினரும். PATCA-எனும் சிந்தனை வட்டம் மனிதநேய மாநாட்டை நடத்திட விரும்பிய வேளையில் அதற்கான ஆலோசனைகளைப் பெற்றிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்திருந்தனர். திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் உடன் சென்றிருந்தார். PATCA அமைப்பினர் அங்குள்ள தலைவர்களை பல ஊர்களில் சந்தித்து, கலந்துரையாடி, பின்னர் சில நகரங்களில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதிலும் உரையாற்றிவிட்டு திரும்பினர். ஆசிரியர் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் கடந்த நான்கு மாதங்களாக காணொளி வாயிலாக PATCA அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு அனுபவப் படிப்பினை பகிர்ந்து ஒருங்கிணைத்தார். PATCA அமைப்பின் தலைவர் முனைவர் மகிழ்நன் அண்ணாமலை, துணைத்தலைவர் மருத்துவர் ஹாரூண், பொதுச்செயலாளர் சுமதி விஜயக்குமார், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அரங்க மூர்த்தி மற்றும் தோழர்கள் தாயுமானவர், பொன்ராஜ், சரவணன் என பலரின் கடுமையான உழைப்பு, மெல்போர்ன் மாநாடு சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது. ஒவ்வொரு பொறுப்பாளரும் தமக்கு அளிக்கப்பட்ட பணியினை செம்மைப்படுத்தி நடத்திக்காட்டியது அனைவரது பாராட்டுதலைப் பெற்றது.
– தொடரும்
