அய்தராபாத், நவ.18 சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு ‘புனித’ப் பயணம் மேற்கொண்ட இந்திய பய ணிகள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.
அய்தராபாத்திலிருந்து…
தெலங்கானா மாநிலம் அய்தராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், ஹஜ் பயணம் செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மொத்தம் 54 பேர், அய்தராபாத்தில் இருந்து கடந்த 9 ஆம் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சவுதியில் மதினாவுக்கு பய ணத்தைத் தொடங்கிய நிலையில், நேற்று (17.11.2025) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து செய்தி யாளர்களிடம் அய்தராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கூறியதாவது:
மெக்காவிலிருந்து அனைவரும் மதினாவுக்கு ஒரு சுற்றுலா பேருந்தில் செல்ல தீர்மானித்தனர். ஆனால், இதில் 4 பேர் மட்டும் மெக்காவிலேயே தங்கி விட்டனர்.
46 பேர்
பேருந்தில் இடம் இல்லாத கார ணத்தால் எஞ்சிய 4 பேர் காரில் மதினா வுக்குச் சாலை வழியாகச் சென்றனர். பேருந்தில் மட்டும் மொத்தம் 46 பேர் மதினாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். மதினாவுக்கு 25 கி.மீ முன்னதாக இவர்கள் சென்ற பேருந்து, எதிரே வந்த டீசல் டேங்கர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
10 பேர் சிறுவர்கள்
அப்போது, அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். டீசல் டேங்கர் மோதியதால், பேருந்து முழு வதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து வெளியே வர அவர்கள் முயற்சித்தும் பலனில்லை. இந்த கோர விபத்தில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் என 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அப்துல் ஷோயப் என்பவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளூர் மக்கள்
பேருந்தில் இருந்த தீயை உள்ளூர் மக்கள் அணைக்க முயன்றுள்ளனர். அதன்பின்னர், தீயணைப்பு படையினர், காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 45 பேர் உயிரி ழந்துள்ள விவரத்தை ஹஜ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அய்தராபாத் பஜார் காட் பகுதியை சேர்ந்த 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் கருநாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். மற்ற 44 பேரும் அய்தராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். மெக்காவில் தங்கிய 4 பேரும், பேருந்தில் இடம் இல்லாததால் இவர்களுக்கு முன்பு காரில் சென்ற 4 பேரும் உயிர் தப்பினர். சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
