‘எஸ்அய்ஆர்’ வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம் மேற்குவங்கத்தில் பட்டியல் தயாரிப்புப் பணி நிலைகுலைந்தது

கொல்கத்தா, நவ.17- தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்அய்ஆர்

நாடு முழுவதும் தமிழ் நாடு, மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்புப் பணி (எஸ்அய்ஆர்) தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்த பிறகு, டிஜிட்டல் முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குறுகிய காலக்கெடுவுக் குள் ஒரு அலுவலர் சுமார் 200 படிவங்களின் தரவுகளைப் பதிவேற்ற வேண்டியிருப்பதால், இது தங்களுக்கு நியாயமற்ற பணிச் சுமையை ஏற்படுத்துவதாகக் கூறி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்துள்ளனர். சிலிகுரி, ஹவுரா, பரக்பூர், பராசத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகளில் இருந்து அலுவலர்கள் வெளிநடப்பு செய்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாக இருப்பதால், தங்களது அன்றாடப் பள்ளிப் பணிகளுடன், தேர்தல் ஆணையத்தின் இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க முடியவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பணிச்சுமை

திடீரென டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யச் சொல்வதாகவும், அதற்குரிய முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும், போதுமான தரவு உள்ளீட்டாளர்கள் நிய மிக்கப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, வயது முதிர்ந்த பல அலுவலர்கள், இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் அலை பேசி செயலிகளைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து திடீர் உத்தரவுகள் பிறப்பிப்பது மூலம் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். எனவே, பணிச்சுமையைக் குறைக்க உள்ளூர் அளவில் தரவு உள்ளீட்டாளர்களை உட னடியாக நியமிக்க வேண்டும் என்றும், படிவங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடு பிடித்துள்ளது. தேவையான தரவு உள்ளீட்டாளர்களை மாநில அரசு நியமிக்கத் தவறி விட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்ட, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ, ‘மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணியை முடிப்பது சாத்தியமற்றது’ எனக் கூறி தேர்தல் ஆணையத்தின் காலக்கெடுவைக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே, அலுவலர் களின் பணிச்சுமை குறித்து தேர்தல் ஆணையத்திற்குத் தெரியப்படுத்தி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப் பினும், படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான டிசம்பர் 4ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க தேர்தல் ஆணையம் இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *